Wednesday, December 30, 2015

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?
உலகில் பல இடங்களில் கடல்நீர் குடிநீராக மாற்றப்படுகிறது. ஆனால் அங்கு எல்லாம் கடற்தொழில் பாதிக்கப்படுவதாக யாரும் போராட்டம் நடத்தவில்லை.
இந் நிலையில் மருதங்கேணியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் குடி நீருக்கு பாரிய தட்டுப்பபாடு எற்பட்டு வருகிறது.
யாழ் குடாநாட்டில் மழை நீரை சேமிக்க பாரிய குளங்கள் இல்லை.
இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டுவர எடுத்த முயற்சியும் சிறீதரன் எம்.பி யின் சுயநல அரசியலால் தடுக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தாவிடில் என்னதான் தீர்வு?
யாருக்காவது இது குறித்து உண்;மையில் அக்கறை இருக்கிறதா?
மழை நீரோ அல்லது குளத்து நீரோ இல்லாத இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.
எனெனில் இத் திட்டம் குளத்து நீரை கொண்டு வரும் திட்டத்தைவிட அதிக செலவானது.
எனவே மகாவலி நீரை இரணைமடுவிற்கு கொண்டு வருவதன் மூலம் கிளிநொச்சி விவசாயகளுக்கும் தேவையான நீரை கொடுக்கலாம். யாழ் குடா நாட்டிற்கும் குடி நீராக எடுத்துச் செல்லலாம்.
இதற்கு ஆரம்பத்தில் அதிக பணம் தேவைப்படும். ஆனால் இதுவே செலவு குறைந்த சிறந்த பல பயன்கள் கொண்ட திட்டமாகும்.
எனவே அரசியல் தலைவர்கள் தமது சுயநல நோக்கத்தை கைவிட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை அமுல்படுத்த முனைய வேண்டும்.

ஒரு நிதியமைச்சரின் கணக்கு இது!

•ஒரு நிதியமைச்சரின் கணக்கு இது!
25000 ரூபா பெறுமதியான லாப்டாப் ஜ நாள் ஒன்றுக்கு 16000 ரூபா வாடகை
5000 ரூபா பெறுமதியான பிரிண்டரை நாள் ஒன்றுக்கு 3000 ருபா வாடகை
இப்படி கணக்கு காட்டுபவர் இந்தியாவின் நிதியமைச்சர்.
ஒரு நிதியமைச்சரே இப்படி கணக்கு காட்டினால் மற்றவர்கள் எப்படி காட்டுவார்கள்?
இதுதான் மோடி அவர்களின் ஊழல் அற்ற ஆட்சியா?
இதுதான் இந்தியாவின் அபிவிருத்தி லட்சணமா?
சீ, வெட்கம்!

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்

• டிசெம்பர் 26, தோழர் மாசேதுங் பிறந்தநாள்
மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2013)
மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.
தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.
ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள்.
தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.
மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.
சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.
சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின் நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.
இலங்கையில் மாசேதுங் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவர் தோழர் சணமுகதாசன் அவர்களும் அவரது தலைமையில் இயங்கிய கம்யுனிஸ்ட் கட்சியுமே.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்வைத்தது மகத்தான மாசேதுங் சிந்தனைகளே.
தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்யவும் பெரும் பங்கு வகித்தது மாசேதுங் சிந்தனைகளே.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை இலங்கைஅரசு “பயங்கரவாதிகள்” என்றழைத்தது. தமிழர்விடுதலைக்கூட்டணி “பொடியன்கள்” என்றழைத்தது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவரான தோழர் சண்முகதாசனே தமிழ் இளைஞர்களை முதன் முதலாக “போராளிகள்” என்று அழைத்தவர்.
அதுமட்டுமல்ல அவர் இதை ஜந்து கட்சி கூட்டத்தில் சிங்கள தலைவர்கள் மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
யாழ்குடாநாட்டில் இருந்த சாதீய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் மாவோயிச சிந்தனைவாதிகளே.
இலங்கையில் மாவோயிஸ்ட்டுகள் எதுவும் செய்யவில்லை என்று இன்று பேசுவோர் இவ் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
இதுவே புரட்சியாளர்களின் வரலாற்று கடமையாகும்!

தமக்கான சம்பள உயர்வை ஒற்றுமையாக பெற்றுக்கொள்ளும் எம்.பி மார்கள் மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட மறுக்கிறார்களே!

•தமக்கான சம்பள உயர்வை ஒற்றுமையாக பெற்றுக்கொள்ளும் எம்.பி மார்கள்
மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட மறுக்கிறார்களே!
இதோ ஒரு எம்.பி யின் சம்பள விபரம்,
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00
போக்குவரத்துக் கொடுப்பனவு – ரூ. 10000.00
உணவு, குடிபானக் கொடுப்பனவு – ரூ. 1000.00
தொலைபேசிக் கட்டணம் – ரூ. 2000.00
பாராளுமன்றக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு -ரூ. 500.00
இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா கிடைக்கப் பெறுகின்றது.
ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின் படி மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக கொடுக்கப்படும் மாதாந்த சம்பளம், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு என்பன தவிர்த்தே இந்த வருகைக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, பாராளுமன்ற உணவகத்தில் 80 வகையான உணவுகள் தினமும் சமைக்கப்படுவதாகவும் சுமார் 500,000 ரூபாய்கள் தினமும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 400 ரூபாய்கள் பெறுமதியான ஒருவேளை உணவுக்கு, உறுப்பினர்களிடமிருந்து வெறும் 12.50 ரூபாய்களே அறவிடப்படுகிறது.
அமர்வுகள் இடம்பெறும் தினத்தில் சுமார் 200,000ரூபா பெறுமதியான உணவு விரயமாகிறதாம். வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபாய்கள் உணவகத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்றதாம்.
கொழும்பில் இலவச விடுதி, தீர்வையற்ற வாகனம் (சுமார் ஒன்றரைக் கோடி பெறுமதியான), எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, அலைபேசி கொடுப்பனவுகள் எல்லாம் கொடுத்து இவர்களுக்கு அமர்வுகளுக்கான கொடுப்பனவையும் அதிகரிப்பது மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சலுகைகளில் சரி பாதி மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என அரசியலமைப்பில் இருப்பதனால் மாகாண சபைகளிற்கான அமையச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எமது எம்.பி மார்கள் யாருடைய நலனுக்காக போராடுகிறார்கள் என்பது இப்பொது புரிகிறதா?

•வைக்கோல் பட்டரை நாய்கள் தானும் படுக்காது. மற்றவர்களையும் படுக்க விடாது!

•வைக்கோல் பட்டரை நாய்கள் தானும் படுக்காது.
மற்றவர்களையும் படுக்க விடாது!
தமிழ் மக்கள் பேரவையினர் தமிழீழம் என்னும் தனிநாடு கோரவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் ஆயுதப் போராட்டம் செய்வதாக கூறவில்லை.
தமிழ் மக்கள் பேரவையினர் இந்தியா எதிரி என்று கூறவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் அமெரிக்கா தேவையில்லை என்று கூறவில்லை
தமிழ் மக்கள் பேரவையினர் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் பேரவையினர் தாம் ஒரு அரசியல் அமைப்பே இல்லை என்கின்றனர்.
இருந்தாலும்கூட அதை ஏற்றுக்;கொள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் அடம் பிடிக்கிறார்.
தமிழ்தேசிய கூட்மைப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக உண்மையில் போராடியிருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் இந்த அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு மீள் குடியேற்றத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இப்படி ஒரு அமைப்பு தோன்றியிருக்காதே!
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து உண்மையாகவே உழைத்திருந்தால் இப்படி ஓரு அமைப்பு தோன்றியிருக்க முடியாதே!
தமிழ்தேசிய கூட்டமைப்பு தானும் போராடாது. மற்றவாகளையும் போராட ஒருபோதும் விடாது.
மொத்தத்தில் இவர்கள் வைக்கோல் பட்டரை நாய்களை விட மோசமானவர்கள்.
தமிழ் இனத்தின் மிகப் பெரும் சாபக்கேடு இவர்கள்.

•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்

•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்
•சில தலைவர்கள் தமிழ் மக்களுக்காக தமது சொத்தை இழந்துள்ளார்கள்
•ஆனால் தலைவர் சம்பந்தர் அய்யா மட்டும் தமிழ் மக்களின் சொத்தை திருட முனைகிறாரா?
திருகோணமலையில் லிங்கா நகர் என்னும் இடம் 6 ஏக்கர் நிலம் கொண்டது. இதில் 56 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இந்த இடத்தை ஏற்கனவே வாழ்ந்த சிங்கள மக்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.
இப்போது திடீரென சம்பந்தர் அய்யா இது தனக்கு சொந்தமான இடமென்றும் இதற்கு ஒரு பேர்ச் 25 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 2 கோடியே 40 லட்சம் ருபா தனக்கு தரவேண்டும் என மிரட்டுகிறார்.
இது ரசூல்பாய் என்னும் முஸ்லிம்க்கு சொந்தமான நிலமாகும். தற்போது அந்த குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை. எனவே சம்பந்தர் அய்யா வழக்கம்போல் கள்ள உறுதி முடித்து வைத்துக்கொண்டு அந்த அப்பாவி தமிழ்மக்களை மிரட்டுவதாக சந்தேகம் எழுந்தள்ளது.
சம்பந்தர் அய்யா எற்கனவே ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு இப்படி அப்பாவி மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அப்படியிருக்க தமிழ் மக்களின் பெரிய தலைவராக இருப்பவர் இப்படி செய்யலாமா?
வேறு யாராவது இப்படி தமிழ் மக்களை ஏமாற்றி சம்பாதிக்க முனையும்போது அதை தடுத்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய தலைவரான சம்பந்தர் அய்யாவே தமிழ் மக்களை இப்படி ஏமாற்றி பிழைக்க முனைந்தால் அந்த மக்கள் இனி யாரிடம் சென்று முறையிட முடியும்?
சம்பந்தர் அய்யா ஒரு வருடத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவது இருக்கட்டும். முதலில் இந்த லிங்கா நகர் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்கட்டும்.
குறிப்பு- சம்பந்தர் அய்யா லண்டன் வந்தபோது லிங்கா நகர் மக்கள் எழுதிய கடிதம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் நல்ல தீர்வு வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை எதுவுமே செய்யவில்லை.

இயேசு சீக்கிரம் வருகிறார்!

•இயேசு சீக்கிரம் வருகிறார்!
குழந்தை யேசு பாலன் பிறக்கப் போகிறார்!!
இயேசு சீக்கிரம் வருகிறார் என்கிறார்கள்.
ஆனால் 2000 வருடமாகியும் வரவில்லையே?
பரவாயில்லை. அவர் விரும்பும்போது வரட்டும்.
ஆனால் ஒன்று,
தயவு செய்து ஈழத் தமிழராக மட்டும் பிறந்துவிட வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள்.
ஒருவேளை ஈழத் தமிழராக பிறந்தாலும் எக் காரணம் கொண்டும் அகதியாக தமிழ்நாட்டிற்கு சென்றுவிட வேண்டாம் என்பதையாவது தெரிவித்துவிடுங்கள்.
ஏனெனில் இம்முறை சிலுவையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அவர் அடைக்கப்படலாம்.
சிலுவையில் அறைந்தால் 3ம் நாள் உயிர்த்தெழுந்து விடலாம்.
ஆனால் சிறப்புமுகாமில் அடைத்தால் 30 வருடமானாலும் விடுதலை பெற முடியாது.
வவுனியாவில் பட்டினியால் 3 குழந்தைகளை தாயே கிணற்றில் வீசிக் கொல்லும் அவலம்.
சிரியா நாட்டு குழந்தைகள் அகதியாக ஜரோப்பிய கடற்கரையில் இறக்கும் அவலம்.
இதையெல்லாம் கவனிக்காது நாம் இயேசு பாலன் பிறந்தான் என்று வாழ்த்து சொல்லி மகிழ்கிறோம்.
என்ன மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம்?
குறிப்பு-
(1)இயேசு வவுனியாவில் பிறந்தார். ஆனால் மகிந்தவின் "வடக்கின் வசந்தம்" அவரை கிணற்றில் வீசிக் கொன்று விட்டது. பாப்பரசர் மகிந்தவின் ரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கி நன்றி தெரிவித்தார்.
(2) இயேசு மீண்டும் சிரியாவில் பிறந்தார். அவரை அமெரிக்க வல்லரசு கடற்கரையிலேயே கொன்றுவிட்டது. பாப்பரசர் ஒபாமாவின் கைகளை குலுக்கி நன்றி தெரிவித்தார்.
(3)இனிமேல் இயேசுவை பிறக்கவே விடுவதில்லை என்று பாப்பரசர் முடிவு செய்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன