Wednesday, December 30, 2015

•வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!

•வீழ்ச்சியடையப்போகும் "லைக்கா" சாம்ராஜ்யம்!
ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைப்பது எந்தளவு புத்திசாலித்தனம் இல்லையோ அதேபோல் ஒரு சிறந்த முதலீட்டாளர் தனது அனைத்து முதலையும் ஒரே வியாபாரத்தில் முடக்க மாட்டார்.
அந்த வகையில் "லைக்கா" நிறுவனம் தனது முதலீடுகளை பலவகையான வியாபாரங்களில் முதலிடுவது ஒரு சிறந்த நிதி முகாமைத்துவ முடிவுதான் என்றாலும் இந்திய சினிமாவில் அவர்கள் முதலிடுவது அவர்களின் வீழ்ச்சிக்கான வழி எனக் கருதப்படுகிறது.
இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு ஈழத் தமிழனும் ஜெயித்ததில்லை. இனியும் ஜெயிக்க அவர்கள் இலகுவில் விட்டுவிடப்போவதில்லை.
இந்நிலையில் எந்திரன்-2ல் மிகப்பெரிய முதலீட்டை "லைக்கா" நிறுவனம் செய்ய முன்வந்திருப்பது அதன் வீழ்சிக்கான அறிகுறியாகவே இருக்கிறது.
பெற்றோல் நிலையங்களில் தினசரி 12 மணி நேரம் தும்படித்தும் மாதாந்த வீட்டு மோகேஜ்யையே கட்ட முடியாமல் திண்டாடும் எம்மவர்கள் மத்தியில் வன்னியில் இருந்து வெறும் கையுடன் வந்த "லைக்கா" முதலாளி மட்டும் எப்படி பல மில்லியனுக்கு அதிபதியானார் ?
மில்லியன் டாலர் கேள்வி இது?
வருமானம் - செலவு = இலாபம் என்று அக்கவுண்டன்மார் கூறுகிறார்கள். ஆனால் "லைக்கா" போன்று டெலிபோன்காட் விற்ற பலர் நட்டத்தில் இருக்கும்போது "லைக்கா" மட்டும் எப்படி பல மில்லியன் லாபம் பெற முடிந்தது?
"லைக்கா" லாபம் எப்படி பெறுகிறது என்பதைவிட அது தனது லாபத்தை மேலும் பெருக்க செய்யும் அரசியல் விளம்பரம் ஆச்சரியத்தை அல்ல அருவருப்பையே கொடுக்கிறது.
இந்திய பிரதமர் மோடி உரையாற்றும்போது பிரிட்டன் பிரதமருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக பல மில்லியன் அன்பளிப்பு கொடுத்து ஸ்பொன்சர்களில் ஒருவராக "லைக்கா" இடம்பெற்றது.
ஒருபுறம் ஒரு தமிழன் பிரிட்டன் பிரதமருடன் கைகுலுக்கறார் என்று லைக்காவுக்கு பெருமை பேசுகிறார்கள். இன்னொரு புறம் இது மகிந்தராஜபக்சவின் பணம் என கொச்சையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் யாருமே லைக்காவின் லாபத்திற்கான சுரண்டல் குறித்து பார்க்க மறுக்கிறார்கள்.
எது எப்படியோ லைக்கா என்னும் யானை தன் தலையில் தானே மண் அள்ளிப்போடுகிறது.

கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!
இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள்.
புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
விபச்சார தொழில் குறிப்பாக சிறுவர் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. இதுவே இலங்கை அரசின் வெட்கம் கெட்ட சாதனையாக உள்ளது.
ஆனால் இலங்கை அரசோ யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை ராணுவத்திற்கு ஒதுக்குகிறது.
இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் தமது தேவைக்காகப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
விவசாயிகள் ஊர்வலமாக வந்து பிரதமருக்கு மனுக்கொடுக்க முனைந்தள்ளனர். ஆனால் பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
விவசாயிகள் தமது வறுமை நிலையை உணர்த்தும் வண்ணம் கோமணத்துடன் தலைநகரை முற்றுகை இட்டுள்ளனர். ஆனால் அது குறித்து பிரதமர் எந்த வெட்கமும் அடையவில்லை.
மீண்டும் அனைத்து விவசாயிகளுடன் வந்து பாராளுமன்றத்தை அல்லது பிரதமர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினால் எந்தவொரு அரசும் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது. எனவே இதை உணர்ந்த அரசு மீண்டும் புலிகளை உருவாக்க முனையும்.
ஆனால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் போராட்டத்தை இனி யாராலும் தடுக்க முடியாது.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்
இன்று மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

• ஆராரோ ஆரிவரோ ! தூங்கு மகனே நல்லாய் தூங்கு!!

• ஆராரோ ஆரிவரோ !
தூங்கு மகனே நல்லாய் தூங்கு!!
இந்த தள்ளாத வயதிலும் பதவியை விடாது பிடித்துக்கொண்டு
மக்களுக்காக(!) உழைத்த களைப்பில் தூங்கும் எமது தலைவர்கள்.
சிறையில் உள்ளவர்களை விடுவிக்க நடத்திய போராட்டக் களைப்பு,
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடத்திய போராட்டக் களைப்பு,
காணிகளை மீட்க நடத்திய போராட்டக் களைப்பு,
எனவே, பாவம் அவர்கள் சிறிது உறங்கட்டும்
தொந்தரவு செய்யாதீர்கள். விட்டு விடுங்கள்.
என்ன பு--க்கு இவர்களை தெரிவு செய்தோம் என
சிலர் பீப் சாங் பாணியில் திட்டுகிறார்கள்.
அப்படி தரக் குறைவாக திட்டாதீர்கள்.
என்ன இருந்தாலும் அவர்கள் எமது தலைவர்கள் அல்லவா!
மீண்டும் மீண்டும் சம்பள உயர்வு
போதாக்குறைக்கு சொகுசு வாகனம்.
வார இறுதியில் இந்தியன் தூதரலாயத்தில் தண்ணி பார்ட்டி
ஏன் இவர்கள் பதவியை விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?
சிறிய உறக்கம் அல்ல நீண்ட உறக்கம் கொள்ளட்டும் (செத்து தொலையட்டும்) என சிலர் விரும்பலாம். ஆனால் இதை விட்டால் அவர்கள் வேறு என்ன வேலைக்கு போக முடியும்?
தலைவர்கள் தூங்கலாம். ஆனால் மக்கள் தூங்கவில்லை. விழித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை அடுத்த தோர்தலில் இவர்களுக்கு காட்டுவார்கள். இது உறுதி.

தமிழ் மக்களின் போராட்டம் "சுமந்திரன்" களை மட்டுமல்ல "லண்டன் பாபா" க்களையும் கடந்து போகும்!

•தமிழ் மக்களின் போராட்டம் "சுமந்திரன்" களை மட்டுமல்ல "லண்டன் பாபா" க்களையும் கடந்து போகும்!
கடந்த மாதம் லண்டனில் மாவீரர் உரையாற்றிய லண்டன் பாபா இந்த மாதம் இலங்கை சென்று பிரதமர் ரணிலுடன் கை குலுக்கியுள்ளார். இந்த படத்தை அனுப்பி எனது கருத்தை தெரிவிக்கும்படி ஒரு அன்பர் கேட்டிருக்கிறார்.
என்னத்தை சொல்ல? இதைப் போல இன்னும் பலர் விரைவில் கை குலுக்கும் போட்டோக்கள் வரும். அதெயெல்லாம் தாங்கும் சக்தி இந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதைத் தவிர.
லண்டன் பாபாவை எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும். 1983 ல் இளைஞர்கள் எல்லாம் இயக்கங்களுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் தனது வீட்டில் கலர் பல்ப்புகள் போட்டு ஆங்கிலப் பாடலுக்கு டிஸ்கோ ஆடியதை ரோட்டில் இருந்து வேடிக்கை பார்த்த இளைஞர்களில் நானும் ஒருவன்.
அப்போது இவரது செயல்கள் எமக்கு வேடிக்கையாகவும் பையித்தியக்காரத்தனமாக இருந்தது. ஆனால் நாங்கள் யாருமே இவர் 2015ல் தமிழ் மக்களை பையித்தியமாக்குவார் என்று உண்மையில் எதிர்பார்க்கவேயில்லை.
அதேபோல் லண்டன் வந்து அவர் ரஜனி பாடலுக்கு ஆடி "லண்டன் பாபா" பட்டத்தையும் விரும்பி சூட்டிக கொண்டதும்;கூட எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் அவர் திடீரென புலிகளின் மேடையில் தோன்றி ஆரம்பகால போராட்ட வரலாறுகள குறித்து முழங்கியதைத்தான் என்னால் இன்றும்கூட தாங்க முடியாமல் இருக்கிறது.
இவருடைய அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பிரபாகரன். இந்த பிரபாகரன் நெல்லியடி சண்டியர்களில் ஒருவர். 1978ல் கோஸ்டி சண்டைக்கு துப்பாக்கியால் சுட்டு பிரபலமானவர். பின்னர் லண்டன் சென்றுவிட்டார். இந்நிலையில் 1984ல் ஊருக்கு வர விரும்பி வேதாரணியத்தில் எங்களிடம் உதவி கேட்டார். நாங்களும் அவர் மீது இரக்கப்பட்டு எமது வள்ளத்தில் ஏற்றி வந்தோம்.
எமது வள்ளம் நாகர்கோயில் கடற்கரையை அண்மித்த போது திடீரென இலங்கை கடற்படை சுடத் தொடங்கி விட்டது. இதனை எதிர்பாராத நாங்கள் ஒருவாறு குதித்து தப்பி விட்டோம். ஆனால் எமது வள்ளமும் அதில் இருந்த பொருட்களையம் கடற்படை கைப்பற்றிவிட்டது.
அதில் எம்முடன் வந்த பிரபாகரன் அடையாள அட்டையும் சிக்கிவிட்டது. உடனே இலங்கை அரசு புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவருடன் கூட வந்த 17 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக வானொலியில் அறிவித்தது.
இதுதான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முதலாவது மரண விபரமாகும்

இவர்கள் கலாச்சாரக் காவலர்களா? அல்லது இணையத்தள மாபியாக்களா?

•இவர்கள் கலாச்சாரக் காவலர்களா?
அல்லது இணையத்தள மாபியாக்களா?
ஒரு விபச்சாரியை கல் எறிந்து கொல்ல முனைந்தபோது "உங்களில் யார் முதுகில் அழுக்கு இல்லையோ, அவர் முதலில் கல் எறியுங்கள்" என்று கடவள் இயேசு கூறினாராம்.
ஆனால் இன்றும்கூட ஒரு பக்கத்தில் புளு+பிலிம் வெப்சைட்டுகளை நடத்திக்கொண்டு மறு புறத்தில் விபச்சாரத்திற்கு எதிரான கலாச்சாரக் காவலர்களாக சிலர் காட்டிக் கொள்வது தொடர்கிறது.
இது என்ன நியாயம் என்று கேட்டால், கேட்டவரும் அவளும் படுத்தாள் என்று எழுதுவோம் என மிரட்டுகிறார்கள்.
ஆண்களே பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளுகிறார்கள்.
ஆண்களே அவர்கள் மீது விபச்சாரி பட்டம் சூட்டுகிறார்கள்.
ஆண்களே அவர்களை விபச்சாரி என்று தண்டிக்கிறார்கள்.
என்ன கொடுமை இது?
ஒரு பெண்ணிற்கு நல்ல வேலையையோ அல்லது வாழ்க்கையையோ கொடுக்க முடியாத சமூகத்திற்கு, அப் பெண்ணை விபச்சாரி என்று கூறி தண்டிக்க என்ன தகுதி இருக்கு?
அன்று, விபச்சாரி என்று குற்றம்சாட்டி இயக்கங்களால்; பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இன்று சில இணைய மாபியாக்கள் பெண்கள் மீது விபச்சாரம் என்று பட்டம் சூட்டி மிரட்டப்படுகின்றார்கள்.
எப்போதும் பெண்களுக்குதான் தண்டனையா?
இதுவரை விபச்சார வழக்கில் எத்தனை அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?
இதுவரை எத்தனை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? அல்லது இதுவரை இவர்களைப் பற்றி எத்தனை இணையத்தளங்கள் எழதியிருக்கின்றன?
இந்தியாவில் ஒரு சிறுவன் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக சட்டத்தையே மாற்றும்படி குரல் எழுப்புகிறார்கள். ஆனால் அதே இந்தியாவில் பீகாரில் ஒரு விதவை சமைத்த சாப்பாட்டை உண்ண முடியாது என மாணவரும் பெற்றோரும் கூறுகின்றனர். இந்த கொடுமைக்கு எதிராக எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள்?
பெண்களுக்கு சமவுரிமை கிடைக்க வேண்டும்.
பெண்ணடிமை நீங்காத வரையில்
எந்த சமூகமும் முன்னேறிவிட முடியாது.

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?

கடல் நீரை குடிநீராக மாற்றுவதால் கடற் தொழில் பாதிக்குமா?
உலகில் பல இடங்களில் கடல்நீர் குடிநீராக மாற்றப்படுகிறது. ஆனால் அங்கு எல்லாம் கடற்தொழில் பாதிக்கப்படுவதாக யாரும் போராட்டம் நடத்தவில்லை.
இந் நிலையில் மருதங்கேணியில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் குடி நீருக்கு பாரிய தட்டுப்பபாடு எற்பட்டு வருகிறது.
யாழ் குடாநாட்டில் மழை நீரை சேமிக்க பாரிய குளங்கள் இல்லை.
இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டுவர எடுத்த முயற்சியும் சிறீதரன் எம்.பி யின் சுயநல அரசியலால் தடுக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தாவிடில் என்னதான் தீர்வு?
யாருக்காவது இது குறித்து உண்;மையில் அக்கறை இருக்கிறதா?
மழை நீரோ அல்லது குளத்து நீரோ இல்லாத இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.
எனெனில் இத் திட்டம் குளத்து நீரை கொண்டு வரும் திட்டத்தைவிட அதிக செலவானது.
எனவே மகாவலி நீரை இரணைமடுவிற்கு கொண்டு வருவதன் மூலம் கிளிநொச்சி விவசாயகளுக்கும் தேவையான நீரை கொடுக்கலாம். யாழ் குடா நாட்டிற்கும் குடி நீராக எடுத்துச் செல்லலாம்.
இதற்கு ஆரம்பத்தில் அதிக பணம் தேவைப்படும். ஆனால் இதுவே செலவு குறைந்த சிறந்த பல பயன்கள் கொண்ட திட்டமாகும்.
எனவே அரசியல் தலைவர்கள் தமது சுயநல நோக்கத்தை கைவிட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை அமுல்படுத்த முனைய வேண்டும்.