Tuesday, April 30, 2013

இரும்பு பெண்மணியின் இறுதி ஊர்வலம்.


இரும்பு பெண்மணியின் இறுதி ஊர்வலம்.

அவர் மக்களுக்கு இனிக்கவில்லை. ஏனெனில் அவர் கரும்பு பெண் அல்ல!
அவர் மக்களை உறுதியாக அடக்கினார். ஏனெனில் அவர் இரும்பு பெண்!

கடந்த புதன்கிழமை முன்னாள் பிரதமர் மாக்கிரட் தட்சர் அவர்களின் இறுதி ஊர்வலம் லண்டனில் நடைபெற்றது. அரச மரியாதைகளுடன் நடைபெற்ற இவ் நிகழ்வு மக்களின் வரிப் பணத்தில் 10 மில்லியன் செலவில் நடைபெற்றதால் மக்கள் மத்தியில் பலவித விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை இரக்கத்துடன் பரிசீலிக்காது உறுதியுடன் அடக்கியதால் ரஸ்சிய பத்திரிகைகளால் தட்சர் அவர்கள் “இரும்புப்பெண்”என கிண்டலாக அழைக்கப்பட்டார். மூன்று முறை பிரதமராக இருந்தவர் இறுதியில் பெரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அவரது கட்சியினராலேயே பாதியிலேயே பதவி பறிக்கப்பட்டார்.

பொதுவாக மரணம் ஒருவரது தவறுகளை மன்னிக்கும் என்பார்கள். அதுவும் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் பொதுவாக யாரும் எதிர்ப்பு காட்டுவதில்லை. ஆனால் அரசின் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தட்சருக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள் என்றால் இதிலிருந்து தட்சர் அவர்களின் ஆட்சிக்கால கொடுமைகளை புரிந்து கொள்ள முடியும்.

அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்படும்போது மக்கள் திரும்பி நின்று தங்கள் பின்பகுதியைக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் ஆட்சியில் இருக்கும்போது தங்களை பார்க்கவில்லை, எனவே அவரை தாங்கள் பார்க்க விரும்பவில்லை என காரணம் கூறினார்கள். அதுமட்டுமல்ல தட்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக ஒரு அரக்கியின் மரணத்தை கொண்டாடும் பழைய பாடலான “டிங் டொங்” பாடலை அதிக அளவில் தரவிறக்கம் செய்து அந்த வார முதல் வரிசைப் பாடலாக்கி தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

வழக்கத்திற்கு மாறாக மகாராணியார் தட்சர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கு பற்றியிருக்கிறார். பிரதமர் தாங்கள் எல்லோரும் “தட்சரிஸ்டுக்கள”; என்று அறிவித்தார். நல்லவேளை உதவி பிரதமர் அதை உடனடியாக மறுத்துவிடடார்.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 2.5 மில்லியனை தொட்டிருக்கும் இவ் வேளையில் அது குறித்து எந்த வித கவலையும் இன்றி பிரதமர் எந்த முகத்துடன் “தட்சரிசம” பற்றி பெருமையாக கூறமுடியும்?

பிரதமர் தன்னை “தட்சரிஸ்ட்”என்று பகிரங்கமாக அறித்து அடையாளப்படுத்தியுள்ளார். அதற்குரிய பதிலை மக்கள் அவருக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தொழிலாளர்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி முதலாளித்துவத்திற்கு செயத் சேவைக்காக முதலாளித்துவம் தட்சரை நன்றியுடன் நினைவு கூரலாம். ஆனால் மக்கள் தட்சரின் தவறுகளை மன்னிப்பதற்கோ, மறப்பதற்கோ தயாராக இல்லை என்பதையே அவருக்கான எதிர்ப்பு காட்டுகிறது.

No comments:

Post a Comment