Wednesday, October 30, 2013

• முள்வேலி

• முள்வேலி

இது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல் தொகுப்பாகும். 12 வது வெளியீடாக வந்திருக்கிறது. ம.க.இ.க வின் செயலர் தோழர் மருதையன் அவர்களின் தொகுப்புரையுடன் மொத்தம் ஜந்து பாடல்கள் கொண்ட ஒலிக் குறுந்தகடாக வந்துள்ளது. ஈழ தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவல வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட பாடல்கள். கேட்பதற்கு நன்றாக மட்டுமல்ல உணர்வை ஏற்படுத்தும் வரிகளைக்கொண்டிருப்பதும் உண்மையிலே பாராட்டத்தக்கது.

ரஸ்சிய புரட்சியின் போதும் அதன் பின்னரும் அதன் தாக்கம் கலை இலக்கியங்களில் வெளிப்பட்டு உலகிற்கு சிறந்த படைப்புகள் கிடைத்தன. அதுபோல் சீனப் புரட்சியின் போதும் சிறந்த கலை இலக்கிய படைப்புகள் கிடைத்தன. ஆனால் துரதிருஸ்டவசமாக தமிழ் மக்களின் போராட்டம் 30 வருடங்களுக்கு மேலாக நடந்தும் ஒரு சிறந்த கலை இலக்கிய படைப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அடக்கு முறை அரசுகள் எவ்வளவு அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டாலும் அதையெல்லாம் உடைத்துகொண்டு சிறந்த கலைப்புடைப்புகள் இனி வெளிவரும் என நம்புகிறேன். அதற்கு இந்த “முள்வேலி” நம்பிக்கையைத் தருகிறது. இந்த பாடல் தொகுப்பை தந்து ஒரு சிறந்த முன்னுதாரணத்தை தந்துள்ள மகஇக அமைப்பினருக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது புலிஆதரவு கட்சிகளே “இளம் தலைவரை கொன்றது தவறு” என்று அறிக்கை விட்டபோது “ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே” என தைரியமாக மக்களுக்கு அறிவித்தவர்கள் ம.க.இ.கவினரே. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களை ஆதரித்தால் “தடா” கறுப்பு சட்டம் பாயும் என்ற நிலை இருந்தபோது அது கண்டு அஞ்சாது உறுதியாக தமது ஆதரவினை தெரிவித்தவர்கள் இவர்கள். சிறப்பு முகாம் கொடுமைகள் குறித்து தமது வெளியீடுகளில் தொடர்ச்;சியாக வெளியிட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியவர்கள் இவர்கள்.

நான் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டபோது தமது “புதியஜனநாயகம்” இதழில் முன் அட்டைப்படமாக எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பிரசுரித்து வெளிப்படுத்தியவர்கள். அன்றும் சரி இன்றும் சரி இலங்கை தமிழர்களின் போராட்டத்திற்கு புரட்சிகர கண்ணோட்டத்தில் தமது ஆதரவை வழங்கி வருபவர்கள். அவர்கள் இப்போது இந்த “முள்வேலி” பாடல் தொகுப்பை வெளியிட்டுளார்கள்.

சிறந்த படைப்புகளை ஆதரித்து ஊக்கிவிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். குறிப்பாக இது எமது வலியை சொல்லும் பாடல் தொகுப்பாக இருப்பதால் இலங்கை தமிழர்கள் அனைவரும் வாங்கி அவர்களை ஊக்கிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

லண்டனில் இந்த பாடல்தொகுப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர் என்னிடமோ அல்லது “இனியொரு” ஆசிரியர் நாவலன் அவர்களையோ தொடர்பு கொள்ளவும்.
எனது மின்னஞ்சல் முகவரி
tholar2003@hotmail.com

No comments:

Post a Comment