Friday, August 31, 2018

தாய்!

தாய்!
1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார்.
தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட.
மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்?
ஆம். அந்த கொடும் துயரை இத்தனை நாளாய் சுமந்து கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே.
தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய்.
தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை.
மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை.
நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை.
அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அதை அவர் ஏற்கவில்லை.
கடந்த 32 வருடங்களாக தன் மகன் உயிரோடு இருப்பதாகவே அந்த தாய் கூறிவருகிறார்.
ஆம். அவர் கூறுவது உண்மைதான். தோழர் தமிழரசன் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போராட்டம் இறக்கவில்லை.
இன்று தோழர் தமிழரசன் பெயரை தவிர்த்துவிட்டு யாராலும் தமிழ்தேசியம் பேச முடியாது.
அந்தளவுக்கு இன்று தோழர் தமிழரசன் அறியப்பட்டிருக்கிறார். பலரும் அவர் பெயரை உச்சரிக்கின்றனர்.
அதனால்தான் இன்று பலரும் தோழர் தமிழரசனின் அந்த தாயாரை மேடைகளில் ஏற்றி கௌரவிக்கின்றனர்.
இந்த தாயாரைப் பார்க்கும்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்சி ஏற்படுகிறது. ஏனெனில் அவரது மகன் தோழர் தமிழரசன் பற்றி நூல் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததோடு அந்த நூலை இவரிடம் சேர்ப்பிக்கவும் முடிந்தது.
குறிப்பு- எதிர்வரும் 01.09.2018 யன்று தோழர் தமிழரசன் நினைவு தினமாகும். அதையொட்டி எழுதப்பட்ட பதிவு இதுவாகும்.

No comments:

Post a Comment