Sunday, April 30, 2017

•தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்!

•தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்!
14.04.2017 யன்று தோழர் தமிழரசனின் 72வது பிறந்த தினம்.
மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனை வழிகாட்டலில் தமிழ்நாடு விடுதலைக்காய் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் 72வது பிறந்த தினம்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்து முழு இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் ஒருபோதும் முதலமைச்சர் கனவு காணவில்லை. மாறாக தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தவர்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.
அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தோழர் தமிழரசனோடு நான் சேர்ந்து பயணித்த காலங்கள் மறக்க முடியாதவை. அவர் என்னை “தோழர்” என்று அழைத்து உரையாடியவை இன்றும் என் காதில் ஒலிக்கின்றன.
தோழர் தமிழரசனோடு கொண்டிருந்த புரட்சிகர உறவுக்காகவே இந்திய உளவுப்படை என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லும்படி ஈரோஸ் இயக்கத்திடம் உத்தரவிட்டிருந்தது.
நான் அதிர்ஸ்டவசமாக தப்பிவிட்டேன். ஆனால் தோழர் நெப்போலியன் இந்திய உளவுப்படையின் உத்தரவுக்கு அமைய ஈரோஸ் இயக்கத்தால் மலையகத்தில் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனுடன் புரட்சிகர ஜக்கியத்தை உருவாக்கியவர் தோழர் நெப்போலியன். அவரை படுகொலை செய்தபோதும் அவர் காட்டிய பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்பதை இந்திய உளவுப்படைகளால் தடுத்துவிட முடியவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மக்கள் போராட்டம், விவசாயிகளின் போராட்டம் போன்றன தமிழ்நாடு விடுதலைக்கான அவசியத்தை மக்கள் மனதில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விதைத்துள்ளன.
பாராளுமன்ற பாதைமூலம் தீர்வு கிடைக்காது. ஆயுதப் போராட்ட பாதை மூலமே தீர்வு பெற முடியும் என்ற தோழர் தமிழரசனின் வழிகாட்டல் சரிதான் என்பதை கடந்தகால வரலாறு மக்களுக்கு நன்கு உணர்த்துகிறது.
தோழர் தமிழரசனின் வழிகாட்டலை மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவருடன் பயணித்த எனது புரட்சிகர கடமை என உணர்கிறேன்.
எனது கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். இது உறுதி. இதுவே அவரது பிறந்தநாளில் அவர் நினைவாக எனது வரிகள்.

•51 வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!

•51 வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!
•எளிமையான ஜனாதிபதிக்கு 60 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம்
•எதிர்க்கட்சி தலைவருக்கு 5 கோடி ரூபாவுக்கு சொகுசு பங்களாவும் வாகனமும்
•மக்களுக்கு துரோகம் செய்யும் தலைவருக்கு “வாழும் வீரர்” பட்டம்!!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியாவில் 51வது தொடருகிறது.
இதுவரை நல்லாட்சி அரசும் இவர்களை கவனிக்கவில்லை. நல்லாட்சி அரசுடன் நல்லிணக்கம் பேணும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் கவனிக்கவில்லை.
தமிழ் மக்களின் வாக்கில் ஜனாதிபதியான மைத்திரி சிறிசேனா தமிழ் மக்களின் நலன்களை கவனிப்பதில்லை.
இந்த எளிமையான ஜனாதிபதி தனக்கு 60 கோடி ரூபா செலவில் இரண்டு சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்.
ஏற்கனவே அவருக்கு பாதுக்காப்பிற்கு என பல குண்டு துளைக்காத வாகனங்கள் இருக்கும்பொழுது மக்கள் கஸ்டத்திற்கு மத்தியிலும் இந்த எளிமையான ஜனாதிபதி வாகனம் இறக்குமதி செய்கிறார்.
பிரதமர் ரணில் நாட்டில் இருப்பதேயில்லை. எப்போதும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார். மக்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு அவருக்கு அக்கறையே இல்லை.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று உறுதிமொழி வழங்கிய சம்பந்தர் அய்யா உறுதி மொழியை காப்பாற்றவும் இல்லை. போராடும் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவும் அவரால் முடியவில்லை.
சம்பந்தர் அய்யாவின் கவனம் எல்லாம் தனக்கு பதவி பெற்றது மட்டுமன்றி சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் வாங்க 5 கோடி ரூபாவுக்கு பாராளுமன்றத்தில் பிரோரணை கொண்டு வருவதிலேயே இருக்கிறார்.
ஏற்கனவே அவருக்கு அரசு பங்களா வழங்கியுள்ளது. தற்போது மேலதிகமாக இன்னொரு பங்களாவும் வாகனமும் வழங்கவென 5 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்கு போட்ட மக்கள் தமது பிரச்சனைகளுக்காக 51வது நாளாக போராடுகின்றார்கள். ஆனால் பதவி பெற்ற தலைவர்கள் தமக்கு பங்களாவும் சொகுசு வாகனமும் பெறுவதில் கவனம் செலுத்துகின்றார்கள்.
இத்தகைய ஈனத் தலைவர்களுக்கு “வாழும் வீரர்” “இறைமொழிச் செம்மல்” என பட்டங்கள் வேறு வழங்குகின்றார்கள் நம்மில் சிலர்.
என்னே கொடுமை இது? இந்த போராடும் மக்கள் தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்துவிட்டார்கள்?

•மலைகளை அகற்றும் மூடக் கிழவனாக மாறுவோம்!

•மலைகளை அகற்றும் மூடக் கிழவனாக மாறுவோம்!
கொழும்பில் மீதொட்டமுலவில் ஏற்பட்ட குப்பை மலைச் சரிவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது இயற்கை அழிவு அல்ல. மனிதனால் மனிதனுக்கு எற்படுத்தப்பட்ட செயற்கை அழிவு. நிச்சயம் இதனை இலங்கை அரசால் தடுத்திருக்க முடியும்.
100 மீற்றர் உயரத்திற்கு கொட்டப்பட்ட இந்த குப்பை மலை விரைவில் சரியவிருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.
மக்களும் இதற்கு எதிராக பல தடவை போராட்டம் நடத்தியுள்ளனர். இருந்தும் அரசோ அல்லது அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது அங்கு குப்பை கொட்டுவதை அரசு தடை செய்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வேறு இடமும் வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கையை முன்னரே எடுத்திருந்தால் அநியாயமாக 23 உயிர்கள் பலியானதை தடுத்திருக்க முடியும்.
அரசும் அதிகாரிகளும் அக்கறையற்று இருந்தமைக்கு காரணம் இந்த மக்கள் ஏழை மக்கள் என்பது மட்டுமல்ல சாதியிலும் மிக தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பதே.
மக்களின் வாக்கு பெற்று பதவியைப் பெற்றவர்கள் தங்கள் நலனைக் கவனிக்கிறார்களே யொழிய மக்கள் நலனைக் கவனிப்பதில்லை.
ரயிலில் வடை விற்ற மாகாண முதலமைச்சர் ஒருவர் பதவி பெற்றதும் தற்போது கோடிக் கணக்கான ரூபா பெறுமதியில் ஹோட்டல் கட்டுகிறார். தான் 10 மாடி ஹோட்டல் கட்டுவதாக திமிராக பேட்டி வேறு கொடுக்கிறார்.
ஊழல் செய்யும் முதலமைச்சரை தண்டிக்க வேண்டிய ஜனாதிபதியோ அதுபற்றி அக்கறையின்றி தனக்கு 60 கோடி ரூபா செலவில் குண்டு துளைக்காத இரண்டு வாகனங்களை இறக்குமதி செய்கிறார்.
இப்போது யுத்தம் இல்லை. ஜனாதிபதிக்கு பாரிய உயிர் அச்சுறுத்தலும் இல்லை. அதுமட்டுமன்றி ஏற்கனவே பல குண்டு துளைக்காத வாகனங்கள் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
இந்நிலையில் 60 கோடி ரூபாவுக்கு புதிய சொகுசு வாகனம் ஜனாதிபதிக்கு தேவையா என்று கேட்டால் அவர் எளிமையானவர், வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து தன் கையால் சாப்பிடுகிறார் என்று சுமந்திரனும் சம்பந்தர் அய்யாவும் கதை சொல்கிறார்கள்.
சம்பந்தர் அய்யா ஒரு சிறய அறையில் எளிமையாக வாழ்வதாக சுத்துமாத்து சுமந்திரன் கதை விடுகின்ற அதே நேரத்தில் சம்பந்தர் அய்யாவுக்கு சொகுசு பங்களா திருத்தவும் மேலும் புதிய வாகனம் வாங்குவதற்கும் 5 கோடி ரூபா ஒதுக்குவதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரோரணை கொண்டு வந்துள்ளார்.
இப்படி ஜனாதிபதி, அமைச்சர், எதிர்க்கட்சிதலைவர் எல்லோரும் தமது நலன்களை கவனிப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கிக்கொண்டிருக்கும் போது மக்கள் குப்பை மiயில் சிக்குண்டு இறந்து கொண்டிருக்கின்றனர்.
சீனாவில் ஒரு மூடக்கிழவன் தனது தோட்டத்திற்கு போவதற்கு தடையாக இருந்த மலையை குடைந்து பாதை அமைத்தான் என்ற கதையை கூறியே மக்களை அணிதிரட்டினார் தோழர் மாசேதுங்.
அதேபோல் இலங்கை மக்களும் தமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஏகாதிபத்தியம் தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் இனவாதம் போன்ற குப்பை மலைகளை அகற்ற மூடக் கிழவனாக மாற வேண்டும்.
இதனை முதலில் வீண் முயற்சி என்பார்கள். அப்புறம் வெற்றி பெற்றதும் விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்.

