Monday, May 30, 2022

எங்கு நல்ல புத்தகங்கள்

எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பயங்கரவாதம்தான் காரணம் என்று கூறுகிறார்களோ அதுபோல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் யாராவது ஒரு தமிழர்தான் காரணம் என்று இவர்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள். அல்லது, கிருசாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களைத் தாங்களே பாலியல் வல்லுறவு செய்து இறந்தார்களே அதே மாதிரி யாழ் நூலகமும் தனக்கு தானே தீ வைத்து எரிந்தது என்றும்கூட இவர்கள் கூறுவார்கள். அது உண்மைதான் என்று நம்புவதற்கும் அதனை பிரச்சாரம் செய்வதற்கும் நம் மத்தியிலும் நாலு பேர் இருப்பதுதான் எமது இனத்தின் சாபக்கேடு. குறிப்பு - யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் 31.05.1981

No comments:

Post a Comment