• ஜெயலலிதாவும் ஈழப் போராளி மகேஸ்வரனும்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் தமது பதவி நலன்களுக்காகவே ஈழப்பிரச்சனையைப் பயன்படுத்திவந்தனர். எம்.ஜி.ஆர் , கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் கூட இவ்வாறே செயற்பட்டார். இவர்கள் ஒருபோதும் ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அனுதாபமும் கொள்ளவில்லை. தமது பதவி நலன்களுக்காகவே பேசி வருகின்றனர்.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் எனச் சிலர் கூறினார்கள். இலை மலர்ந்தது. அவர் பதவிக்கு வந்தார். ஆனால் இன்னும் ஈழம் மலரவில்லை. ஈழம் மலராவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாட்டில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்து சிறப்புமுகாம்களையாவது மூடியிருக்கலாம். ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை. ஆனால் அவரோ கச்சதீவை மீட்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதும் என்று நாடகம் போடுகிறார்.
இன்னொரு சாரார் ஜெயலிலதா ஒரு பாப்பாத்தி என்றும் அவர் ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்றும் விமர்சனம் செய்கின்றனர். துக்ளக் சோ போன்றவரகள்; ஜெயலலிதா ஈழப்போராளிகளை தனக்கு அருகில் சேர்த்துக்கொள்வதில்லை என்றும் ஈழப்போராளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பவர் என்றும் புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஜெயலலிதாவும் மற்ற அரசியல்வாதிகள் போல் தேவை யேற்பட்டால் ஈழப்போராளிகளை அரவனைப்பதும் தேர்தலில் மக்கள் ஆதரவு பெற தான் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதாக கூறுவதும் வென்றபின் அனைத்தையும் கைவிட்டு மறந்து செயற்படுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பவர்.
மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது இயக்க சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அதில் முக்கியமானது ஒன்ரை கோடி ருபா பெறுமதியான தங்க கட்டிகள் ஆகும். இவை இலங்கையில் காத்தானகுடி வங்கியில் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகும். அவற்றை உருக்கி தங்க கட்டிகளாக அவர் மதுரையில் வைத்திருந்தார். இவற்றையும் பொலிசார் கைப்பற்றி வழக்கில் சேர்த்திருந்தனர்.
மகேஸ்வரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரும் அவரது இயக்க உறுப்பினர்களும் செலவுக்கு பணம் இன்றி மிகவும் கஸ்டப்பட்டனர். சாப்பிடக்கூட காசு இன்றி தவித்தனர். முக்கிய நபர்கள் மூலம் மத்திய உளவுப்படையை நெருங்கி உதவி கோரியபோது அவர்கள் இது மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால் எம்.ஜி.ஆரிடம் கேட்குமாறு கூறியிருந்தனர். ஒரு முக்கிய அமைச்சர் மூலம் எம்.ஜி.ஆரிம் கேட்டபோது இது வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதால், இது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விடயமாகையால் இதை தன்னால் தர முடியாது எனக் கைவிரித்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் மற்றும் மத்திய அரசு போன்றவையே தங்களால் உதவ முடியாது என்று கைவிரித்துவிட்டதால் இனி இந்த தங்கக் கட்டிகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்று மகேஸ்வரன் கருதியிருந்த வேளையில் “இந்து” பத்திரிகையில் பணி புரியும் ஒரு முக்கிய நபர் மகேஸ்வரனைத் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவிடம் கேட்கும்படி ஆலோசனை கூறினார். எம்.ஜி.ஆராலேயே முடியாத விடயம் அப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவால் முடியுமா என நினைத்து மகேஸ்வரன் அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்தார். ஆனால் அந்த முக்கிய நபர் மீண்டும் மகேஸ்வரனை அணுகி ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன் என்றார்.
“ஜெயலலிதா ஒரு நடிகை. அவர் எம்.ஜி.ஆரின் வைப்பாட்டி. அதனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்” எனபதே அவரைப்பற்றிய பொதுவான அபிப்பிராயமாக அப்போது ஈழப்போராளிகளுக்கு இருந்தது. எனவே ஒருவித அவ நம்பிக்கையுடன் வேண்டா வெறுப்பாக ஜெயலலிதாவுடன் மகேஸ்வரன் தொடர்பு கொண்டார். உடனடியாக ஜெயலலிதாவுடன் சந்திப்பதற்கு நேரம் தரப்பட்டது. மகேஸ்வரன் சென்றார். அவருக்கு தன்கையாலே பழரசம் கொடுத்து வரவேற்ற ஜெயலலிதா ஈழப்பிரச்சனை குறித்து மிகவும் அக்கறையுடனும் அனுதாபத்துடனும் பேசினார். நீங்கள் எல்லாம் அடிக்கடி தன்னுடன் சந்திக்க வேண்டும் என்றும் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்கலாம். நான் நிச்சயம் செய்து தருவேன் என்றெல்லாம் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவத்தில் கைப்பற்ற பட்ட தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ள உதவுவது குறித்து அப்போது எதுவும் பேசாதது மகேஸ்வரனுக்கு ஏமாற்றமாக இருந்தது. எனவே அவர் விரக்தியுடன் திரும்பி வந்தார்.
அவர் திரும்பி வந்த அரை மணி நேரத்தில் பொலிஸ் கமிஸனரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் உடனடியாக வந்து தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்கப்பட்டது. மகேஸ்வரனைப் பொறுத்தவரையில் தன்னையே நம்பமுடியாத அளவிற்கு சந்தோசம் அடைந்தார். அவர் மட்டுமல்ல நாங்கள் அனைவரும் ஜெயலலிதா இந்த உதவியை செய்வார் என்றோ அல்லது அதையும் இவ்வளவு விரைவாக செய்வார் என்றோ கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.
எம்.ஜி.ஆர் மற்றும் மத்திய அரசால் செய்ய முடியாத ஒரு காரியத்தை அதுவும் வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தில் இருந்த ஒன்ரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் திருப்பி கிடைக்க செய்தவர் ஜெயலிலதா. அன்று தனது அரசியல் பிரவேசத்தின்போது இவ்வாறு உதவி செய்தவர் பின்னர் ஆட்சியில் அமர்ந்ததும் ஈழப் போராளிகளை மறந்தார். அதுமட்டுமல்ல அப்பாவி அகதிகளை பிடித்து சிறப்பு முகாமில் அடைத்தார். அதே மகேஸ்வரன் மீது அந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கை நடத்தினார். அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.
நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது எமக்கு படிப்பதற்கு பத்திரிகைகள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட விரோதத்தைச் சுட்டிக்காட்டி அனுமதிகோரி 14 நாட்கள் உண்ணா விரதம் இருந்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு “இப்படி தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ள உதவி செய்த நீங்கள் இப்போது அகதிகளை இப்படி துன்புறுத்தலாமா?” எனக் கேட்டு கடிதம் அனுப்பினேன். உடனே அப்போது திருச்சி கியூ பிரிவு உதவி கண்காணிப்பாளராக இருந்த சண்முகம் என்பவர் துறையூர் முகாமில் என்னைச் சந்தித்து இனிமேல் இப்படிப்பட்ட உண்மை விபரங்களை வெளிப்படுத்தும் கடிதங்களை எழுதத்கூடாது என எச்சரித்தார்.
இங்கு நான் இதை வெளிப்படுத்துவதன் நோக்கம் ஜெயலலிதாவும் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் பதவியைப் பிடிப்பதற்கு எல்லாவித உதவிகளையும் செய்வதும் பதவியை பெற்றபின் மறந்து செயற்படுவதும் வழக்கமாக கொண்டவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே.
Hi!first that time he is in power or opposition leader?second MGR died after 1989 karunanithi came to the power.she came to the power after rajivehandi assaniatation then how come she would help to maheswaran and how we expected help after rajive and padmanaba was killed.??any way If she helped we can appericiate for that.
ReplyDelete