Monday, June 16, 2014

பேராசிரியர் கிளாட்சன் சேவியர்; அவர்களின் ' இலங்கை இந்தியா சீனா அரசியல் பொருளாதாரம்' பற்றிய உரையாடல்

லண்டன் ஈஸ்ட்காம் நகரில் இன்று காலை 11.00 மணிக்கு பேராசிரியர் கிளாட்சன் சேவியர்; அவர்களின் ' இலங்கை இந்தியா சீனா அரசியல் பொருளாதாரம்' பற்றிய உரையாடல் இடம்பெற்றது. தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் ஜெயக்குமார் அவர்களின் வழிப்படுத்தலில் இவ் உரையாடல் நடைபெற்றது.

யாழப்பாணத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மகன் கிணற்றில் தவறி விழுந்தபோது கிணற்றில் இறங்கி மகனைக் காப்பாற்ற முடியாத பேராசிரியர் உடனே யாராவது உதவிக்கு வருவார்களா என றோட்டில் சென்று காத்து நின்றாராம். நிறைய பட்டங்களை பெற்றிருக்கும் அப் பேராசிரியருக்கு கிணற்றில் இறங்கி மகனைக் காப்பாற்ற தெரியாவிட்டாலும்கூட, கிணற்றடியில் நின்று 'ஜயோ' என்று கத்தி இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனாவது ஓடிவந்து காப்பாற்றியிருப்பான் என்பதும்கூட தெரிந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் இருந்து இது பேராசிரியர்களின் நடைமுறை அறிவை கிண்டலடிக்க சொல்லப்படும் கதையாக இருந்து வருகிறது.

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள பல பேராசிரியர்களின் சமூக அறிவு இந்த மாதிரித்தான் இருந்துவருகிறது என்பதை இன்றைய சென்னைப் பேராசிரியரின் உரையும் நிரூபிக்கின்றது. அவரது உரை இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உதவி புரிவது ஆச்சரியமான ஒன்றல்ல.

பல்வேறு புள்ளிவிபரங்களை அள்ளிவீசிய இந்த பேராசிரியர் இலங்கையில் அந்நிய முதலீட்டில் இந்தியா எத்தனை சதவிகிதம்? சீனா எத்தனை சதவிகிதம்? என்ற புள்ளி விபரத்தைக் கூறவில்லை. அதுமட்டுமல்ல இலங்கை இறக்குமதியில் இந்தியாவில் இருந்து எத்தனை சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதையோ அல்லது சீன இறக்குமதி எத்தனை சதவிகிதம் என்பதையோ கூறாமல் தவிர்த்துவிட்டார். இதைக் கூறியிருந்தால் இலங்கையில் சீனாவை விட இந்தியாவே அதிக அளவில் சுரண்டுகின்ற உண்மையை பார்வையாளர்கள் உணர்ந்திருப்பார்கள்.

தனது உரையில் புத்தளத்தில் சீன முதலீட்டாளர்கள் கட்டியிருக்கும் சொகுசு மாளிகையை கிலாகித்து பேசிய பேராசிரியர யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவர் கல்லூரி அனுமதியில் இருந்து பஸ் நிலைய கக்கூஸ் டெண்டர் வரை கட்டைப் பஞ்சாயத்து செய்வது ஏனோ சொல்லத் தோன்றவில்லை!

முதலாளித்துவத்தில் நெருக்கடி இருப்பதை ஒத்துக்கொண்ட பேராசிரியர் அதற்கு ஒரு புதிய தீர்வை கண்டு பிடிக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் முதலாளித்துவத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள மாக்சியம் ஏன் தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை விளக்காமல் தந்திரமாக தவிர்த்தக்கொண்டார். அதுமட்டுமல்ல ஆயுதப் போராட்டம் இனி பயன் தராது என்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்ற வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறார். இதிலிருந்து இந்த பேராசிரியர்கள் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு ஊதுகுழலாகவே செயலாற்றுகின்றனர் என்பதை வெளிப்படுத்திக் கொண்டார்.

இந்திய அரசு நேரடியாகவோ அல்லது இப் பேராசிரியர்கள் மூலமாகவோ இனி தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க முடியாது என்பதை விரைவில் வெடிக்கும் தமிழக விடுதலைப் போராட்டம் முகத்தில் அடித்து சொல்லும்.

No comments:

Post a Comment