Monday, June 16, 2014

சீதனக் கொடுமையால் திருமணமாகாமல் குமர்ப்பெண்கள் விடும் பெரு மூச்சிற்கு முடிவு எப்போது?

• சீதனக் கொடுமையால் திருமணமாகாமல் குமர்ப்பெண்கள் விடும் பெரு மூச்சிற்கு முடிவு எப்போது?

மகிந்த ராஜபக்சே முள்ளிவாயக்காலில் அழித்தது வெறும் 40 ஆயிரம் பேரே. ஆனால் இந்த சீதனக் கொடுமையால் அழியும் பெண்கள் தொகையோ அதைவிட அதிகம்.

மகிந்தவை குற்றவாளிக்கூண்டில் எற்ற வேண்டும் என்று துடிப்போர் இந்த பெண்களை அழிப்போர் குறித்து அக்கறையற்று இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

இலங்கையில் இந்தியா போல் வரதட்சனைக் கொடுமையில் பெண்கள் காஸ் அடுப்பில் பலியாவது இல்லை எனலாம். ஆனால் இந்தியாவுக்கு நிகராக இலங்கையிலும் குறிப்பாக யாழ்பாணத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் முதன்மையாக இந்த சீதனக்கொடுமை இருக்கிறது.

என்.எம்.பெரரா நிதியமைச்சராக இருந்தபோது இந்த சீதனக் கொடுமை பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ' ஒரு நிதியமைச்சராக இதனை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இதனால் மக்களிடம் சேமிப்பு பழக்கம் ஏற்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவி செய்யும்' என்றார். ஒரு மூத்த இடதுசாரி தலைவர் இவ்வாறு பேசியது துரதிருஸ்டமானதே.

ஆனால் புலிகள் இதனை ஒருபோதும் வரவேற்கவில்லை. அவர்கள் இதனை கண்டித்தார்கள். சீதணம் வாங்குபவர்களைப் பிடித்து அவரிகளிடமிருந்து பெரும் தொகை பணத்தை வரியாக அறவிட்டார்கள். ஆனால் நம் மக்கள் கில்லாடிகள் ஆயிற்றே. அவர்கள் புலிகளுக்கு தெரியாமல் இரகசியமாக பரிமாறிக் கொண்டார்கள். ஆக இந்த விடயத்தில் புலிகளுக்கு தோல்வியே எற்பட்டது.

புலிகளின் துப்பாக்கியினால்கூட இந்த சீதனக் கொடுமையை ஒழிக்க முடியவில்லை. புலிகளின் காலத்திலும் அது இருந்தது. இப்பவும் அது தொடர்கிறது. புலிகள் கூறும் தமிழீழம் கிடைத்தாலும்கூட பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த கொடுமை முற்றாக ஒழிக்கப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் எமது மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளுக்கு சென்றாலும் அங்கும்கூட விடாமல் பின்பற்றும் வழக்கங்களில் இந்த சீதண முறையும் இருக்கிறது.

விலைவாசியை விட அதிக வேகத்தில் உயரும் இந்த சீதணம் பல குமர்பெண்களின் திருமணத்தை கேள்விக் குறியாக்கியுளளது. அழகான பெண்ணாக இருந்தும் நல்ல படிப்பு இருந்தாலும் நல்ல உத்தியோகத்தில் அதிக சம்பளம் பெற்றிருந்தாலும் தமது தகுதிக்குரிய மாப்பிளையை பெறுவதற்கு சீதனத்தைக் கொடுக்க வேண்டிய நிலையிலே பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதனைக் கொடுக்க முடியாமல் திருமணம் இன்றி கண்ணீர் விட்டு வாழ்வைக் கழிக்கின்றனர்.

திருமணம் ஆகாமல் இந்த குமர் பெண்கள் விடும் பெருமூச்சு எமுது இனத்தை அழிக்கு முன்னர் சமூக அக்கறை உள்ளவர்கள் இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment