Friday, October 31, 2014

புதிய திசைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.

 புதிய திசைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட
பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.
இன்று ( 26.10.2014) மாலை 4 மணியளவில் லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “புதியதிசைகள்” அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
"தமிழ் தலைமைகள் இன்று செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் மனோகரன் தலைமையில் கூட்டமும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெற்றது. ஆக்கபூர்வமான உரையாடலாக அமைந்தது.
பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் தங்கள் பதில்களைத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை முன்வைத்தார். அவர் தனது உரையில் ஜ.நா வினூடாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வைப் பெறுவதற்கு தாம் முயல்வதாக குறிப்பிட்டார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய பொறுப்பாளர் போஸ் அவர்கள் தமது உரையில் த.தே.கூ விடம் சில தவறுகள் உண்டு என்பதை தான் ஒத்துக்கொள்வதாகவும் ஆனால் அது எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து யாராவது ஆரோக்கியமான கருத்துகளை முன்வைத்தால் அது தொடர்பாக ஆராய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழர் தகவல் நடுவம் வரதகுமார் அவர்கள் தமது உரையில் தமிழ் தலைமைகள் ஒரு பிரிவினர் இந்தியா தனது நலன்களுக்காக தயாரித்த 13வது சரத்திலும் இன்னொரு பிரிவினர் அமெரிக்கா தனது நலனுக்காக கொண்டு வந்த ஜ.நா தீர்மானத்திலும் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் யாரும் தமக்கென ஒரு சொந்தமான திட்டத்தை கொண்டிருக்கவில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
சமூக ஆர்வலர் காதர் அவர்கள் உரையாற்றுகையில் மகிந்தவின் கட்சி போல் சம்பந்தரின் கூட்டணியும், கக்கீமின் முஸ்லிம் காங்கிரசும் வாக்கு அரசியல் செய்கிறார்களேயொழிய யாரும் மக்களைப் பற்றி அக்கறைப்படவில்லை என்றார். மேலும் அவர் மலையக உழைக்கும் மக்கள் மற்றும் முஸ்லிம் விவசாயிகள், வறிய தமிழ் மக்கள் ஆகியோரை திரட்டி அவர்களின் கையில் தலைமையும் போராட்டமும் செல்லுமாயின் நிச்சயம் நல்ல மாற்றம் வரும் என்றார்.
சோசலிசக் கட்சியின் சேனன் உரையாற்றுகையில் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் உலக பொருளாதாரப் பார்வையுடன் இலங்கை பிரச்சனையை நாம் அணுக வேண்டும் என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு இடதுசாரி வேட்பாளர் வந்தால் அவரை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்மைப்பு முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் மக்கள் சார்பாக சமூக செயற்பாட்டாளர் பௌசர் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் முஸ்லிம் மக்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும் தமது தீர்வை முஸ்லிம் மக்கள் தாமே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக புதிய சிசைகள் அமைப்பை சேர்ந்த மாசிலாபாலன் அவர்கள் உரையாற்றினார். அவர் தமது இந்த கூட்டத்தின் நோக்கத்தையும் தேவையையும் விளக்கி கூறினார். பல்வேறு அமைப்புகளும் கலந்துரையாடி ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு வரவேண்டும் என தாம் விரும்பவதாகக் குறிப்பிட்டார்.
பல்வேறு கருத்துகளைக் கொண்டிருப்போர் அமைதியாக ஆக்கபூர்வமாக உரையாட முடியும் என்பதை இந்த கூட்டம் எடுத்துக்காட்டியிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக பல உரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்பதை இது உணர்த்தியுள்ளது. அந்த வகையில் இந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்திய “புதிய திசைகள” அமைப்பின் பணி பாராட்டுக்குரியது.
அவதானிப்பு-
இந்த கூட்டத்தில் மிக முக்கிய அவதானிப்பாக நான் கருதுவது , உரையாற்றியவர்களும்சரி அல்லது கேள்விகள் கேட்ட பார்iவயளர்களும் சரி, ஒருவர்கூட “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார்" என்று கூறவில்லை. இதிலிருந்து யாருமே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதையோ அல்லது அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார் என்பதையோ நம்பவில்லை என்பது புலனாகிறது. இந்த செய்தி தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கு முக்கியமான செய்தியாகும்.

No comments:

Post a Comment