Tuesday, May 28, 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது- இந்திய தூதர் அசோக் காந்தா

• இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது- இந்திய தூதர் அசோக் காந்தா

இலங்கையின் அரசின் விருப்பங்களுக்கு எதிரான வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என்றும் இலங்கை அரசுடான உறவுகளில் எவ்வித விரிசலும் கிடையாது என்றும் இலங்கைக்கான இந்திய தூதர் அசோக்காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்காக ஜெயா அம்மையார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். கலைஞர் டெசோ நடத்தலாம். மாணவர் போராடலாம். ஏன் சிலர் தீக்குளிக்கலாம். இவையெல்லாம் இலங்கை தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்குமேயொழிய இந்திய அரசின் போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதையே தூதரின் பேச்சு உணர்த்துகிறது.

மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையின் பெறுமதியை 10ஆயிரம் மில்லியன் டொலர்களாக அதிகரிக்க இருநாடுகளின் அரசாங்கங்களும் தீர்மானித்துள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவிக்கிறார்.

இன்று இலங்கையில் 460 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் 450 நிறுவனங்கள் இந்தியாவினுடையது. வெகுவிரைவில் முழு நிறுவனங்களும் இந்தியாவினுடையதாக மாறும் நிலையையே தூதர்களின் கூற்றுக்கள் தெரிவிக்கின்றன.

இந்திய, இலங்கை தரகு முதலாளிகளின் நலனுக்காக , இந்திய விரிவாதிக்க நலனுக்காக, இலங்கை தமிழ் மக்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இலங்கை இனப்பிரச்சனையை இந்தியா தனது நலன்களுக்கு பயன்படுத்துகின்றது என்பது தமிழ் தலைமைகளுக்கு நன்கு தெரிந்தும் அவை தமது அற்ப சலுகைகளுக்காக மக்களுக்கு துரோகம் இழைக்கின்றன. உதாரணமாக த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, அடைக்கலநாதன் முதலானோரின் குடும்பங்கள் இந்தியாவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இன்னொரு தலைவரின் மகள் டெல்லி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல சில சிறிய அமைப்புகளின் தலைவர்களுக்கூட மாதாந்த செலவுக்கு கொழும்பு இந்திய தூதரமே பணம் வழங்குகிறது. இப்படி எலும்புத்துண்டுகளை வீசிஎறிந்து தனது விரிவாதிக்த்தை இந்திய அரசு சாதித்து கொள்கிறது.

தமிழ் சிங்கள உழைக்கும் மக்கள் ஜக்கியப்பட்டு இந்திய விரிவாதிக்கத்தை எதிர்க்காதவரை இலங்கையில் இனப்பிரச்சனை மட்டுமல்ல எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை என்பதே உண்மை.

No comments:

Post a Comment