• ஜனநாயகவிரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிப்போம்!
நேற்று (03.01.2015) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் சிறீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 7.30 மணிவரை நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் , மற்றும் பிரமுகர்கள் பலர் உரையாற்றினார்கள். அனைவரும் ஜனநாயக விரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என மூவின மக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முன்னனி சோசலிச கட்சி சார்பில் சேனக்க என்ற சிங்கள இனத்தை சேர்ந்த சகோதரர் உரையாற்றினார். அவர் தமது உரையில் மகிந்தவோ அல்லது மகிந்தவிற்கு பதிலாக மைத்திரியோ வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன் தமிழர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளும் தீர்வுகாண்பதற்கு அமைப்பு மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒன்றினைந்து உழைப்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
இந்த தேர்தல் மூலம் மகிந்தவை விரட்டவேண்டும் என்று அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்ததோடு தேர்தலுக்கு பின்னரும் மூவின மக்களும் ஜக்கியப்பட்டு உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்ந்தோர் தமது பங்களிப்புகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டமை எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
No comments:
Post a Comment