Saturday, November 30, 2013

வெள்ளை வான் கதைகள்( White Van Stories )

வெள்ளை வான் கதைகள்( White Van Stories )

லீனா மணிமேகலையின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட “வெள்ளை வான் கதைகள்” ஆவணப்படம் இன்று (13.11.2013) மாலை 5 மணிக்கு மத்திய லண்டனில் உள்ள கலீல் லெக்சர் தியேட்டரில் திரையிடப்பட்டது.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை படம் திரையிடப்பட்டது. அதன் பின்னர் 7 மணி முதல் 9 மணிவரை உரையாடல் நடைபெற்றது. நேரமின்மை காரணமாக என்னால் உரையாடலில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.

இங்கிலாந்து பிரதமருடன் சென்ற சனல்-4 ஊடகவியலாளர் காலம் மக்ரே யாழ்ப்பாணம் செல்ல முடியவில்லை. இலங்கையில் இது வரை 16 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகத்திலேயே ஊடகவியலாளருக்கு பாதுகாப்பற்ற நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் முதல் இலங்கையின் எல்லா பாகங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்து ஆவணப்படம் தயாரித்திருக்கும் மணிமேகலையின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது. அவருக்கு எமது வாழ்த்துகள்.

இலங்கையில் பல வருடங்களாக அரசினால் பலர் காணாமல் போயுள்ளனர். புலிகளினால் பலர் காணாமல் போயுள்ளனர். முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினால் காணாமல் போயுள்ளனர். ஏன் ஜே.வி.பி யினால் கூட பலர் காணாமல் போயுள்ளதாக கதைகள் உண்டு. இவ்வாறு பல கதைகள் உள்ள நாட்டில் லீனா மணிமேகலை அரசினால் காணாமல் போயுள்ளோரின் கதையை “வெள்ளைவான் கதைகள்” என ஆவணப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசினால் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் காணாமல் போயுள்ளனர் என்பதை லீனா மணிமேகலை துணிச்சலுடன் காட்டியிருக்கிறார். இதில் வேடிக்ககை என்னவெனில் இன்று பலரின் காணாமல் போவதற்கு காரணமாக உள்ள மகிந்த ராஜபக்ச அவர்கள் 1990 களில் பல சிங்கள மக்களின் காணாமல் போவதை ஜ.நா வரை சென்று வாதாடியதையும் இவர் இப் படத்தில் காட்டியிருக்கிறார்.

காணாமல் போனவர்களுக்காக போராடி காணாமல் போயிருக்கும் லலித், குகன் போன்றவர்கள் பற்றி லீனா ஏன் தனது படத்தில் குறிப்பிட மறந்தார் என்று புரியவில்லை? லலித் மற்றும் குகனிற்காக பல சிங்கள மக்களும் வீதியில் இறங்கி போராடியதை நாம் மறக்க முடியாது. அதனால் அவர்கள் எங்கு இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அந்த சிங்கள் மக்கள் அறிந்து அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த இருவருக்காக அவர்களுடைய தோழர்கள் அவர்களுடைய வீட்டை சிரமதான அடிப்படையில் திருத்தி கொடுத்தும் இருக்கிறார்கள்.

இரண்டு மணி நேர இந்த ஆவணப் படத்தை பார்த்த பின்பு தங்கள் தந்தையர், கணவன்மார்கள், பிள்ளைகள் ஆகியோரைக் காணாது தவிக்கும் அந்த அப்பாவிகளுக்கு ஒரு பதிலை தெரிவிக்காது இந்த அரசு ஏன் இழுத்தடிக்கிறது என்ற ஆத்திரமே மேலோங்கிறது. நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? மனித உரிமை அமைப்புகள் என்ன செய்கின்றன? ஜ.நா மன்றம் என்ன செய்கிறது? யுத்தம் முடிந்து 4 வருடமாகியும் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட ஒரு அரசால் தெரிவிக்கவில்லை எனில் அந்த மக்கள விரோத அரசை இந்த உலகம் இன்னும் அனுமதித்துக் கொண்டு இருக்கிறது என்பதை எண்ணி எரிச்சலடைகிறோம். இது லீனா மணிமேகலை யின் வெற்றி என்பதில் சந்தேக மில்லை.

படத்தில் ஒரு அவசரத் தன்மை தெரிகிறது. கொஞ்சம் பொறுமையோடு செய்திருந்தால் ஒரு சிறந்த ஆவணப்படமாக வந்திருக்கும். பல்லாயிரம் கதைகளை ஒரு இரு மணி நேரப்படத்தில் முழுமையாக காட்ட முடியாது என்பதை உணர்கிறோம். இருப்பினும் இன்றைய நிலையில் இலங்கை அரசை தோலுரித்து காட்டியிருக்கும் லீனா வின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

லீனா ஏற்கனவே மீனவர் பிரச்சனை பற்றி “செங்கடல்” என்னும் படம் எடுத்திருக்கிறார். தற்போது காணாமல் போனோர் கதைகள் பற்றிய “வெள்ளை வான் கதைகள்” எடுத்திருக்கிறார். அவர் அடுத்து தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இருக்கும் “சிறப்பு அகதிகள் முகாம்” பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள் சார்பாக தாழ்மையுடன் கெட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment