Tuesday, April 30, 2024

ஜாலியன் வாலா படுகொலைகளும்

•ஜாலியன் வாலா படுகொலைகளும் ஈழத் தமிழர் படுகொலைகளும் 13.04.1919 யன்று பிரித்தானிய ராணுவத்தால் ஜாலியன்வாலாபாக்கில் 379 அப்பாவி இந்திய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நிகழ்ந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைகளின் 105வது நினைவு தினம் இன்று ஆகும். இதே போன்று 1988ல் இந்திய ராணுவத்தால் யாழ் மருத்துவமனை படுகொலைகள், யாழ் பிரம்படி படுகொலைகள், வல்வை படுகொலைகள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக 4 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து பிரதமர் தெரேசா வருத்தம் தெரிவித்துள்ளார். முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமைக்காக இந்திய பிரதமர் வருத்தம் தெரிவிப்பாரா என்பதே. இந்திய பிரதமர் தெரிவிக்கிறாரோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும்?” என்று எழுதுவார்கள். இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியர் படுகொலை செய்தார். அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும். இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இந்தியா முழுவதும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் கொல்லப்பட்டனர். இச் சீக்கிய மக்களின் படுகொலைகளுக்காக இந்திய பிரதமர் மோடி அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார். சீக்கிய மக்களிடம் வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள் இதுவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment