Tuesday, April 29, 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

• நீங்கள் உங்கள் மாளிகையில் வளர்த்த கிளிகள் பறந்து விட்டதே என்று கவலை கொண்டீர்களாம். ஆனால் மக்களோ சமாதனாப் புறா வராமல் போய் விட்டதே என்று கவலை கொள்வதை தாங்கள் அறிவீர்களா?

• பறந்து சென்ற உங்கள் கிளிகளை அதிகாரிகள் தேடிக் கண்டு பிடித்துவிட்டார்களாம் என அறிந்து நிம்மதி பெரு மூச்சு விட்டோம். ஏனென்றால் உங்கள் கிளிகளும் காணாமற் போனதற்கு லண்டனில் உள்ள புலிகள் காரணம் என்று கூறிவிடுவீர்களோ என பயந்துவிட்டோம். ஆனால் மக்கள் விரும்பும் சமாதானப் புறவை யாராவது தேடிக் கொடுப்பார்களா என மக்கள ஆவலுடன் காத்து இருப்பதை தாங்கள் அறிவீர்களா?

• நீங்கள் முதன் முதலில் பதவியேற்ற போது லண்டனில் உங்களை சந்த்தித்த தமிழர்கள் சிலரிடம் “தமிழீழம் தவிர அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் புலிகள் எனக்கு அவசாசம் தருகிறார்கள் இல்லையே” எனக் கூறினீர்கள். ஆனால் இப்போது புலிகள் அற்ற ஜந்து ஆண்டுகள் உங்கள் முன் இருந்தும் எந்த ஒரு தீர்வையும் நீங்கள் முன்வைக்கவில்லையே? அது ஏன் என்று கூறுவீர்களா?

• தமிழ்மக்கள் புலி ஆதரவாளர்களை தவிர்த்து, தமிழீழத்தைக் கைவிட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பை தேர்தல் மூலம் தெரிவு செய்து உங்களிடம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ மீண்டும் புலிகள் என கோசம் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

• “ஆனையிறவில் இருக்கும் இராணுவ முகாம் ஒரு நாள் அம்பாந்தோட்டைக்கு மாறும். அன்று இதே ராணுவம் சிங்கள மக்களைக் கொல்லும்” என்று டெலோ இயக்க தலைவர் தங்கத்துரை அன்று கூறினார். அதேபோல் இன்று உங்கள் குண்டர் படை அம்பாந்தோட்டைக்கு வந்த ஜ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களையே அடித்து விரட்டியதையை நாம் கண்டு கொண்டோம்.

• நீர்கொழும்பில் குடிதண்ணீரில் நஞ்சு கலக்க காரணமான இந்திய கம்பெனிக்கு எதிராக சிங்கள மக்கள் போராடியபோது இந்தியாவுக்காக உங்கள் ராணுவம் சிங்கள மக்களைக் கொன்றதை கண்டோம்.

• நீங்கள் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றியதாக கூறுகிறீர்கள். ஆனால் உண்மை என்னவெனில் முன் எப்போதும் விட இப்போதுதான் இலங்கை ஏகாதிபத்தியத்திற்கு அதிக அளவில் விற்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு விற்கப்பட்டுவிட்டது.

• 1983க்கு முன்னர் இலங்கையில் இந்திய முதலீடு என்பது வெறும் 12 வீதமே. ஆனால் இன்று இந்திய முதலீடு என்பது 90 வீதம். அதாவது உள்ள மொத்தம் 700 வெளிநாட்டு கம்பனிகளில் 652 இந்திய கம்பனிகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தினால் அதிக இலாபம் அடைந்திருப்பது இலங்கை மக்கள் அல்ல இந்தியா மட்டுமே என்பது இதில் இருந்து தெரியவில்லையா?

• பிரபாகரன்களும் புலிகளும் தானாக உருவாவதில்லை. இலங்கை அரசின் தவறுகளே அவைகள் உருவாகுவதற்கு காரணம் என்று உங்கள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்கா கூறினார். அப்படியென்றால் இன்று மீண்டும் புலிகள் உருவாகிறார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் அதற்கும் உங்கள் அரசுதானே காரணமாகும். அப்படியிருக்க எதற்காக அப்பாவி மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுகிறீர்கள்?

• அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதன் நியாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அடக்குமறை மூலம் ஒரு இனத்தின் சுதந்திர உணர்வை அழித்துவிட முடியாது என்பதை உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

“தூசிகள் துடைக்காமல் அகலாது. இறுதிவரை போராடாமல் வெற்றி கிடைக்காது” என்று தோழர் சண் கூறியிருக்கிறார்.

இன்றைய இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதே.

இலங்கை அரசின் அடக்கு முறைக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போராடுவோம்.

இறுதி வெற்றி உறுதி எமக்கு

No comments:

Post a Comment