Wednesday, September 30, 2015

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!
பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்
தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.
வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.
தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
யார் மாமனிதர்கள்?
யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?
மாபெரும் ஆசான் காரல் மாக்ஸ் கூறுகிறார்,
மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தியுள்ள ஒரு கல்விமானாகவும், மாபெரும் ஞானியாகவும், சிறந்த கவிஞனாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான, உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத் தான் வரலாறு மாமனிதர்களென ஏற்றுக் கொள்கிறது. பெருவாரியான மனிதர்களை மகிழ்ச்சி பெறச் செய்கிற மனிதன்தான் பெரும் மகிழ்ச்சியாளன் என்று அனுபவம் கூறுகிறது.
ஆம். தோழர் தமிழரசன் நினைத்திருந்தால் நல்ல சம்பளம் பெறும் உத்தியோகத்தில் அமர்ந்து தனக்கென ஒரு வசதியான வாழ்க்கையை அமைத்திருக்க முடியும். ஆனால் அவரோ அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் விடுதலைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
பரந்துபட்ட மக்களின் நலனுக்காக போராடிய தோழர் தமிழரசன் மாமனிதரே!
அவரை என்றும் நினைவில் கொள்வோம்.
அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
குறிப்பு- பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்துவதை தமிழக காவல்துறை தடை செய்துள்ளது. தடையை மீறி தோழர்கள் வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment