Tuesday, April 30, 2013

மத்தளத்திற்கு ஒரு பக்கமே அடி! மேளத்திற்கு இரண்டு பக்கம் அடி! ஆனால் இலங்கை தமிழ் மீனவனுக்கு எல்லா பக்கமும் அடி!

• பரிதாபத்திற்குரிய மீனவர்கள்

மத்தளத்திற்கு ஒரு பக்கமே அடி!
மேளத்திற்கு இரண்டு பக்கம் அடி!
ஆனால் இலங்கை தமிழ் மீனவனுக்கு எல்லா பக்கமும் அடி!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மீனவர்கள் போல் அதிக ஆதரவு அளித்தவர்கள் யாரும் இல்லை. அதுபோல் அவர்களைப் போல் அதிக இழப்புகளை சந்தித்தவர்களும் இல்லை. ஆனால் இன்றுவரை அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லையே என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எத்தனை இழப்புகள் வந்தபோதும் அது இலங்கை தமிழ் மீனவராக இருந்தாலும் சரி அல்லது இந்திய தமிழ் மீனவராக இருந்தாலும் சரி ஆரம்பம் முதல் உறுதியாக ஆதரவு தந்து வருபவர்கள் அவர்கள். அதனாலேயே பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகிறவர்கள்.

இதுவரை 600க்கு மேற்பட்ட இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து இநதிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இறந்தவர்கள் தமிழ் மீனவர்கள் என்பதுடன் அவர்களுக்கு என ஒரு அரசியல் பலமும் இல்லை என்பதும் ஒரு காரணமாகும்.

அதேபோல் இலங்கை தமிழ் மீனவர்கள் சந்தித்து வரும் கஸ்டங்களோ அல்லது அனுபவித்து வரும் துன்பங்களோ சொல்லில் அடங்காது. கடலில் அதிக தூரம் சென்று மீன் பிடிக்க கூடாது, அதிக வலு இயந்திரம் பாவிக்க கூடாது என்று ஆரம்பத்தில் கட்டப்பாடு விதித்த இலங்கை அரசு காலப்போக்கில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதையே தடுத்துவிட்டது. மாற்றுவழியோ அல்லது நிவாரணமோ இன்றி ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடிய அரசின் கோர செயல் குறித்து யாருமே கவலைப்படவில்லை. அவர்கள் எப்படி சாப்பிட முடியும் வருமானம் இன்றி எப்படி வாழ முடியும் என்று கூட யாரும் அக்கறை கொள்ளவில்லை.

யுத்தம் முடிந்த இன்றும்கூட பல கட்டுப்பாடுகள். அவர்கள் காலம்காலமாக தொழில் செய்துவந்த பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் தொழில் நசுக்கப்படுகிறது. இன்னொரு புறம் இவர்களின் பகுதியில்வந்து இந்திய தமிழ் மீனவர்கள் தொழில் செய்கிறார்கள். இவர்களின் விலை உயர்ந்த வலையை திருடி செல்கிறார்கள்.

ஒரு புறம் கடற்படை தொல்லை. இன்னொரு புறம் சிங்கள மீனவர் தொல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய தமிழ் மீனவர்களின் அத்து மீறல்கள். இவ்வாறு எல்லா பக்கமும் அடிவாங்கி பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்து யாருமே குரல் கொடுக்காதது மிகப் பெரிய துரதிருஸ்டமே.

அமைச்சர் டக்ளஸ தேவானந்தா அவர்கள் இவர்களுக்காக குரல் கொடுத்துவிட்டார் என்பதற்காக இவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து தமிழ் தேசிய சக்திகளோ அல்லது இந்தியாவில் தமிழீழத்திற்காக போராடுவதாக கூறும் தலைவர்களோ உதவ முன்வராதது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமே.

இனியாவது இலங்கை தமிழ் மீனவனின் துன்பத்தை புரிந்து கொள்வோம். அவனுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வோம்.

No comments:

Post a Comment