Monday, June 16, 2014

ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, ராமகிருஸ்ணன் பதில் என்ன?

• ஆசிரியர் வீரமணி, கொளத்தூர் மணி, ராமகிருஸ்ணன் பதில் என்ன?

தந்தை பெரியாரின் கருத்துக்களை இன்றைய திராவிடர் கழகம் எந்தளவு தூரத்திற்கு அமுல்படுத்துகிறது என்பது பற்றி விமர்சனம் இருப்பினும் 'பெரியார் திடல் அனைத்து பெரியார்வாதிகளுக்கும் பொதுவானது. அது எப்போதும் திறந்திருக்கிறது. யாரும் எப்போதும் வரலாம்' என அதன் தலைவர் வீரமணி அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கப்படவேண்டியதாகும்.

முதன் முதலாக 1972ம்ஆண்டு பருத்தித்துறை 'யுனைட்டெ' புத்தகநிலையத்தில் பத்து சதத்திற்கு பெரியார் நூல்களை எனது தந்தையார் வாங்கி கொடுத்தார். அன்று முதல் இன்றுவரை பெரியார் நூல்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது.

நான் தமிழகத்தில் 8 வருடம் சிறையிலும் சிறப்பு முகாமிலும் மாறி மாறி அடைக்கப்பட்டிருந்தவேளை தொடர்ந்து 'விடுதலை' பத்திரிகையை ஆசிரியர் வீரமணி அவர்கள் எனக்கு அனுப்பி படிக்க உதவினார். அதுவும் இலவசமாகவே அனுப்பி உதவினார். இது எனக்கும் என்னுடன் கூடவே அடைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கும் வெளி உலகை தெரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக அமைந்தது. அது மட்டுமன்றி அந்த பத்திரிகையில் சிறப்புமுகாம் கொடுமைகள் தொடர்பாக நாம் அனுப்பும் செய்திகளையும் பிரசுரித்து உதவியதையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

லண்டன் வந்த பின்பும்கூட இங்கும் ஒரு நண்பர் 'உண்மை' இதழ் தொடர்ந்து தந்து உதவுதன் மூலம் எனக்கு பெரியார் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் எனது நன்றிகள்.

இங்கு எனது வருத்தம் என்னவெனில் புலிகள் இயக்கத்திலும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களிடமும் மதிப்பும் செல்வாக்கும் பெற்றிருந்த ஆசிரியர் வீரமணி அவர்கள் புலிகள் இயக்கத்தில் பெரியார் கருத்துக்களை பரப்ப ஏன் முனையவில்லை என்பதே?

ஏனெனில் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகவும் கடவுள் நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர். அவர் தனது திருமணத்தைக் கூட சென்னைக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றிலே நடத்தினார். அதுமட்டுமல்ல முதல் முறையாக ஆயுத இறக்குமதி வெற்றிகரமாக நடந்தவுடன் பழநி கோவிலில் மொட்டை அடித்தார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் அவர் ஆரம்ப காலங்களில் தாக்குதல்களை பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளிலேயே நடத்துவார். அது மட்டுமன்றி தாக்குதல் வெற்றிகரமாக நடந்தவுடன் தொன்டமனாறு செல்வசந்நிதி கோவிலில் அன்னதானமும் கொடுக்கும் அளவிற்கு நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தார்.

எனவே ஆசிரியர் வீரமணி மட்டுமல்ல பிரபாகனுடன் மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்த கொளத்தூர் மணி மற்றும் கோவை ராமகிருஸ்ணன் போன்றொர் கூட தாங்கள் கொண்டிருந்த பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை ஏன் பிரபாகரனிடத்திலும் அவரது புலிகள் இயக்கத்திடமும் பரப்ப முனையவில்லை என்று புரியவில்லை?

யாராவது தொண்டர்கள் இதை அவர்களிடம் கேட்டுச் சொல்வார்களா?

No comments:

Post a Comment