Sunday, June 30, 2013

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சோனியாகாந்தியுடன் சந்திப்பு

 அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சோனியாகாந்தியுடன் சந்திப்பு

ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் தலைவர்களில் ஒருவர். ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்சங்கத்தின் தலைவர். இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் இ.தொ.க வின் அமைச்சர். இவர் டில்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்துள்ளார். இவர் இலங்கையில் இருக்கும் நாட்களைவிட இந்தியாவில் இருக்கும் நாட்களே அதிகம் என்று கூறும் அளவிற்கு அடிக்கடி இந்தியா செல்பவர். எனவே இவரது இந்திய விஜயம் ஆச்சரியமானதொன்றல்ல. ஆனால் இம்முறை அவர் இந்தியா சென்று சோனியாகாந்தியை சந்தித்திருப்பது மிக முக்கியமான ஒரு செய்தியை வெளிப்படுத்துகிறது.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு தமிழின தலைவர். எனவே அவர் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு குறித்து சோனியாவுடன் பேசியிருக்க கூடும் என்றே பலரும் எதிர்பார்க்கக்கூடும். அல்லது இந்தியா ஒப்பந்தம் போட்ட மாகாணசபையை ரத்து செய்ய மகிந்த அரசு முயல்வது குறித்தாவது அவர் பேசலாம் என நம்பியிருக்ககூடும். ஆனால் அவர் இது எவை குறித்தும் பேசவில்லையாம். தான் மலையக மக்களின் கல்வி, சுகாதாரம் குறித்து பேசியதாக பேட்டி கொடுத்துள்ளார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் தனது மக்களின் கல்வி, சுகாதாரம் குறித்து இந்தியா சென்று அதுவும் சோனியாவுடன் பேசியதாக கூறுவது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர்களின் பிரச்சனை குறித்து பேசாவிடினும் பரவாயில்லை ஆகக்குறைந்தது மலையக மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்தாவது தொண்டமான் பேசாமல் விட்டிருப்பது அவர் தனது மக்களின் நலனை விட்டுக்கொடுத்து தொடர்ந்தும் அமைச்சு பதவியில் ஒட்டியிருக்கவே பிரியப்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

மாகாணசபையின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க மகிந்த அரசு முயல்கிறது. இதற்கு அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் கக்கீம் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் அமைச்சர் தொண்டமான் இது குறித்து அக்கறையில்லாமல் இருக்கிறார். பொதுபல சேனா மற்றும் மற்றும் சிங்கள உறுமய போன்ற பௌத்த அடிப்படைவாதிகளால் தமது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக அரசில் அங்கம் வகித்து கொண்டே தனது எதிர்ப்பை அமைச்சர் கக்கீம் பதிவு செய்கிறார். ஆனால் மலையக மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் குறித்து அமைச்சர் தொண்டமான் வாய் திறக்க மறுக்கிறார்.

மலையக தோட்ட தொழிளாளர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அந்த மக்களில் இன்னமும் பலர் சிறையில் வாடுகின்றனர். அவர்களை விடுவிக்க கூட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் முயலவில்லை. இப்போதும் கூட அவர் இலங்கை அரசிற்காக இலங்கை அரசின் துதுவராகவே இந்தியா சென்று சோனியாவை சந்தித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது அமைச்சுப் பதவிக்காக அவர் தொடர்ந்தும் தமது மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார். அவரை வரலாறு ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

காலம் சென்ற தலைவர் தொண்டமான் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். அவர் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்பேசும் மக்களிற்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அவரின் பேரனான அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அனைத்து தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்காவிடினும் ஆகக் குறைந்தது தன்னை நம்பியிருக்கும் மலையக தமிழர்களுக்காகவது துரோகம் இழைக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment