Saturday, April 29, 2023

ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி!

•ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி! 1971ம் ஆண்டு ஜேவிபி அமைப்பு இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. பல கிராமங்களை சில மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தது. அப்போது இலங்கை இந்திய ராணுவத்தால் 6000 ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 1971ல் மன்னம்பெரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது. கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கொன்றனர். ஜேவிபி மீண்டும் 1989ல் ஆயுதப் போராட்டம் முன்னெடுத்தது. அப்போது இதே சிங்கள ராணுவம் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது. வேடிக்கை என்னவெனில் அப்போது இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி ஜ.நா சென்றவர் மகிந்த ராஜபக்சாவே. அதே மகிந்த ராஜபக்சாவே பின்னர் முள்ளிவாயக்காலில் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தார். 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக மீண்டும் வளர்ந்து இருக்கிறது. இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன? முதலாவது, ஜேவியால் மீண்டும் எழ முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது? இரண்டாவது, ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை. மூன்றாவதாக, தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள். நான்காவதாக, தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள். ஜந்தாவதாக ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள். தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.

No comments:

Post a Comment