Sunday, November 30, 2014

ட்ரொஸ்கியவாதம் பற்றி

ட்ரொஸ்கியவாதம் பற்றி

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்;கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை  ஏதோ பெரிய முழக்கங்களாகக்  காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.

ட்ரொஸ்;கியவாதத்தின் இன்றைய வக்கீல்கள் இதனைப் பற்றி அவ்வளவாக பேச விரும்பாவிட்டாலும் தனியொரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியுமா என்பதே ட்ரொஸ்;கியவாதிகளுக்கும் கம்யூனிசவாதிகளுக்கும் இடையிலான பிரதான பிரச்சனையாக இருந்தது. இன்று சோஷலிசத்தை ஒரே நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் பொழுது போக்கற்ற அறிவு ஜீவிகளின் விவாதத் தலைப்புகளில் இடம் பிடிப்பவை.. அதனைச் செய்ய முடியும் என்பதை ஸ்டாலின் உலகிற்கு நிருபித்தார்.

ஜரோப்பாவின் பிரதான முன்னேறிய நாடுகளில் முதலில் புரட்சிகள் நடைபெறும் என லெனின் எதிர்பார்த்தது உண்மைதான். லெனின் ஒரு சர்வதேசியவாதி. எனவே அவர் உண்மையில் இதற்காக ஊக்கத்துடன் உழைத்தார். ஆனால் புரட்சிவாதி விரும்பும் பாதையிலேயே வரலாறு எப்பொழுதும் செல்வதில்லை. புரட்சி ஏற்பட்ட கங்கேரி ஜெர்மனி போன்ற நாடுகளில் அது தோல்வி கண்டது. இந் நிலையில் தாம் வெற்றிக்கு இட்டுச் சென்ற ரஸ்சியப் புரட்சியை ரஸ்சியப் புரட்சியாளர்கள் என்ன செய்வது? ஸ்டாலின் வினவியவாறு “அதனை உலகப் புரட்சிக்கு காத்திருந்து கொண்டு அதன் சொந்த முரண்பாடுகளில் சிக்கி வேர்வரை அழுக விடுவதா?”

லெனின் இத்தகைய ஒரு வளர்ச்சியை எதிர்பார்த்தார். அவர் 1916ல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் யுத்தத்திட்டம் என்பதில்  “முதலாளித்துவதத்தின் வளர்ச்சி பல்வேறு நாடுகளில் மிகுதியும் சமாந்திரமற்ற முறையில் நடைபெற்றது. பண்ட உற்பத்தி அமைப்பின் கீழ் வேறுவிதமாக அது நடைபெறமுடியாது. இதிலிருந்து சோசலிசம் சகல நாடுகளிலும் ஏக காலத்தில் வெற்றி பெறமுடியாது என்பது புலனாகிறது. அது முதலில் ஒரு நாட்டில் அல்லது சில நாடுகளில் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்

இந்த லெனிசக் கருத்துக்களின் அடிப்படையில் முதலில் லெனினாலும் பின்னர் அவருடைய வாரிசான ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட போல்ஷ்விக் கட்சி புரட்சி வெற்றி பெற்ற ஒரு நாட்டில் சோசலிச உற்பத்தியை ஒழுங்கு படுத்தியது. வரலாறு அது சரி என நிரூபித்துவிட்டது.

ஆனால்  ட்ரொஸ்;கி வேறுவிதமாக சிந்தித்தார். பின்தங்கிய ரஸ்சியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி தப்பிப் பிழைப்பதை அவர் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் வெற்றியுடன் இணைத்தார். அவர் “உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற அரங்கில்தான் ரஸ்சியப் புரட்சியைக் காப்பாற்ற முடியும்” என்று ஆடம்பரமாகப் பிரகடனம் செய்தார்.

வுpவசாயிகளின் புரட்சிகர உள்ளார்ந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்காததே ட்ரொஸ்;கியின் இந்த தவறான தர்க்கத்திற்கு அடிப்படைக் காரணம் ஆகும். புரட்சி சோசலிசக் கட்டத்தை நோக்கி நகரும் போது பாட்டாளி வர்க்கத்திற்கு பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல விவசாயிகளுடனும் மோதல் ஏற்படும் என அவர் கருதினார். அதனால் அவர் இவ்வாறு கூறினார் “ ….பாட்டாளி வர்க்க முன்னனிப்படை அதன் வெற்றியை அடையப் பெறுவதற்காக அதன் ஆட்சியின் அதி ஆரம்பக் கட்டத்திலேயே நிலப்பிரபுத்துவ சொத்தைப் பறிப்பது மட்டுமல்ல முதலாளித்துவ சொத்தையும் பறிக்க நேரிடும். இதில் பாட்டாளி வர்க்கம் புரட்சிப் போராட்டத்தின் முதல் கட்டங்களில் தனக்கு ஆதரவளித்த பூர்ஷ்வா வர்க்கத்துடன் மட்டுமல்ல தன்னை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு காரணமாயிருந்த பரந்துபட்ட விவசாயிகளுடனும் பகைமையான மோதலில் ஈடுபட நேரிடும்”.

லெனினுடைய கருத்துக்கள் ட்ரொஸ்;கியின் கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறானவை. ரஸ்சிய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான விவசாயிகளுக்கு புரட்சியின் இரண்டு கட்டங்களிலும் புரட்சிப் பாத்திரம் உண்டு என்று லெனின் வாதிட்டார். இந்த விவசாய மக்களை தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒழுங்கு படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த விசேட நேச அணி பற்றி லெனின் பின்வருமாறு வர்ணித்தார் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது உழைப்பாளிகளின் முன்னனிப் படையான பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைப்பாளிகளின் பாட்டாளிகள் அல்லாத எண்ணற்ற பிரிவினருக்கும் (குட்டி பூர்சுவா சிறிய கைவினைஞைர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள் போன்றன)அல்லது பெரும்பாலான பிரிவினருக்கும் இடையில் உள்ள விசேட வடிவ வர்க்கக் கூட்டணியாகும்”.

ஆகவே விவசாயிகளுடனான கூட்டணியில் நம்பிக்கையற்ற ட்ரொஸ்;கியால் ரஸ்சியப் புரட்சிக்கு எந்த எதிர்காலத்தையும் காண முடியவில்லை. அவருடைய கருத்தில் உலகப் புரட்சிதான் அதைக் காப்பாற்ற முடியும்.ஆனால் அது நடைபெறவில்லை. ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியாது என அவர் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான போல்ஷ்விக்கள் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதை நிரூபித்ததுடன் சோவியத்யூனியனுக்கு எதிரான பாசிச ஆக்கிரமிப்பின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாறு காணாத கொடிய தாக்குதலுக்கு எதிராகவும் அதனைப் பாதுகாத்தார்கள். வரலாறு இவ்வாறு இந்தப் பிணக்குகள் பற்றிய தீர்ப்பை  வழங்கி முன்னேறிச் சென்றது.

அடுத்து லெனினின் வாரிசு என்ற பிரச்சனையிலும் ஸ்டாலின் ட்ரொஸ்;கியின் இடத்தை அபகரித்தார் என்ற ட்ரொஸ்;கியவாதிகளின் பிரச்சாரத்தில் எள்ளவும் உண்மையில்லை என்பதை நாம் தெளிவாக காணலாம். வரலாற்றின்படி ட்ரொஸ்;கி புரட்சிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்து கொண்டார். ஆனால் ஸ்டாலினோ 1912ல் பிராக் மாநாட்டில் மென்ஷிவிக்குகளிடமிருந்து பிரிந்த போது போல்ஷ்விக் கட்சியில் லெனினுடன் இணை ஸ்தாபகராக இருந்தார். இந்த மாநாட்டில் ஸ்டாலின் மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும் ரஷ்யாவுக்குள்ளே புரட்சிகர வேலைக்கு வழிகாட்டுமுகமாக ஸ்டாலினை தலைவராகக் கொண்ட மத்தியக் கமிட்டி ரஷ்யசபை என்ற நடைமுறையான கேந்திரம் அமைக்கப்பட்டது. இது ஸ்டாலினுடைய தலைசிறந்த ஸ்தாபன திறமைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். லெனின் பெரிதும் வெளிநாடுகளில் இருந்து இயக்கத்திற்கு தலைமை தாங்கிய போது ரஷ்யாவுக்குள்ளே தலைமறைவுக் கட்சியை கட்டியமைத்தது ஸ்டாலின்தான்.

அப்போது 1912ல் ட்ரொஸ்;கி “ஆகஸ்ட் குழு” என்பதை மும்முரமாக ஒழுங்குபடுத்தினார். அவர் இதில் லெனினுக்கும் போல்ஷ்விக் கட்சிக்கும் எதிரான குழுக்களையும் போக்குகளையும் ஒன்றினைத்தார். அப்பொழுதுதான் லெனின் அவரை “யூதாஸ் ட்ரொஸ்;கி” என்று அழைத்தார்.

1917 மே 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவுக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் மத்திய கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கட்சி ஏடான “பிராவ்டா”வின் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

1917ம் ஆண்டு ஜீலை 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரை நடைபெற்ற போல்ஷ்விக் கட்சியின் ஆறாவது காங்கிரசில்தான் ட்ரொஸ்கியை ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அப்பொழுது லெனின் பின்லாந்தில் இருந்து மாநாட்டிற்கு வழிகாட்டினார். ஸ்டாலின்தான்; மாநாட்டிற்கு தலைமை தாங்கி பிரதான அறிக்கையை சமர்ப்பித்தார். இதிலிருந்து அக்டோபர் புரட்சியின் போது லெனினுக்கு அடுத்தபடியான பாத்திரத்தை வகித்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாகிறது. இதனாற்தான் 1922ல் துப்பாக்கிக் குண்டின் காயம் காரணமாக லெனின் செயல்பட முடியாது இருந்த நிலைமையில் கட்சியின் பொதுச் செயலாளராக லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார்.

இவற்றை மறுக்க முடியாத ட்ரொஸ்க்கியவாதிகள் இறுதியில் பற்றிக்கொள்ளும் விடயம் லெனின் மரணசாசனம். இது உண்மையில் எதிர்வர இருந்த காங்கிரசுக்கு லெனின் சொல்ல எழுதப்பட்ட கடிதமாகும். இந்த காங்கிரஸ் லெனின் மறைவின் பின் 1924ம் ஆண்டு மே 24ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற்றது.இந்தக் கடிதத்தை காங்கிரசில் வாசிக்க வேண்டும் என்பதே லெனினுடைய வேண்டுகோள்.அதன்படி ஸ்டாலினே இக் கடிதத்தை வாசித்தார். இக் கடிதத்தில் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ட்ரொஸ்கியும் விமர்சிக்கப்பட்டிருந்தார். ஆனால் ட்ரொஸ்க்கியவாதிகள் கூறுவது போல் பொதுச்செயலாளர் பதவிக்கு ட்ரொஸ்கியை நியமிக்கவேண்டும் என்று அதில் கூறப்படவில்லை. இந்தக் கடிதம் வாசிக்கக் கேட்ட பின்னர்தான் காங்கிரஸ் ஸ்டாலினை பொதுச் செயலாளராக தெரிவு செய்தது. ஒரேயொரு வாக்கு ட்ரொஸ்கியின் வாக்குதான் எதிராக விழுந்தது. அவர் தனக்குத்தானே வாக்களித்தார்.

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவும் அவர் ட்ரொஸ்கிக்கு போதிய விவாத வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ட்ரொஸ்க்கியவாதிகள் சேறு பூசுகின்றனர். இது முற்றிலும் பொய். சர்வதேச கம்யுனிச இயக்கத்தின் வரலாற்றில் ஸ்டாலினைப் போல் இவ்வளவு அதிகாரம் படைத்திருந்த ஒரு தலைவர் தனது எதிரிக்கு ஸ்டாலின் ட்ரொஸ்க்கிக்கு காட்டியது போன்ற பொறுமையைக் காட்டியது கிடையாது.

விவாதங்கள் போல்ஷ்விக் கட்சிக்கு உள்ளேயும் கம்யுனிச அகிலத்திற்கு உள்ளேயும் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.மீண்டும் மீண்டும் ட்ரொஸ்க்கி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.

1927 அக்டோபரில் நடைபெற்ற கட்சியின் 15வது மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு உறுப்பினரினதும் நிலைப்பாட்டை அறிவதற்காக வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.724000 உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையிலான மத்திய கமிட்டியின் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.4000 பேர் ஆதாவது ஒருசத வீதத்திற்கும் குறைவானோர் ட்ரொஸ்க்கிய குழுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது ட்ரொஸ்க்கிக்கு கிடைத்த இறுதி அடியாகும்.

ட்ரொஸ்க்கிக்கு வேண்டியது ஜனநாயக விவாதமும் தீர்ப்பும் என்றால் அது போதிய அளவு கிடைத்தது. ஆனால் அவர் திருந்தவில்லை. தனது குழுவாத நடவடிக்கைகளை கைவிடவில்லை. கட்சியின் பொறுமை சோதிக்கப்பட்டது.1927 நவம்பர் 14 திகதி மத்திய கமிட்டி ட்ரொஸ்க்கியை வெளியேற்றியது. சோவியத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் சோவியத் யூனியனின் ஓதுக்குப்புறக் குடியரசு ஒன்றிற்கு நாடு கடத்ப்பட்டார். ஆனால் அவர் இந்த நிபந்தனையை மீறியபடியால் ஒருவருட முடிவில் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சோவியத்யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ட்ரொஸ்க்கியின் நடவடிக்கைகள் பற்றியோ சர்வதேச சோவியத் எதிர்ப்பு நடவடிக்கையின் கேந்திரமாக அவர் எப்படி மாறினார் என்பது பற்றியோ இந்தக் கேந்திரம் அவரது ஆடம்பரங்களுக்கு எவ்வாறு பெரும் தொகை பணத்தை செலவழித்தது என்பது பற்றியோ அவர் இறுதியில் பெரிதும் அரண் செய்யப்பட்ட கோட்டையில் குடியேறினார் என்பது பற்றியோ இறுதியில் அவருடைய பெண் காரியதரிசியின் காதலனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இங்கு விரிவாக கூறவேண்டியதில்லை .அவை அனைவரும் அறிந்த வெட்ட வெளிச்சமான விடயங்கள்.

இன்று சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் வேறு பொழுதுபோக்கற்ற அறிவுஜீவிகள்தான் அவைபற்றி விவாதிப்பார்கள். ஆதனைச் செய்ய முடியும் என்பதை லெனினும் ஸ்டாலினும் உலகிற்கு நிருபித்துவிட்டனர். ஆனால் 1920ம் ஆண்டுகளில் ரஸ்சியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதனைச் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். இவ்வாறுதான் அப்பொழுது ட்ரொக்சியவாதத்திற்கு ஒரு சமுதாய அடிப்படை இருந்தது. ஆனால் இன்று  ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைக்க முடியாது என்ற ட்ரொக்சியின் தத்துவம் செத்த தத்துவம்..ட்ரொஸ்க்கியவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு உள்ளேயிருந்த தவறான தத்துவம் என்ற நிலைமையில் இருந்து பகிரங்கமான எதிர்ப்புரட்சித் தத்துவமாக மாறியுள்ளது. ட்ரொக்சிய வாதம் என்னும் எதிர்ப் புரட்சிகரத் தத்துவம் உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு கவர்ச்சிகரமானது. ஏனென்றால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டதாக பாசாங்கு செய்கின்றது. அதேவேளையில் அதன் பிரதான பங்கும் செயல்பாடும் புரட்சிக்கு எதிரானது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. சர்வதேசிய முதலாளித்துவப் பத்திரிகைகள் ட்ரொக்சியைப் பாராட்டும் அதேவேளையில் ஸ்டாலினை இன்றுவரை திட்டுவதன் அடிப்படை நோக்கத்தை ஒரு உண்மையான புரட்சியாளனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment