Tuesday, April 29, 2014

சிவசேனை தாமதமான ஆனால் தவிர்க்க முடியாத ஒரு விமர்சனம்!

சிவசேனை
தாமதமான ஆனால் தவிர்க்க முடியாத ஒரு விமர்சனம்!

இது
ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட
ஈழத் தமிழர்களால் நடிக்கப்பட்ட
ஈழத் தமிழரால் இயக்கப்பட்ட
இலண்டனில் எடுக்கப்பட்ட
ஒரு இந்தியப் படம்.

தென் இந்தியப் படங்களுக்கு நிகராக எடுக்க வேண்டும் என்ற ஆவலில்
இன்னொரு தென்னிந்திய படமாகவே எடுக்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றமே!

கதை என்று பார்த்தால்
அன்றைய எம்.ஜி. ஆர் படங்கள் போல
பின்பு வந்த ரஜனி படங்கள் போல
இன்றைய விஜய் படங்கள் போல
தாயைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை.

ஆனால் இந்தக் கதையை லண்டனில் தமிழர் வீடுகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களுடன் இணைத்து சொல்லியிருப்பது கொஞ்சம் வித்தியாசம் மட்டுமல்ல சற்று “திரில்”லிங்காவும் உள்ளது. பாராட்டுகள்.

தமிழ்நாட்டு சந்தையை எதிர்பார்த்து கதாபாத்திரங்கள் தமிழக தமிழ் பேச வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் என்னதான் தமிழக தமிழ் பேசினாலும் சரி, அல்லது தமிழக படம் போல் எடுத்தாலும்கூட ஈழத் தமிழர் படங்களை “கோடம்பாக்கம்” வரவேற்றக்போவதில்லை என்பதே கசப்பான உண்மை.

“கோடம்பாக்கம்” சினிமா இந்தியன் என்ற ரீதியில் தெலுங்கனை வரவேற்கும். மலையாளிகளை வரவேற்கும். ஏன் கன்னடனைக் கூட வரவேற்கும். ஆனால் ஈழத் தமிழனை ஒருபோதும் வரவேற்காது. இதுதான் இத்தனை கால வரலாறு. இதனை உடைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

தென்னிந்திய சினிமா மட்டுமல்ல தென்னிந்திய தொலைக்காட்சிகளும் அதே அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றன. உலகத் தமிழர்களின் தொலைக்காட்சி என்று சன் டிவி சொல்லும். ஆனால்; அதன் உலகத் தமிழர் என்பது இந்திய தமிழர் மட்டுமே. கலைஞர் டிவி க்கு அருகில் ஈழத் தமிழன் படைப்பு மட்டுமல்ல ஈழத் தமிழனே கூட நெருங்க முடியாது. ஈழத் தமிழர்களின் குரல் என வேடம் போடும் விஜய் டிவி கூட இதுவரை ஒரு ஈழத் திரைப்படத்தை ஒளிபரப்பியதில்லை. ஏன் என்று கேட்டால் தரம் நன்றாக இல்லையாம்.

எனவே ஈழத் தமிழர்கள் தென்னிந்திய சந்தையை நம்பி அவர்களுக்காக படம் பண்ணி அவர்களின் ஆங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்காமல் அவர்கள் எம்மை திரும்பிப் பார்க்கும் வண்ணம் தனித்துவமான படங்களை எடுப்பதே பொருத்தமாகும்.

அமெரிக்க கொலிவூட் படங்களுக்கு நிகராக ஈரானிய படங்கள் அமைவது போல்
உலக கவனத்தைத் திருப்பும் பாலஸ்தீன படங்களைப் போல்
ஈழத் திரைப்படங்களும் அமைய வேண்டும்.

ஈழத் தமிழர்கள் அதனைக் குறிக்கோளாகக் கொண்டு படங்களை தயாரிக்க வேண்டும்.

ஆம். ஈழத் தமிழர்களால் முடியும்.
அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.

No comments:

Post a Comment