Tuesday, April 30, 2013

மாணவர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆறுதலாக அமையுமே தவிர ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நான் நம்பவில்லை.- கவிஞர் சல்மா


மாணவர்களின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆறுதலாக அமையுமே தவிர ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நான் நம்பவில்லை.- கவிஞர் சல்மா

எதிர்வரும் 06.04 13யன்று லண்டனில் நடைபெற இருக்கும் இலக்கிய சந்திப்பிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சல்மா அவர்களுடன் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02.04.13) ஈஸ்ட்காமில் நடைபெற்றது.
கவிஞரும், எழுத்தாளரும், கனிமொழியின் நெருங்கிய நண்பரும், தி.மு.க வின் முன்னனி செயற்பாட்டாளருமான சல்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு கலந்துரையாடல் மதிப்புக்குரிய பௌசர் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஒரு பெண் இலக்கியவாதி அதுவும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்திருப்பதால் அவருடைய கருத்துக்களை கேட்பதற்கு மிகவும் ஆவலுடன் சென்றிருந்தேன். அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் “இன்று தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டம் எந்தவித அரசியல் கட்சி சார்பில்லாமல் நடப்பது தனக்கு மகிழ்வு கொடுக்கும் அதேவேளையில் அவர்களது போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்குமேயொழிய ஒரு தீர்வை பெற்றுத்தரும் என தான் நம்பவில்லை” என்றார்.

அவர் மேலும் கூறுகையில் “1983லும் இதேபோல் பெரிய எழுச்சி ஏற்பட்டதாகவும் ஆனால் அந்த எழுச்சியால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வும் பெறப்படவில்லை. அதேபோல் இன்றைய எழுச்சியாலும் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கப்போவதில்லை” என்றார்.

அவர் பற்றிய ஆவணப்படம் கோலண்டிலும் ஜெர்மனியிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த மாதங்களில் லண்டனிலும் அது வெளியிடப்படுகிறது. தற்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எல்லா மத அடிப்படைவாதிகளும் ஒற்றுமையாக சந்திக்கும் ஒரு புள்ளி பெண் ஒடுக்கு முறை. எனவே பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சல்மா அவர்கள் மத அடிப்படைவாதிகளால் எந்தளவு எதிர்ப்புகளை சந்தித்திருப்பார் என்பதை அவரது பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு கொடுக்கப்படும் ஆதரவிலேதான் அவரது முயற்சியின் வெற்றி தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment