Thursday, October 9, 2014

லண்டனில் நடைபெற்ற ஜெயா அம்மையாருக்கான பிரார்த்தனையும் பொதுக்கூட்டமும்

 லண்டனில் நடைபெற்ற ஜெயா அம்மையாருக்கான
பிரார்த்தனையும் பொதுக்கூட்டமும்
இன்று (04.10.14) லண்டனில் ஈஸ்டகாம் நகரில் ஜெயா அம்மையாருக்காக பிரார்த்தனையும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என பிரசுரத்தில் போடப்பட்டிருந்தது. மக்கள் வராத காரணத்தால் 6.30 மணிக்கு ஆரம்பமாகி 8.15 மணிக்கு முடிவுற்றது.
2 லட்சம் மக்கள் வாழ்வதாக கூறப்படும் லண்டனில் 20பேர் கூட வரவில்லை. இதில் இருந்தே லண்டனில் ஜெயா அம்மையாருக்கு இருக்கும் ஆதரவை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
கூட்டம் நடத்தியவர்கள் எந்த அமைப்பின் சார்பாக நடத்தப்படுகிறது என்று குறிப்பிடவில்லை. கூட்டத்தில் பேசிய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகூட தான் அமைப்பு ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட ரீதியிலே கலந்துகொள்வதாக குறிப்பிட்டார்.
அமைப்பு பெயர் இன்றி வெறும் தொலைபேசி இலக்கத்துடன் லண்டனில் நடைபெற்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். ஜெயா அம்மையாரை இதைவிட கேவலப்படுத்த முடியுமா என்று எனக்கு தெரியவில்லை?
எங்கு சுண்டல் கிடைத்தாலும் அங்கு சென்று மணி குலுக்கும் சைவ தொண்டன் முருகானந்தம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.( ஜெயாவுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்).
அவர் தனது தலைமையுரையில் ஜெயா அம்மையார் ஆட்சியில் அகதிகள் நன்கு பராமரிக்கப்படுவதாக குறிப்பிட்டார். பாவம். அவருக்கு சிறப்புமுகாம் என்று ஒன்று இருப்பதும் அதில் அகதிகள் பல வருடங்களாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தப்படுவதும் தெரியவில்லை.
அகதிகளின் கல்விக்கு வழி கோலி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயா அம்மையார் என்று முருகானந்தம் தனது உரையில் மேலும் கூறினார். அண்மையில் ஒரு அகதி மாணவி தனது மருத்துவகல்விக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுகூட இவருக்கு தெரியவில்லை. (பாவம் ஈழ அகதிகள்)
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஆறுமுகம் என்பவர் உரையாற்றினார். ஜெயா அம்மையார் தன்னலம் கருதாது ஈழத் தமிழர்களுக்கு உதவியதாக குறிப்பிட்டார். வழக்கின் இறுதி நேரத்தில்கூட புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியவர் ஜெயா அம்மையார். அதனை எப்படி இந்த தமிழீழ அரசு பிரதிநிதி மறந்தார் என்று புரியவில்லை?
இறுதியாக கோயில் அறங்காவலர் சிதரம்பரப்பிள்ளை என்பவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் ஜெயா அம்மையாரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கோரிக்கை மனு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவரை விடுதலை செய்யும்படி பிரதமரிடம் கேட்பது முறையா? அவ்வாறு இன்று ஜெயாவை விடுதலை செய்தால் நாளை எல்லா ஊழல் அரசியல்வாதிகளும் விடுதலை செய்யும்படி கேட்பார்களே?
இப்படியான முட்டாள் தனமான கோரிக்கையை வைக்கும்படி கோரிய சிதம்பரப்பிள்ளை கோயில் அறங்காவலர் மட்டுமல்ல லண்டனில் பிரபல சட்ட வல்லுனர் என்றும் முருகானந்தம் குறிப்பிட்டார். ( இவரிடம் செல்லும் வழக்கை நினைத்தால் கோவிந்தா தான்!)
இந்தியாவில் மட்டுமல்ல லண்டனிலும் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த கூட்டம் நிரூபித்துள்ளது.
ஆறுதல் செய்தி- ஜெயா அம்மையாரை விடுதலை செய்ய வழக்கு நிதி என்று திரட்டுவதற்கு நம்மவர்கள் திட்டம் எதுவும் போடவில்லை.

No comments:

Post a Comment