•அப்பாவி பொதுமகனை மனித கேடயமாக பயன்படுத்திய இந்திய ராணுவம்!

•அப்பாவி பொதுமகனை மனித கேடயமாக பயன்படுத்திய இந்திய ராணுவம்!
•இனியாவது ஈழத்தில் இந்திய ராணுவம் எவ்வளவு கொடுமை புரிந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கடா!
காஸ்மீரில் வெறும் 7 வீதம் மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது. ஆனால் அந்த தேர்தலை இந்திய அரசு இடைநிறுத்தவில்லை. அதேவேளை சென்னையில் யாரோ ஒரு வேட்பாளர் பணம் வழங்கினார் என்று தேர்தலையே நிறுத்தியுள்ளது இந்திய அரசு.
இது ஜனநாயகத்தை காப்பாற்றும் செயல் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் இது இந்திய ஜனநாயகம் அல்ல. மாறாக இது இந்துத்துவ ஜனநாயகம்.
காஸ்மீரில் தேர்தலில் வாக்களிக்க சென்ற அப்பாவி பொதுமகன் ஒருவரை இந்திய ராணுவம் தமது வண்டியில் மனித கேடயமாக கட்டிப் பயன்படுத்தியுள்ளனர்.
பாரூக் அகமது என்பவரை கொடூரமாக தாக்கி கல்வீசியவர்களில் ஒருவர் என கைது செய்துள்ளனர். அவர் மீது கல்வீசியவன் என எழுதி ஒட்டி தங்கள் ஜீப்பில் மனிதக் கேடயமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
30-40 கிமீ வரை ஃபரூக்கை மனிதக் கேடயமாக பயன்படுத்தியபின் அவரை விடுதலை செய்துள்ளனர். அவரின் தாகத்துக்கு நீர் தரவில்லை. கொஷ்போரா கிராமத்து மக்கள் ஃபரூக்கை விடுதலை செய்ய சொன்னதற்கு, இடைத் தேர்தலில் கல்வீசி தாக்கியவன் என கூறியிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கும் ஃபரூக், நான் மனிதனா அல்லது பொம்மையா?… என்று கேட்டிருக்கிறார். இடது கை பாதிக்கப்பட்டதால் அவரது சால்வை தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களால் அவர் ஜனநாயக செயல்முறை மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார். இதனால் ஃபரூக், “நான் எப்போதும் என் வாக்குரிமையை தவறவிட்டதில்லை, இதன்பிறகு எனக்கு வாக்களிக்கும் எண்ணமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் உலகில் மிகப்பெரிய நான்காவது ராணுவம். அது கட்டுப்பாடு மிக்க ராணுவம் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அந்த ராணுவம்தான் காஸ்மீரில் இவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுகிறது.
இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தபோது புலிகள் இயக்கம் மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தனர். உண்மையில் இந்திய ராணுவமே ரோந்து வரும்போது மக்களை கேடயமாக பயன்படுத்தியிருந்தது.
மக்களை கேடயமாக பயன்படுத்தும் இந்திய ராணுவத்தின் செயற்பாடு தற்போது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.
தனது சொந்த மக்களையே ஈவு இரக்கமின்றி சட்டவிரோதமாக மனித கேடயமாக பயன்படுத்தும் இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழர்களுக்கு எத்தனை கொடுமையை இழைத்திருக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து மே மாதம் வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலையை கண்டித்து கட்டுரை எழுதப் போகிறவர்கள் இனியாவது இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

•“இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம். இந்தியாவே யுத்தத்திற்கு உதவி செய்தது” - மகிந்த ராஜபக்ச

•“இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம்.
இந்தியாவே யுத்தத்திற்கு உதவி செய்தது” - மகிந்த ராஜபக்ச
இனி கலைஞர் என்ன சொல்லப் போகிறார்?
இந்தியாவுக்காகவே தமிழ் மக்கள் மீது யுத்தம் நடத்தப்பட்டதாகவும் இந்தியாவே தமிழ் இன அழிப்பிற்கு அதிக உதவிகளை வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
ஏற்கனவே முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவும் இதே கருத்தை கூறியிருக்கிறார். இந்தியா இதுவரை இந்த கருத்துகளை மறுக்கவில்லை.
தமிழ் மக்களுக்காக கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்ததாக கூறிவரும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இதற்கு என்ன சொல்லப்போகிறார்?
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் கலைஞர் கருணாநிதி மற்றும் அவர் மகள் கனிமொழி ஆகியோருக்கும் பங்கு உண்டு என மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி கடந்த வருடம் குற்றம் சாட்டியிருந்தார்.
தமக்கு இனப்படுகொலையில் பங்கு இல்லை என்பது மட்டுமன்றி ஆனந்தி யார் என்றே தனக்கு தெரியாது என்றும் கனிமொழி அப்போது மறுத்திருந்தார்.
ஆனால் இப்போது மகிந்த ராஜபக்சவின் கூற்றானது தமிழின அழிப்பில் இந்திய அரசுக்கு மட்டுமல்ல கலைஞருக்கும் பங்கு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கு வேதனை என்னவென்றால் இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா தமிழருக்கு உதவும் என்று சில தமிழ் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதுதான்.
அதுவும் இன்னும் சிலர் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்தியா உதவும் என்று நம்பிக் கொண்டு சிவசேனை இயக்கம் ஆரம்பித்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் இருக்கும் சில முன்னாள் போராளி பிரமுகர்கள் இந்திய உளவுப்படை கூப்பிட்டிருக்கு என்று சொல்லிக்கொண்டு பைல் கட்டுகளுடன் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
சம்பந்தர் அய்யா , மாவை சோனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைகலநாதன் போன்றவர்கள் தமது சொந்த சுயநலன்களுக்காக இந்திய ஆக்கிரமிப்பிற்கு துணை போகின்றார்கள்.
இந்திய எதிரியை இனம் கண்டு எதிர்க்காதவரை தமிழ் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து ஒருபோதும் விடுதலை பெற முடியாது.

•வைகோ மீதான வழக்கு வாபஸ் பெற வேண்டும்!

•வைகோ மீதான வழக்கு வாபஸ் பெற வேண்டும்!
•வைகோ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!!
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது சட்ட விரோதம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையிலும் வைகோ மீது அவ் வழக்கு போடப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் அரசியல் பழி வாங்கலாக போடப்பட்ட .இவ் வழக்கு 8 வருடங்களாக வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது.
வைகோ விரும்பியிருந்தால் தான் இப்போது விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்று மற்ற தலைவர்களை போல் கூறி தப்பியிருக்கலாம்.
ஆனால் அவரோ “நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன். இன்றும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன். நாளையும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்” என்று உறுதியாக கூறியுள்ளார்.
வைகோ வின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக அவர் சிறையில் வாடும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை என கருதுகிறேன்.
ஜெயா அம்மையார் ஊழல் செய்து அதற்காக 4 வருட தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது பல ஈழ தமிழ தலைவர்கள் அவரின் விடுதலைக்காக குரல் கொடுதிருந்தார்கள்.
ஜெயா அம்மையாருக்காக குரல் கொடுத்த அந்த ஈழ தமிழ் தலைவர்கள் ஈழத் தமிழருக்காக சிறைவாசம் அனுபவிக்கும் வைகோ விற்காக இதுவரை குரல் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
1991ம் ஆண்டில் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை பழனி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கையொப்பம் வாங்கவென வைகோ அவர்கள் மதுரை சிறைக்கு வந்திருந்தார்.
அப்போது சிறையில் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அறிந்த அவர், “ ஈழத் தமிழர்களை யாருமற்ற அனாதை அகதிகள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் நான் வருவேன்” என்று சிறை கண்காணிப்பாளரிடம் எச்சரித்திருந்தார்.
என்னை யார் என்று தெரியாத நிலையில் நான் ஒரு ஈழத் தமிழன் என்பதற்காக அவர் குரல் கொடுத்த அந்த உணர்வை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
தமிழக அரசே!
வைகோ மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு!
வைகோ அவர்களை உடனே விடுதலை செய்!

•மோடிஜி யின் சுத்துமாத்து!

•மோடிஜி யின் சுத்துமாத்து!
தான் பதவிக்கு வந்தால் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபா வைப்பில் இடப்படும் என மோடிஜி கூறியிருந்தார்.
அவர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்னும் அவர் கூறிய கறுப்பு பணம் மீட்கப்படவும் இல்லை. 15 லட்சம் ரூபாவும் வைப்பில் இடப்படவும் இல்லை.
இப்போது, 2022ல் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தரப்படும் என மோடிஜி உறுதியளித்துள்ளார்.
இங்கு எமது கேள்வி என்னவெனில், 15லட்சம் ரூபா தரப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடிஜி அனைவருக்கும் வீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எப்படி நம்புவது?
55 நாட்களாக போராடும் விவசாயிகளை சந்திக்கவே மறுக்கும் மோடிஜி,
அவர்களின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடிஜி,
அவர்களுக்கும் வீடு கட்டி தரப்போகிறார் என்பதை எப்படி நம்புவது?
இது மக்களை ஏமாற்றும் மோடிஜியின் சுத்துமாத்து அன்றி வேறு என்ன?
குறிப்பு- அடுத்த மாதம் மோடிஜி இலங்கை வருகிறாராம். “எட்கா” ஒப்பந்தம் செய்வதற்காக என்ன சுத்துமாத்து செய்யப்போகிறாரோ?