Wednesday, December 30, 2015

•"சின்ன கதிர்காமர்" மன்னிக்கவும் சுமந்திரன் அவர்களுடன் ஒரு உரையாடல்!

•"சின்ன கதிர்காமர்" மன்னிக்கவும் சுமந்திரன் அவர்களுடன் ஒரு உரையாடல்!
கேள்வி- உங்களை சின்ன கதிர்காமர் என்று அழைப்பது பற்றி..?
சுமந்திரன்- நான் நீலன் மற்றும் கதிர்காமர் ஆகியோரைவிட விண்ணன்( கெட்டிக்காரன்) எனவே என்னை சின்ன கதிர்காமர் என்று அழைக்க முடியாது.
கேள்வி- இன்றைய அரசு நல்லாட்சி செய்கிறது என்று எப்படி கூறுகிறீர்கள்?
சுமந்திரன்- மகிந்த 12000 சிறைக் கைதிகளை விடுதலை செய்தார். ஆனால் இந்த அரசு 700 பேரைக்கூட விடமுடியாது என்று கூறுகிறதே. அப்படியென்றால் இது நல்லாட்சிதானே!
கேள்வி- நவம்பர் 7ம் திகதி முன்னர் அனைத்து சிறைக் கைதிகளையும் விடுதலை செய்வதாக கூறிய அரசு அதன்படி விடுதலை செய்யவில்லையே?
சுமந்திரன்- ஆம் உறுதியளித்தபடி அரசு விடுதலை செய்யவில்லைதான். ஆனால் அதற்காக அரசு மீது நம்பிக்கை இழக்க தேவையில்லை. ஏனெனில் அரசு தமிழர்களுக்கு தீர்வு தரவுள்ளது.
கேள்வி- சிறைக் கைதிகளையே விடுதலை செய்யாத அரசு இனப் பிரச்சனைக்கு தீர்வு தரும் என எப்படி நம்புவது?
சுமந்திரன்- சிறைக் கைதிகள் விடுதலை ஒரு சின்ன விடயம். தீர்வு என்ற பெரிய விடயத்திற்காக சின்ன விடயங்களை நாம் கவனிக்காது விட வேண்டும்.
கேள்வி- சிறைக் கைதிகள் விடுதலை என்ற சின்ன விடயத்தையே செய்யாத அரசு எப்படி தீர்வு என்ற பெரிய விடயத்தை செய்யும் என நம்புவது?
சுமந்திரன்- நாம் நம்ப வேண்டும் என்று கூறுகிறேன். இப்ப புரிகிறதா நான் கதிர்காமரை விட விண்ணன் என்று.
கேள்வி- சம்பந்தர் அய்யா ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவதாக கூறினாரே?
சுமந்திரன்- ஆம். அதனால்தான் விக்கினேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூறுகிறேன்.
குறிப்பு- சுமந்திரன் கதிர்காமரை விட தான் விண்ணன் என்கிறார். எனவே அவரிடம் தீர்வுக்கும் விக்கினேஸ்வரன் மீதான நடவடிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக்கூடாது அல்லவா!

•தமிழ் மக்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் தீர்வு கிடைக்குமா?

•தமிழ் மக்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் தீர்வு கிடைக்குமா?
கடந்த யூன் மாதம் தேர்தலின் போது ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்படும் என சம்பந்தர் அய்யா கூறினார்.
அதன்படி ஆறு மாதம் கடந்துவிட்டது. இன்னும் ஆறுமாதம் இருக்கின்றது.
ஆறு மாதத்திற்குள் அதாவது இன்னும் 180 நாட்களில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
சம்பந்தர் அய்யா பெரிய சாணக்கியன். முதுபெரும் ராஜதந்திரி. எனவே கூறயபடி இன்னும் ஆறு மாதத்திற்குள் தீர்வு பெற்று தந்துவிடுவார் என்று அவரின் விசுவாசிகள் கூறுகின்றனர்.
சம்பந்தர் அய்யாவுக்கு எம்.பி பதவி கிடைத்தது. அத்தோடு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி நேற்று திரிகோணமலை மாவட்ட அபிவிருத்தி உதவி சேர்மன் பதவியும் கிடைத்துள்ளது.
தமிழ்மக்களுக்கு தீர்வு கிடைக்குதோ இல்லையோ ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு பதவிகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன.
ஒருவேளை தனக்கு பதிவி பெறுவதைத்தான் தமிழ்மக்களுக்கு தீர்வு பெறுவதாக சம்பந்தர் அய்யா நினைத்திருக்கிறாரோ தெரியவில்லை.
சம்பந்தர் அய்யாவின் விசுவாசிகளே!
தான் கூறியபடி ஒரு வருடத்திற்கள் தீர்வு பெற்று தராவிடின் சம்பந்தர் அய்யா உயிரை விடாவிட்டாலும் பரவாயில்லை பதவிகளையாவது துறப்பாரா?
ஏனென்றால் அவரை மானஸ்தன் என்றும் கவரிமான் ஜாதி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா!

•மகாத்மா காந்தியின் கண்ணீர்!

•மகாத்மா காந்தியின் கண்ணீர்!
எந்தவொரு சூழ்நிலையிலும் மருத்தவமனைகள் மீது குண்டு வீசக்கூடாது என்பது ஒரு போர் விதி.
உலகின் மிகப் பெரிய கொடுமைகாரன் கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் குண்டு வீசியது கிடையாது.
ஆனால் காந்தி தேசமான இந்தியாவின் அமைதிப்படை வீசிய முதல் குண்டே யாழ் மருத்தவமனை மீதுதான்.
யாழ் மருத்துவமனை மீது குண்டு வீசிவிட்டு அந்த மருத்துவமனை வாசலிலேயே காந்திக்கு சிலை வைக்கும் திறமை இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
இக் கொடுமை குறித்து அந்த மகாத்மா காந்தியால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடியும்.
"காந்தியின் கண்ணீர்" ( Tears of Gandhi )என்ற விவரணபடம் வந்துள்ளது. கீழ்வரும் இணைப்பில் அதனை பார்வையிடலாம்.
இதுவரை இந்த மருத்தவமனையில் கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நியாயமும் வழங்கப்படவில்லை. நட்ட ஈடும் வழங்கப்படவில்லை.
ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும் என்று கூறுவோர் இந்த அப்பாவிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஏன் கூறுவதில்லை?
சீக்கிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அம் மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி கூட அமைதிப்படையால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஏன் மன்னிப்பு கோரவில்லை?
இந்திய அரசு தமிழ்மக்களை இந்தியர்களாக மட்டுமல்ல மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இன்னமும்கூட இந்திய அரசுமீது நம்பிக்கை வைப்பவர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?

ஜனாதிபதி மைத்திரியின் கோபம் உண்மையானதா?

•ஜனாதிபதி மைத்திரியின் கோபம் உண்மையானதா?
உலகில் பாலியல் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
தமிழ் பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்கிறது. அது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
இலங்கை பூராவும் பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்துள்ளன. அது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
தாய்லாந்து, ரஸ்சியா இடங்களில் எல்லாம் இருந்து பெண்கள் கொண்டு வந்து விபச்சாரம் நடக்கிறது. இது குறித்து ஜனாதிபதிக்கு கோபம் வரவில்லை.
காரைநகரில் மாணவியை பாலியல் வல்லுறவு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யக்கூட கடற்படை மறுக்கிறது. இது ஜனாதிபதிக்கு கோபம் தரவில்லை.
மாங்குளத்தில் ஒரு மாணவி பாலியல் வல்லறவு செய்யப்பட்டு இறந்தபோது அதை வழக்காக பதிவு செய்யக்கூட பொலிஸ் மறுத்துவிட்டது. இது ஜனாதிபதிக்கு கோபம் தரவில்லை.
ஆனால் பாடகருக்கு பெண் ஒருவர் தன் பிராவை கழற்றிக் கொடுத்தது மட்டும் ஜனாதிபதிக்கு கடும் கோபத்தைக் கொடுத்துள்ளதாம்.
ஜனாதிபதியின் கோபம் உண்மையானது அல்ல. மாறாக மக்களை திசை திருப்பும் நடிப்பு.
ஜனாதிபதி பதவி ஏற்று ஒரு வருடமாகிறது. இன்னும் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதியோ வடக்கில் ஏழை தமிழர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குசினியில் பொருட்களை பார்வையிடுகிறார்.
ஜனாதிபதி அவர்களே!
தமிழ் மக்கள் எம்.ஜி. ஆரின் நடிப்பையே பார்த்தவர்கள். அவர்களை இப்படி நடித்து எமாற்ற முயலாமல் எதாவது நல்லது செய்ய முயலுங்கள்.

•இதற்கு என்னதான் தீர்வு?

•இதற்கு என்னதான் தீர்வு?
புதுவருடம் பிறக்கப்போகிறது. லண்டனில் பஸ், ரயில் கட்டணங்கள் முதல் அனைத்தும் வழக்கம்போல் அதிகரிக்கப்படவுள்ளது. அனைத்து வரிகளும்கூட அதிகரிக்கப்படும்.
அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படும். ஆனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் வீதமும் சம்பள அதிகரிப்பு வீதமும் ஒன்றாக இருப்பதில்லை.
இதனால் வருமானத்திற்கும் செலவிற்குமான இடைவெளி அதிகரிக்கிறது. இந்த இடைவெளியை சமாளிப்பதற்கு மக்கள் தம் ஆடம்பர செலவுகளை ஒவ்வொன்றாக குறைத்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் தரமான பொருட்களை தேடி வாங்கிய மக்கள் இப்பொது மலிவான பொருட்களை தேடி வாங்குகிறார்கள்.
இதுதான் தரமான பொருட்களை விற்ற மாக்ஸ் அன் ஸ்பென்சர் கடைகள் மூடப்பட்டு மலிவான பொருட்கள் விற்கும் பவுண்ட்ஸ் சொப் கடைகள் பரவலாக திறக்கப்படுவதற்கான காரணமாகும்.
பிரித்தானிய அரசு ஒருபுறத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்களை குறைத்து வருகிறது. இன்னொரு புறத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது.
மக்கள் பண்டிகைக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிய காலம்போய் இப்போது பண்டிகைக்கு அடுத்தநாள் விற்கும் மலிவு விலைக்காக காத்திருக்கும் காலம் வந்துவிட்டது.
மக்களின் அடிப்படைத் தேவையைக்;கூட சமாளிக்க முடியாத ஒரு காலம் விரைவில் வரவுள்ளது(Break even point) அப்படியான ஒரு காலகட்டத்தில் இந்த முதலாளித்துவத்தின் தீர்வு என்ன?
புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து முதலாளித்துவம் தன்னை மீளமைத்துக் கொள்ளும் என்கிறார்கள்.
புதிய தொழில் நுட்பத்தின் மூலம் முதலாளித்துவம் பெறும் வளர்ச்சியானது ஏற்படும் இடைவெளியை சிறிது குறைக்லாமேயொழிய ஒருபோதும் இடைவெளியை முற்றாக நீக்க முடியாது.
எனவே என்றாவது ஒருநாள் முதலாளித்துவம் தனது தோல்வியை சந்தித்தேயாக வேண்டும். அந்த நாள் எப்போது என்பதும் அதற்கு என்ன தீர்வு என்பதும்தான் இப்போது நம்முன் உரையாடலுக்குரிய கேள்விகளாகும்.
குறிப்பு- இங்கு நான் முதலாளித்துவத்தின் பிறப்பான பிரித்தானிய வல்லரசசின் நிலையை கூறியுள்ளேன். ஒரு வல்லரசு நாட்டிலேயே இந்த நிலை என்றால் வறிய நாடுகளின் நிலை என்னவாகும்?

650 நாட்களாக இவர்கள் மதுரை சிறையில் வாடுவது ஏன்?

• 650 நாட்களாக
இவர்கள் மதுரை சிறையில் வாடுவது ஏன்?
இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பது ஏன்?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், தமிழரசன், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின் , கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கடந்த 650 நாட்களாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் அல்லர்
இவர்கள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அல்லர்
இவர்கள் தங்கள மீதான வழக்கை 18 வருடம் இழுத்தடித்தவர்கள் அல்லர்
ஆனால் மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருடம் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இவர்களை அடைத்து வைத்திருக்கிறது.
இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?
இவர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது குற்றமா?
இவர்கள் தமிழக விடுதலைக்காக போராடியது குற்றமா?
இவர்களை விடுதலை செய்ய உரத்து குரல் கொடுப்போம்.
இவர்களுக்கு ஆதரவாய் தோள் கொடுப்போம்.
சிறையில் அடைத்து சித்திரவதை செய்தாலும்
இன உணர்வை சிதைக்க முடியாது என்பதை
தமிழக அரசுக்கு காட்டுவோம்
பெரும் படையாய் அணிதிரண்டு

ஒரு மழை வெள்ளம் ! இரண்டு பிரதமர்கள் !!

•ஒரு மழை வெள்ளம் !
இரண்டு பிரதமர்கள் !!
அண்மையில் சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அதனை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து பார்வையிட்டார். "அம்மா" என்றழைக்கப்படும் முதமைச்சர் ஜெயா கெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.
வல்லரசு நாடான இங்கிலாந்தில் மழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதனை பிரதமர் கமரோன் வெள்ளத்தில் நடந்து சென்று பார்வையிட்டுள்ளார்.
சென்னை வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து வெள்ளத்தில் ஒருவர்கூட இறக்கவில்லை.
சென்னை வெள்ளத்தில் ஜெயா அம்மையாரின் உத்தரவிற்காக அதிகாரிகள் காத்து இருந்ததால் செம்பரபாக்கம் அழிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் பிரதமரே நேரடியாக சென்று உத்தரவுகளை வழங்குகின்றார்.
சென்னையில் மக்கள் வழங்கிய உதவி பொருட்கள் மீது "அம்மா" ஸ்டிக்கர் ஒட்டி அதிகாரிகள் வழங்கினார்கள். ஆனால் இங்கிலாந்தில் அரசே முழு நிவாரணத்தை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல அதில் பிரதமர் கமரோன் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை.
இங்கிலாந்தில் அரசின் நிவாரணப் பணியில் மக்களுக்கு விரக்தி வரவில்லை. அதனால் மக்களின் கவனத்தை திருப்ப பிரதமர் கமரோன் "பீப் சாங்" வெளியிடவில்லை. எந்த அரசியல்வாதியும் "தூ" என்று துப்பவில்லை.
இந்தியா வெறுமனே வல்லரசு கனவு கண்டால் மட்டும் போதாது!