Sunday, June 30, 2013

சல்மா அவர்களின் ஆவணப்படம்

இன்று லண்டனில் ஈஸ்ட்காம் என்னும் இடத்தில் சல்மா அவர்களின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இன்று வேலை நாளாக இருந்தும் அதுவும் இறுதி நேரத்தில் மண்டபம் மாற்றப்பட்டிருந்தும்கூட அரங்கு நிறைந்த நிகழ்வாக அமைந்தது “சல்மா” அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதவேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் அதுவும் முஸ்லிம் சமூகத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கதையே சல்மாவின் கதையாகும். இது முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த அனைத்து சமூகத்திலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஒரு மணி நேர ஆவணப்படத்தில் ஒரு பெண்ணின் முழுப் போராட்டத்தையும் காட்டுவது கஸ்டம்தான். இருப்பினும் இந்த படத்தை பார்க்கும்போது அவரின் வலியை உணரமுடிகிறது. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு சப் டைட்டில் போன்றன சிறந்த தரத்தில் இல்லையென்றாலும் கூட இந்த பெண்ணிண் போராட்ட கதையானது அவற்றை மறந்து படத்துடன் எம்மை பிணைத்துவிடுகின்றது.

கிராமத்தில் அதுவும் குடும்பத்தினருக்குகூட தெரியாமல் கவிதை எழுதிய ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவரை வெளி சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அங்கீகாரம் கிடைக்கச் செய்தததில் காலச்சுவடு கண்ணன் மற்றும் ஊடகவியலாளர் அருள்எழிலன் ஆகியோரின் பங்கு நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.

படக்காட்சியின் பின் சல்மா பார்வையாளர்களுடன் உரையாடினார். தனது கதை யாராவது ஒரு பெண்ணுக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுக்குமாயின் அதுவே தனக்கு திருப்தியைக் கொடுக்கும் என்றார். கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்கள் மற்றும் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக இளம் தலைமுறையினரான நேசன் மற்றும் சேகுவாரா போன்றவர்கள் பங்குபற்றி கலந்துரையாடலை வழி நடத்தியது வித்தியாசமாக இருந்தது. பாராட்டுக்கள்.

பெண்கள் கல்வி பெற்றால் அவர்கள் தங்கள் மீதான அடக்கு முறைகளில் இருந்து விடுதலை பெற முடியும் எனக் கூறப்பட்டது. அதாவது பெண்கள் கல்வி கற்றால் அவர்கள் தமது சொந்த காலில் நிற்கமுடியும் என விளக்கப்பட்டது. பெண்களுக்கு கல்வி முக்கியம்தான். ஆனால் கல்வி பெற்று அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்த பெண்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எனவே வெறுமனவே பொருளாதார விடுதலையினால் மட்டுமல்ல ஒரு புரட்சி மூலமே பெண்கள் முழு விடுதலை பெற முடியும் என நான் நம்பகிறேன்.

No comments:

Post a Comment