Tuesday, May 28, 2013

ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தாண்டிக்குளம் என்னும் இடத்தில் ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்களால் அதிர்ஸ்டவசமாக தாய் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் குழந்தைகள் மூன்றுபேரும் காப்பற்றப்பட முடியாமல் இறந்துவிட்டனர். தாயிடம் தற்கொலைக்குரிய காரணம் கேட்டபோது வறுமையே காரணம் எனக் கூறியுள்ளார். இது தமிழ் பகுதிகளில் மட்டுமல்ல இலங்கையில் சிங்களப் பகுதிகளிலும் இதே நிலையே இன்று காணப்படுகிறது. அங்கும் வறுமையில் பல சிங்கள மக்கள் தற்கொலை செய்கின்ற செய்திகள் நாளாந்தம் வந்த வண்ணம் இருக்கின்றன.

நாட்டின் அனைத்து துன்பங்களுக்கும் பயங்கரவாதமே காரணம் என்று கூறி புலிகளையும் 40 ஆயிரம் தமிழ் மக்களையும் அழித்தவர்கள் இன்று யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் மக்களின் வறுமையை போக்காது அவர்கள் தற்கொலை செய்யும் நிலையை வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒருபுறம் மக்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்கின்றனர். இன்னொரு புறம் சொந்த மக்களையே கொன்று குவித்ததை அரசு வெற்றி விழாவாக கொண்டாடுகிறது. உலகிலேயே தனது சொந்த மக்களைக் கொன்றதை வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கும். பயங்கரவாதத்தை அழிக்க உதவி செயகிறோம் எனக்கூறிய இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் மக்களைக் கொல்ல ஆதரவு அளித்தது மட்டுமன்றி இன்று மக்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்யும்போது எந்தவித உதவியும் செய்யாது கொலைகார அரசைக் கட்டிக்காத்து வருகின்றன.

மக்கள் ஒன்றினைந்து தங்களை தூக்கியெறிந்து விடுவார்கள் என்று அஞ்சிய அரசு மீண்டும் மக்கள் மத்தியில் இனவாத்தை தூண்டுகிறது. அதற்கு ஒத்துழைப்பது போல் தமிழகத்திலும் புலத்திலும் சில சக்திகள் கொஞ்சம் கூட பொறுப்பற்ற தன்மையில் உதவி வருகின்றமை வெட்கக்கேடானது.

புலிகளின் முன்னாள் தளபதிகள் கே.பி , தயா மாஸ்டர் ,தமிழினி போன்றோர் மறுவாழ்வு அளிக்கப்பட்டுளனர். ஆனால் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். மறுசீரமைப்புக்கு என வெளிநாடுகளால் வழங்கப்படும் பணம் ஆட்சியில் உள்ளவர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் மக்களோ வாழ வழியின்றி தற்கொலை செய்கின்றனர். இது ஏன் என்று கேட்டால் “ மகிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டால் தமிழர்கள் முன்னேற முடியும் “ என்று அமைச்சர் கருணா கூறுகிறார். இந்த மகிந்த சிந்தனை என்றால் என்ன என்று யாராவது புரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்கள். ஏனென்றால் எனக்கு அது சுத்தமாக புரியவில்லை?

No comments:

Post a Comment