Monday, October 26, 2020

துருக்கிய மொழியில் தோழர் சண் நூல்!

•துருக்கிய மொழியில் தோழர் சண் நூல்! தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்கள் மத்தியில் மதிப்பு பெற்ற தமிழ் தலைவர்களில் தோழர் சண்முகதாசனும் ஒருவர். அவர் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசரீதியிலும் மதிப்பு மிக்க ஒரு தமிழ் தலைவர் ஆவார். அவர் எழுதிய “ஒரு கம்யுனிஸ்டின் அரசியல் நினைவுகள்” நூல் முதலில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிவந்தது. பின்னர் அதன் தமிழ் பதிப்பு நூலை 1990ல் தமிழகத்தில் நான் வெளியிட்டிருந்தேன். அதன் பின்னர் விடியல் பதிப்பகம் அதனை மீள்பதிப்பு வெளியிட்டது. அதன்பின்னர் மார்க்சிச கற்கைக்கான நிலையம் இலங்கையில் வெளியிட்டது. இப்போது இதன் துருக்கிய மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்ற செய்தியை பத்மநாபன் ஐயர் இன்று எனக்கு தெரிவித்தார். அவர் அந்த துருக்கிய மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வைத்திருப்பதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “துருக்கிய மொழி தெரியாத நீங்கள் எதற்காக அவ் நூலை வாங்கி வைத்திருக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ ஒரு ஈழத் தமிழரின் நூல் துருக்கிய மொழியில் வெளியிடப்பட்டிருப்பது எமக்கு பெருமை அல்லவா. எனவேதான் அதனை வாங்கி பாதுகாத்து வைத்திருக்கிறேன்”என்றார். பத்மநாபன் ஐயர் ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம். அவரிடம் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியோ அவர்களது நூல்கள் பற்றியோ விபரங்கள் பெறலாம். அவர் கம்யுனிஸ்ட் எழுத்துக்கள் மீதும் ஆர்வம் கொண்டவர் என்பது பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நான் அவரை வீட்டில் சந்திக்கும்போதெல்லாம் தனது புத்தக குவியலில் இருந்து அரிய கம்யுனிஸட் புத்தகங்களை தேடி எடுத்து அன்பளிப்பாக தருவார். அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பு - இந்தியாவில் நக்சலைட் எழுச்சி ஆரம்பமானவேளை அதுகுறித்து தோழர் சண் அவர்கள் எழதிய அறிக்கை யாரிடமாவது இருந்தால் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment