Wednesday, July 24, 2013

தமிழ்நாட்டில் வன்னியர் இருக்கின்றனர். தேவர் இருக்கின்றனர். நாடார் இருக்கின்றனர். ஆனால் தமிழர்கள் இல்லையே”- ஒரு தமிழ் அறிஞரின் குமுறல்

“தமிழ்நாட்டில் வன்னியர் இருக்கின்றனர். தேவர் இருக்கின்றனர். நாடார் இருக்கின்றனர். ஆனால் தமிழர்கள் இல்லையே”- ஒரு தமிழ் அறிஞரின் குமுறல்

(தமிழ்நாட்டில் இருக்கும் தோழர் ஒருவர் என்னிடம் கேட்ட விடயங்கள் குறித்து நான் அளித்த பதில் கீழே தந்துள்ளேன்.)

“தமிழ்நாட்டில் பார்ப்பான் இருக்கிறான். தேவர் இருக்கிறான். வன்னியன் இருக்கிறான். ஆனால் தமிழன் இல்லையே. இருந்திருந்தால் ஈழத்தமிழனுக்கு தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?” என ஒரு தமிழ் அறிஞர் (1994ல்) என்னை பொலிஸ் சித்திரவதை செய்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது என்னிடம் கூறினார். என் மீது உள்ள பாசத்தில் அவர் இப்படி கூறுகிறார் என அப்போது நான் நினைத்தேன். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது அவர் கூறியது உண்மைதான் என உணர்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் மாணவர்கள் தலைமையில் மக்கள் எல்லோரும் தமிழன் என்ற உணர்வில் ஈழத்தமிழருக்காய் வீரம் மிக்க போராட்டம் நடத்தினர். அதில் சிலர் தீக்குளித்தும் மாண்டுபோனார்கள். அதே தமிழ்நாட்டில் இன்று சாதியின் பேரால் இன்னொரு தமிழனை எரிப்பதை பார்க்கும்போது நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்.

இலங்கையிலும் அதுவும் யாழ்ப்பாணத்தில் சாதி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. ஆனால் புலிகள் இருந்த காலத்தில் அது “துப்பாக்கியின் நிழலில் உறங்கி கிடந்தது” என்று சாதீயப் போராட்டத்தை முன்னெடுத்த தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கூறினார். ஆம் அது உண்மைதான். சாதீ மீண்டும் தன் சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

நீங்கள் கேட்டுக்கொண்ட பிரபாகரன் திருமணத்தை பொறுத்தவரையில் அவருடைய மாமா( மனைவியின் தகப்பனார்) தன்னை இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று 1987களில் தன்னை சந்தித்த தாழ்த்தப்பட்ட மக்கள் குழுவிடம் பிரபாகரன் கூறியுள்ளதை நான் அறிந்திருக்கிறேன். எனவேதான் விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத அந்த மாமனார் இறந்தபோது அவருக்கு “மாமனிதர்” பட்டம் கொடுத்தபோது அனைவரும் ஆச்சரியத்துடன் விசனப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் சாதீய எதிர்ப்பு போராட்டத்தை தலைமையேற்று நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுட்டிக்காட்டிய மேற்கோளை இங்கு உங்களுக்கு தர விரும்புகிறேன். அது என்ன வெனில் “ஒருபோதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பனையைப் பெற்றதும் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும்.” (இது அமெரிக்க கறுப்பு இன பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்திமதி.) இந்த வழிகாட்டல் யாழ்ப்பாணத்தில் பயனளித்தது.

எனவே தேர்தல் பாதையை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளால் இந்த சாதீயப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்க முடியாது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிவாதிகளாலேயே இதை முன்னெடுக்க முடியும். அந்தளவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையே பயனளிக்கும் சிறந்த பாதை என நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment