Thursday, March 20, 2014

அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்!

நமது புரட்சிக்கான பயணம் எப்போதும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டுமென நினைக்கிறோம். ஆனாலும் அடக்குமுறையால் ஒடுக்கப்படுமானால் வெற்றி கிடைக்காவிட்டாலும், மக்களின் உரிமைக்கான வெற்றிகளை நோக்கி செல்ல முடியாவிட்டாலும், எங்கள் முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

'வெற்றி அல்லது வீரமரணம்' என்பது புரட்சி பாதையில் செல்லும் தோழர்கள் சிந்தனையில் அழுத்தமான கொள்கையால் பதிவு செய்த உயிர்ச் சொல். அவை உயிரோட்டத்துடன் எங்கள் சிந்தனைகளில் வாழ்கிறது!

- தோழர் சே குவாரா

முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை கொன்று புதைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கிவிடலாம் என இலங்கை இந்திய அரசுகள் கனவு கண்டன. ஆனால் அன்று இலங்கையில் மட்டும் நடைபெற்ற போராட்டம் இன்று தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது. மக்கள் போராட்டமாக மலர்கிறது.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுபவர்கள். ஆயிரம் ஆயிரமாக முளைத்தெழுவார்கள். அவர்களை கொன்று புதைப்பதன் மூலமோ அல்லது கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலமோ அவர்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியாது. பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து எழுவார்கள்.

அன்று தோழர் தமிழரசனை கொன்று தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாக இந்திய அரசு கனவு கண்டது. ஆனால் இன்று பல இளைஞர்கள் அந்த தமிழரசன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது அரசுக்கும் அதன் ஏவல் நாய்களான காவல் துறைக்கும் நடுக்கத்தை கொடுத்துள்ளது.

தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த “தமிழ்தேச மக்கள் கட்சியை”ச் சேர்ந்த தோழர்கள் தமிழரசன்கலை , திருச்செல்வம், கவியரசு , சிவகெங்கை காளை ஆகியோரை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது.

• போராடும் மாணவர்களை சிறையில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு.

• அகதிகளை சிறப்புமுகாம்களில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு.

• தமிழ் இன உணர்வாளர்களை சிறையில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு.

சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதாலோ, பொய்வழக்கு போட்டு பழிவாங்குவதாலோ தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியாது என்பதை வரலாறு அவர்களுக்கு நிரூபிக்கும். இது உறுதி.

இலங்கை, இந்திய அரசுகளின் அடக்கு முறைகளைக் கண்டிப்போம்!

அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment