Tuesday, December 23, 2014

சிறப்புமுகாம் என்னும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்

சிறப்புமுகாம் என்னும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்

அமெரிக்காவின் குவாண்டநாமோ சித்திரவதை முகாம் பற்றி அறிந்த அளவிற்கு, கிட்லரின் யூத சித்திரவதை முகாம்கள் பற்றி அறிந்த அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் பற்றி உலகம் இதுவரை அறியவில்லை. இதில் வேதனை என்னவென்றால்  தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்திரவதை முகாம் கொடுமைகள் பற்றி தமிழர்களே இன்னும் முழுமையாக அறியாமல் இருப்பதே.

அமெரிக்காவின் குவாண்டநாமோ சிறை கொடுமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகக்குறைந்தது அதை ஒத்துக்கொள்கிறார். அந்த வதைமுகாமை மூடுவதற்கு தான் எவ்வளவோ முயன்றதாக பேட்டி கொடுக்கிறார். ஆனால் தமிழ் அகதிகளின் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை ஒத்துக்கொள்வதுமில்லை. அது குறித்து வாய் திறப்பதும் இல்லை.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு எனறு தமிழ்மக்கள் பெருமையாக கூறிவருகிறார்கள். ஆனால் அது தன்னை நம்பி வந்த தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகின்றது என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ள தவறுகிறார்கள்.

சிறப்புமுகாம் என்றால் என்ன?
சிறப்புமுகாம் என்பது 1946ம் ஆண்டு அயல்நாட்டார் சட்டம் 3(2)நு ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்து முகமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் முகாம் ஆகும். சட்டப்படி மாவட்ட ஆட்சிதலைவரின் அதிகாரத்தின் கீழ் உள்ள முகாம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் நடைமுறையில் இந்த முகாம் தொடர்பான அனைத்து அதிகாரமும் சட்டவிரோதமாக கியூ பிரிவு பொலிசாரிடமே வழங்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள முகாமாவே இது இயங்கி வருகிறது.

சிறப்பு முகாம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
சிறப்பு முகாம் என்பது முதன் முதலாக 1990ம் ஆண்டு உலக தமிழனத் தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்களால் அகதியாக வந்த ஈழத் தமிழர்களை  அடைத்து வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த கலைஞர் அரசு தவறிவிட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டியபோது மத்திய அரசை திருப்திப் படுத்துவதற்காக கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் உள்ள திப்புமகாலில் முதலாவது சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டது.

சிறப்பு முகாமில் முதலில் அடைக்கப்பட்டவர்கள் யார்?
தமிழீழ விடுதலை புலிகளை கட்டுப்படுத்த சிறப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டதாக அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் உண்மையில் அதில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அல்லர். மாறாக சாதாரண அகதி முகாமில் வாழ்ந்து வந்த அப்பாவி அகதிகளே. அவர்கள் படிக்க வசதி, நல்ல வேலைவாய்ப்பு போன்றவை தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்கள். அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட பின்பே தெரிந்து கொண்டார்கள்.


வேலூர் சிறப்புமுகாமில் துப்பாக்கிசூடு ஏன் நடத்தப்பட்டது?
வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்து கோபம் கொண்டார்கள். தங்களை உடனே விடுதலை செய்யும்படி கோரினார்கள். உணவு உட்கொள்ள மறுத்தார்கள். ஆனால் அவர்களை எந்த அரசு அதிகாரிகளும் சென்று சந்திக்கவும் இல்லை. அவர்களது கோரிக்கைக்கு தகுந்த பதில் அளிக்கப்படவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவ் அகதி இளைஞர்கள் திப்புமகால் வாயிற் கதவுக்கு தீவைத்தார்கள். பொலிசாரை நோக்கி கற்களை வீசினார்கள்.

பொலிஸ் கமிசனர் தேவாரம் தலைமையில் வந்த பொலிசார் அவ் அகதி இளைஞர்களை அடக்குவதற்காக துப்பாக்கி பிரயோகம் நிகழ்த்தினார்கள். அதனால் அப்பாவி இளைஞர்கள் இருவர் பலியானார்கள். பல இளைஞர்களை கட்டைகளை கொண்டு தாக்கினார்கள். இறுதியாக 130 இளைஞர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

உலகில் நிராயுதபாணியான அகதிகளை துப்பாக்கியால் சுட்டு அடக்கிய பெருமை தமிழக பொலிசாரையும் அதற்கு உத்தரவு வழங்கிய கலைஞர் கருணாநிதியையுமே சேரும். தங்களை விடுதலை செய்யுமாறு கோரிய அகதிகளை “பிரியாணி கேட்டு கலகம் செய்தார்கள்” என்று பத்திரிகைகள் தம் பங்கிற்கு எழுதி அகதிகள் மீது அவதூறு பரப்பினார்கள்.

எதிர்க்கட்சிதலைவராக இருக்கும்போது சிறப்புமுகாம் பற்றி கலைஞர் கருணாநிதி கூறியது என்ன?
மத்திய அரசை திருப்திப்படுத்த சிறப்பு முகாம் என்னும் கொடிய சித்திரவதை முகாமை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்திருந்தாலும்கூட மத்திய அரசானது அவரது அரசை டிஸ்மிஸ் செய்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் வேலூர் கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சிலர் சுரங்கம் தோண்டி தப்பியிருந்தார்கள். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி  தான் சிறப்பு முகாமை சில மாதங்களின் பின் மூட இருந்ததாகவும் ஆனால் அதற்குள் தனது அரசு கலைக்கப்பட்டுவிட்டதால் தன்னால் மூட முடியாமற் போய்விட்டது என அறிக்கை விட்டார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது சிறப்பு முகாமை மூடுவதற்கு தான் நினைத்திருந்ததாக கூறிய கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு முகாமை மூடுவார் என சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த அகதிகள் நம்பினார்கள். அதன் பின் இரண்டு முறை ஆட்சிக்கு கலைஞர் வந்துவிட்டார். ஆனால் அவர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடுவதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெயா அம்மையார் சிறப்பு முகாம்கள் குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பொதுவாக கலைஞர் திட்டங்களுக்கு எதிராக செயற்படும் குணம் கொண்ட ஜெயா அம்மையார் கலைஞர் ஆரம்பித்த சிறப்பு முகாம்களை மூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ செங்கல்பட்டு, பூந்தமல்லி, மேலூர், துறையூர், திருவையாறு, பழனி என பல்வேறு இடங்களில் இருந்த கிளைச் சிறைகளில் புதிய சிறப்புமுகாம்களை உருவாக்கினார். ராஜீவகாந்தி கொலையைக் காரணம் காட்டி பல அப்பாவி அகதிகளை பிடித்து சிறப்புமுகாம்களில் அடைத்தார். கலைஞரும் ஜெயா அம்மையாரும் ஒற்றுமையாக செயற்பட்ட ஒரேயொரு விடயம் இந்த சிறப்பு முகாம் விடயம் மட்டுமே! ஈழ அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து துன்புறுத்துவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்கள் ஆட்சிக் காலங்களில் இருவரும் நன்கு காட்டினார்கள்.

சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாம் என சிறப்பு முகாம் ஏன் கருதப்படுகிறது?
சிறைச்சாலையானது கொடிய சித்திரவதைகள் நிறைந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த சிறைகளில் வழங்கப்படும் அற்ப சலுகைகள் கூட சிறப்பு முகாம்களில் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் என கருதப்படுகிறது.

சிறையில் அடைக்கப்படும் கைதிகள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சிறைவிதிகள் உண்டு. ஆனால் இந்த சிறப்புமுகாமில் அடைக்கப்படும் அகதிகள் உரிமைகள் தொடர்பாக எந்த விதியும் இல்லை. இதனால் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் (றுP 15044ஃ91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் 'அருணாசலம்" மற்றும் 'பிரதாப்சிங்" அவர்கள் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவெனில்,
(1)சிறப்பு முகாமில் உணவு வழங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக ஓரு உதவி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
(2)சிறப்பு முகாமில் வைக்கப்படுபவர்களுக்கு அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதேயன்றி மற்றும்படி அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(3)சிறப்பு முகாமில் வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் குடும்பத்தலைவர்களை வரவழைத்து தங்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தவர்களின் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
(4)சிறப்பு முகாமிற்குள் இருப்பவர்களை சிறையில் சிறைவாசிகளை 'லாக்கப்" செய்வதுபோல் (செல்களில் வைத்துப்  ப+ட்டுதல்) லாக்கப் செய்வது கூடாது. முகாமின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
(5)பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி விரும்பிய நேரம் பேசுவதற்கும், பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
(6)போலீசார் காவலுக்கு மட்டும் அதுவும் சிறப்பு முகாமின் வெளிப்புறத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மற்றும்படி தாசில்தார் பொறுப்பில் தான் முகாம் நிர்வகிக்கப்படும்.                      
(7)நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்தச் செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பிவைக்கப்படும்.
                                        
தமிழக அரசு கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேற்கண்ட உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் உண்மையென்னவெனில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அவ்வுரிமைகளில் ஒன்றைக் கூட தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வழங்கவில்லை. மாறாக தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் மனிதாபிமானமற்ற முறையில், ஈவிரக்கமின்றி, தமிழ் அகதிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றனர்.

தமிழக பொலிஸ் சிறப்புமுகாம் அகதிகளை அடித்து துன்புறுத்துகிறதா?
தமிழக பொலிஸ் பெண் அகதிகளை பாலியல் வல்லுறவு செய்கிறதா?
சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை தமிழக பொலிஸ் அடித்து சித்திரவதை செய்கிறது. அகதி பெண்களை பாலியல் வல்லுறவு செய்கிறது. மனதாபிமாமற்ற முறையில் சட்ட விரோதமாக செயற்படுகிறது என்பதை பல முறை தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மனிதவுரிமை கமிசன் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நீதிமன்றங்களில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சிவா என்பவர் கரூர் நீதிமன்றில் 17.10.1994யன்று தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து  வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
 '21.12.93 அன்று உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் வெறிபிடித்த போலீசார் கும்பலாகச் சேர்ந்து என்னைத் தாக்கினார்கள். இதனால் என் கால் முறிந்தது. அன்று என்னை மட்டுமல்ல முகாமில் வைக்கப்பட்டிருந்த இன்னும் பலரையும் இவ்வாறு அடித்துத் துன்புறுத்தினர். அவர்கள் எவ்வாறு சித்திரவதை செய்தனர் என்பதைக் கூறுவதற்கு என் நாக்கு கூசுகிறது. அந்த அளவிற்கு கேவலமான முறையில் கொடுமை செய்தனர். கால் முறிந்து நடக்க முடியாமல் நான் வேதனைப்பட்ட போதும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. எனக்கு மருத்துவ சிகிச்சையும் தரப்படவில்லை. 

இச்சிறப்பு முகாமில் தாய், தந்தை, பிள்ளைகளை பிரித்து அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு தனியாகப் பிரித்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களை தமது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் மருத்துவமனைக்கென அழைத்துச் சென்று வெளியே வைத்து தமது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறு போலீஸ் அதிகாரிகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயரதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டும் மனுக் கொடுத்தும் இதுவரை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் நடத்தப்படுகிறதென்றே நான் கருதுகிறேன்.

அத்துடன் இங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இந்நிலையில் நோட் புக், பேனா, பாடப்புத்தகங்கள் எவற்றையும் சொந்தச் செலவில் பெற்று படிப்பதற்கும்கூட அனுமதிக்கவில்லை." என்று தனது வாக்குமூலத்தில் சிவா தெரிவித்துள்ளார்.

சிவா என்பவரின் இந்த நீதிமன்ற வாக்குமூலம் தமிழக பொலிஸ் சிறப்புமுகாம் அகதிகளை அடித்து துன்புறுத்துகிறது என்பதற்கும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் பொலிசாரினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதற்கும் சாட்சியாக உள்ளது. ஆனால் கரூர் நீதிமன்றமோ அல்லது தமிழக அரசோ இதுவரை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

ஜெயா அம்மையாருக்கு ஒரு நீதி 
சிறப்புமுகாம் அகதிகளுக்கு இன்னொரு நீதி. 
இது என்ன நியாயம்?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இங்கு ஜெயா அம்மையாருக்கு ஒரு நீதி, சிறப்புமுகாம் அகதிகளுக்கு இன்னொரு நீதி வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?

66கோடி ரூபா மக்களின் பணத்தை சுருட்டிய குற்றத்திற்காக ஜெயா அம்மையாருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் நான்கு வருட தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு 21 நாட்களில் ஜாமீன் விடுதலை அளித்துள்ளது.  அதேவேளை அகதிகள் எந்தவித குற்றச்சாட்டும் இன்றி எந்தவித தண்டனையும் இன்றி வருடக் கணக்காக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றங்கள் அக்கறையற்று இருப்பது என்ன நியாயம்?

ஜெயா அம்மையாருக்கு மட்டுமன்றி அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என்று காரணம் கூறி ஜாமீன் விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால் சிறப்புமுகாமில் உண்மையாகவே உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதே காரணங்களுக்காக  விடுதலை செய்யவில்லை.  இது என்ன நியாயம்?

சிறையில் தன்னுடன் தங்கியிருக்க தனது தோழி சசிகலாவுக்கு அனுமதியளிக்குமாறு ஜெயா அம்மையார் கோரினார். ஆனால் சிறப்புமுகாமில் கணவன் மனைவி குழந்தைகளைக்கூட பிரித்து வைத்திருப்பதோடு அவர்கள் பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிறையில் ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் சலுகைகள்கூட சிறப்புமுகாமில் அப்பாவி அகதிகளுக்கு மறுப்பது என்ன நியாயம்?

தமிழக அரசு தவறிழைத்தால் நீதிமன்றில் முறையிடலாம். 
நீதிமன்றம் கவனிக்க தவறினால் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடலாம். 
சர்வதேச அமைப்புகளும் கண்டுகொள்ளாவிடின்  என்ன செய்ய முடியும்?

சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து பலர் நீதிமன்றங்களில் முறையிட்டார்கள். குறிப்பாக நான் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவேளை எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் நீதிமன்றங்களில் நேரிடையாக முறையிட்டேன். அதுமட்டுமன்றி மக்கள் உரிமைக்கழக வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம் எனக்காக சென்னை உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அரசு இணச்செயலர் பாஸ்கரதாஸ் மன்னிப்பு கோரியதுடன் இனி என்னை சட்டரீதியாக நடத்தப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால் அதன் பின்பும்கூட தமிழக அரசு என்மீது மட்டுமல்ல சிறப்புமுகாம் அகதிகள் அனைவர் மீதும் சட்டவிரோதமாகவே செயற்பட்டு வருகிறது.

நான் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளை தோழர் தமிழ்முகிலன் மற்றம் பல மனிதவுரிமை ஆர்வலர்கள் இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவந்த போராட்டத்தின் பயனாக மனிதவுரிமைக்கமிசன் தலைமை நீதிபதி வேலூர் சிறப்புமுகாமிற்கு விஜயம் செய்து நேரில் கொடுமைகளைப் பார்வையிட்டார். இனிமேல் இவ்வாறு நிகழாவண்ணம் தான் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஆனால் அதன் பின்னும் கொடுமைகள் அதிகரித்ததுதான் மிச்சம்.

இந்திய நீதிமன்றங்களினால் தமிழக அரசின் இக் கொடுமைகளை தடுத்து நிறுத்த எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வேறு வழியின்றி நானே ஜ.நா மனிதவுரிமைக் கமிசன் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை போன்றவற்றுக்கு மனுக்கள் அனுப்பினேன். எனது மனுக்களை பெற்றுக்கொண்டதாக அறிவித்த அந்த அமைப்புகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு தொடர்ந்து தவறு இழைத்து வருகிறது. இது குறித்து நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. சர்வதேச அமைப்புகளும் இது குறித்து அக்கறையற்று இருக்கின்றன. இந் நிலையில் அந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாரில் நம்பிக்கை வைக்க முடியும்? அவர்கள் விடுதலை பெறுவதற்கு என்னதான் செய்ய முடியும்?

சிறப்புமுகாம்கள் ஏன் இன்னும் மூடப்படவில்லை?
புலிகளை அடைத்து வைப்பதற்காகவே சிறப்பு முகாம்களை உருவாக்கியதாக கலைஞர் கருணாநிதி கூறினார். அதன் பின்பு வந்த ஜெயா அம்மையாரும் புலிகள் நடமாட்டம் இருப்பதால் சிறப்புமுகாமை வைத்திருப்பதாக கூறினார். ஆனால் தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதனை ஏற்றுக்கொண்டு ராஜீவ்காந்தி கொலையில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் பெயரை நீக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் புலிகளின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாமை மூட மறுத்து வருகிறது.

யுத்தம் முடிந்து 5 வருடங்களாகிவிட்டது. மகிந்த ராஜபக்சகூட முள்வேலிக்குள் அடைத்து வைத்திருந்த தமிழர்களை பெரும்பாலும் விடுதலை செய்துவிட்டார். ஆனால் தமிழக அரசு மட்டும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது.

சிறப்புமுகாம்களின் தற்போதைய நிலை என்ன?
தற்போது திருச்சி மற்றம் பூவிருந்தவல்லி என்னும் இரு இடங்களில் சிறப்புமுகாம் உள்ளது. அதில் பல அப்பாவி அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை உண்ணாவிரதம் இருந்துள்ளனர். ஆனால் காந்தி தேச ஆட்சியாளர்கள் அந்த அகதிகளின் அகிம்சை போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை. மாறாக காவலுக்கு இருந்த தமிழக பொலிஸ் அதிகாரிகள் “தேவடியா அகதி நாய்களே! அடித்து போட்டால் ஏன் என்று கேட்க யாரும் இல்லை. உங்களுக்கு உண்ணாவிரத போராட்டம் கேட்குதா?” எனக் கேட்டு அந்த அப்பாவி அகதிகளைத் தாக்கியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி அந்த அகதிகள் 17 பேர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை சாகவும் விடாது காப்பாற்றிய பொலிசார் அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அகதிகளை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொடுமைப்படுத்தும் ஒரே அரசு உலகத்தில் தமிழக அரசாகவே இருக்கும்!

சிறப்பு முகாமும் தமிழக அரசியல் தலைவர்களும்

கலைஞர் கருணாநிதி
முதன் முதலில் சிறப்புமுகாமை உருவாக்கி அதில் அப்பாவி அகதிகளை அடைத்தவர் உலக தமிழின தலைவர் என தன்னை பெருமையாக அழைத்துக் கொள்ளும்  கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர் அதன் பின்பு பல முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டார். ஆனால் தான் உருவாக்கிய சிறப்பு முகாமை மூடுவதற்கு அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழீழம் அமைக்க “டெசோ” மாநாடு நடத்துகிறார். உண்மையில் அவர் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமாயின் முதலில் தான் உருவாக்கிய சிறப்புமுகாமை  மூடியிருக்க வேண்டும். அவர் சிறப்புமுகாமை மூடாதது மட்டுமல்ல தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் அதனை மூடுமாறு கோரிக்கைகூட வைக்க மறுக்கிறார். இந் நிலையில் இவர் ஈழத் தமிழகள் மீது அக்கறை கொண்டு “டெசோ” மாநாடு நடத்துகிறார் என்று எப்படி நம்ப முடியும்?

ஜெயா அம்மையார்
ஜெயா அம்மையார் தான் பதவிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்று தருவேன் என்றார். ஆனால் அவர் பதவிக்கு வந்த பின் அது குறித்து பேசுவதில்லை. அவர் ஈழம் பெற்றுத்தராவிட்டாலும் பரவாயில்லை, சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்துவைத்திருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கும்கூட தயார் இல்லை. இந்நிலையில் அவரை “ஈழத்தாய்” என சிலர் அழைப்பது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

வைகோ
வைகோ அவர்கள் சிறப்பு முகாமை மூடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் அவருடைய கட்சியினர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சிறப்புமுகாமை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த வைகோ அவர்கள் விரும்பியிருந்தால் இந்த சிறப்புமுகாமை மூடுமாறு உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருக்கமுடியும். அதன் மூலம் சிறப்புமுகாமை மூட வழி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அது குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ் அவர்களும் சிறப்புமுகாமை மூடுமாறு பல முறை கோரியிருக்கிறார் போராட்டமும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவருடைய மகன் அன்புமணி மத்திய அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சிறப்புமுகாமை மூடுவதற்கு அவர்மூலம் எதாவது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல தமிழகத்தில்கூட அவருடைய கட்சியின் ஆதரவுடனே தமிழக அரசு இயங்கி வந்தது. அப்போதும்கூட டாக்டர் ராமதாஸ் அவர்கள் விரும்பியிருந்தால் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறப்புமுகாமை மூடியிருக்க முடியும். ஆனால் அவரும்கூட அக்கறையற்று இருந்துள்ளார்.

திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சிறப்பு முகாமை மூடுமாறு கோரிக்கை விட்டிருக்கிறார். ஆனால் அவருடைய ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த வேளையில் அவர் ஒருமுறைகூட பாராளுமன்றத்தில் இந்த சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து குரல் எழுப்பவில்லை. இது ஏமாற்றமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் சிறப்புமுகாமை மூடி அதில் உள்ள அகதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். பல்வேறு மனிதவுரிமை ஆர்வலர்கள் இந்த கொடுமைகள் குறித்து குரல் எழுப்பியுள்ளனர். சர்வதேச அமைப்புகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் உலகத்தின் கவனமும் குறிப்பாக தமிழ்மக்களின் கவனமும் இந்த கொடுமை குறித்து கவனம் கொள்ளாததாலேயே அகதிகள் மீதான சிறப்புமுகாம் கொடுமைகள் தொடருகின்றன.

ஈழத்தமிழ் தலைவர்களின் கண்டு கொள்ளாத அவல நிலை
ஈழத் தமிழ் தலைவர்கள் அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து வருகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் ஒருமுறைகூட சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதில்லை. அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழகத்தில் இருக்கும் அகதிகளை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு கோரியபோதும்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோராதது ஈழதமிழ்மக்களின் தலைவர்களின் அவல நிலையைக் காட்டுகிறது.

இதைவிட பெரிய கொடுமை என்னவெனில் அமெரிக்காவில் இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் என தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் உருத்திரகுமார் அவர்கள்கூட ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயா அம்மையாரை விடுதலை செய்யமாறு அறிக்கை விடுகிறார். ஆனால் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு அவரால் ஒருபோதும் அறிக்கை விடப்படவில்லை.

சிறப்புமுகாம் கொடுமைக்கு என்னதான் முடிவு?
உலகத்தின் கவனத்திற்கு குறிப்பாக தமிழக மக்களின் கவனத்திற்கு சிறப்புமுகாம் கொடுமைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழக மக்களால் மாத்திரமே இந்த கொடுமைக்கு முடிவு கட்ட முடியும். அந்த மக்களால் மட்டுமே சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய முடியும். எனவே அவர்கள் கவனத்திற்கு இந்த சிறப்புமுகாம் கொடுமைகளை கொண்டு செல்வதே விடுதலையை விரும்புபவர்களின் பணியாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment