Tuesday, April 30, 2013

• தமிழீழ தீர்வு உணர்ச்சிபூர்வமான தீர்வா? உணர்வுபூர்வமான தீர்வா?

• தமிழீழ தீர்வு
உணர்ச்சிபூர்வமான தீர்வா?
உணர்வுபூர்வமான தீர்வா?

தமிழீழ வாக்கெடுப்பு கோரி அண்மையில் தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழர்கள் தொடர்பாக பல தீர்மானங்கள் இந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவற்றுக்கு என்ன நடந்ததோ அதுவே இதற்கும் நடக்கும்? ஆம் இதுவும் ஒரு பயனும் அற்ற தீர்மானவாகவே இருக்கப்போகிறது. ஆனால் சில தமிழ் உணர்வாளர்கள் இதை எதோ வரலாற்று திருப்பு முனை என வர்ணிக்கின்றனர். அது எப்படி என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த தமிழீழம் குறித்து நான் சில வினாக்களை கேட்க விரும்புகிறேன்.

(1)தமிழீழ தீர்வை முன்வைத்தவர்கள் த.வி. கூட்டணி. இன்று அதன் தலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழீழ தீர்வை கைவிட்டுவிட்டதாக கூறுவது எத்தனை தமிழ்நாட்டு தலைவர்களுக்கு தெரியும்?

(2) 1983ல் 36 இயக்கங்கள் இருந்ததாகவும் அதில் ஒரேயொரு இயக்கமான “பேரவை” இயக்கம் தவிர மற்ற எல்லா இயக்கங்களும் தமிழீழ தீர்வை முன்வைத்தன. ஆனால் இன்று இதில் எத்தனை இயக்கங்கள் தமிழீழ தீர்வை முன்வைக்கின்றன என்று தமிழ்நாட்டு தலைவர்கள் யாராவது கூறமுடியுமா?

(3)இலங்கையில் சுமார் 2 கோடி சனத்தொகை இருப்பதாகவும் இதில் தமிழ் பேசும் மக்கள் சுமார் 40 லட்சம் பேர் என கூறுகின்றனர். இதில் வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்கள் 20 லட்சம் எனவும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் சுமார் 10 லட்சம் எனவும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் சுமார் 10 லட்சம் எனவும் அறிய வருகிறது. இந்த தமிழீழ தீர்வு மலையக தமிழர்களுக்கு எவ்வித பயனும் தராது. எனவே அவர்கள் இதனை ஆதரிப்பதில்லை. தமது இனம் பிரிக்கப்படும் என்பதால் முஸ்லிம்களும் ஆதரவு தருவதில்லை. இது தமிழக தலைவர்களுக்கு தெரியுமா?

(4)இவர்கள் கேட்பதுபோல் தமிழீழ வாக்கெடுப்பிற்கு விட்டு அது தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டால் அப்புறம் தமிழ்நாட்டு தலைவர்கள் என்ன செய்வார்கள்?

(5)சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்காக தமிழீழம் முன்வைக்கப்படுகிறதா அல்லது பிரிந்து சென்றால் நன்றாக வாழமுடியும் என்பதால் தமிழீழம் முன்வைக்கப்படுகிறதா? இது பற்றி யாராவது தமிழ்நாட்டு தலைவர்கள் கூறுவார்களா? ஏனெனில் இதற்கான பதில் தமிழ்நாட்டு விடுதலைக்கும் பொருந்தும் அல்லவா?

தமிழீழம் என்பது வெறும் உணர்ச்சி பூர்வமாக இல்லாமல் உணர்வுபூர்வமாக அமைய வேண்டும். எனவே தமிழீழம் குறித்து வினா எழுப்புவோரை துரோகிகளாக சித்தரிக்காமல் உரிய பதிலை வழங்க வேண்டும் எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment