Saturday, June 29, 2019

தர்ஷன் மற்றும் லொஸ்லியாவை தெரிந்தவர்களுக்கு பாஸ்கரன்,ரமேஷ் மற்றும் செல்வம் ஆகியோரை தெரியுமா?

•தர்ஷன் மற்றும் லொஸ்லியாவை தெரிந்தவர்களுக்கு
பாஸ்கரன்,ரமேஷ் மற்றும் செல்வம் ஆகியோரை தெரியுமா?
தர்ஷன், லொஸ்லியா, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் அனைவரும் ஈழத் தமிழர்கள்.
இதில் தர்ஷன், லொஸ்லியா இருவரும் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்வதால் விஜய் ரிவி மூலம் பல கோடி தமிழர்கள் நேற்று முதல் அறிந்துள்ளனர்.
இந்த இருவரையும் அறிந்துள்ள பல தமிழர்களுக்கு பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகியோர் யார் என்று தெரிந்திருக்கவில்லை.
ஆனால் வைகோ அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. திருச்சி சிறப்புமுகாமில் இந்த மூவரும் கடந்த ஜந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள் என்பதும் தெரிந்திருக்கிறது.
தெரிந்தது மட்டுமன்றி இந்த அப்பாவி ஈழ அகதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.
வைகோ அவர்கள் எம்.பி இல்லை. அவர் கட்சி ஆட்சியிலும் இல்லை. ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார்.
இப்போது தேர்தல் இல்லை. இருந்தாலும் ஈழத் தமிழர் பற்றி பேசுவதால் அது வைகோ அவர்களுக்கு பயன் தரப்போவதில்லை. இருந்தாலும் அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.
அதுவும் 2008ம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக பேசியதற்காக அவர்மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறம் அது பற்றி கவலைப்படாமல் மீண்டும் ஈழத் தமிழர்களுக்காக அறிக்கை விட்டிருக்கிறார்.
அண்மையில் ஈழத்தில் இருந்து தமிழ் தலைவரான மாவை சேனாதிராசா தமிழகம் வந்து ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.
இதே ஸ்டாலினை ஈழத்திற்கு வரும்படி முன்னாள் மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார்.
இந்த ஈழத் தமிழ் தலைவர்களும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு இந்திய அரசிடம் கோரவில்லை.
அல்லது, இந்திய அரசை வலியுறுத்தும்படி தாங்கள் சந்தித்த ஸ்டாலின் அவர்களிடமும் கோரவில்லை.
ஆனால் யார் கேட்காமலும், எந்தவித பயனும் எதிர் பாராமல் வைகோ அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்.
பிக்பாஸ் பார்ப்பவர்கள் “ இப்போது ஈழத்தில் யுத்தம் இல்லை. அந்த தமிழர்கள் இந்தியா வந்து டிவி நிகழ்வுகளில் சந்தோஷமாக கலந்து கொள்கிறார்கள். அதற்கு இலங்கை இந்திய அரசுகள்கூட அனுமதிக்கின்றன” என்றே நினைப்பார்கள்.
அவ்வாறு உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் நிpனைக்க வேண்டும் என்பதே இலங்கை மற்றும் இந்திய அரசின் விருப்பமாகும். அதற்கு விஜய் டிவி யும் ஒத்துழைக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் ஈழ அகதிகள் அடைக்கப்பட்டிருப்பதையோ அல்லது ஈழத்தில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களையோ உலகத் தமிழர் அறிந்து கொள்வதை இந்த அரசுகள் விரும்புவதில்லை.
அதனால்தான் பிக்பாஸ் மற்றும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் ஈழத் தமிழர்களை காட்டும் விஜய் டிவி போன்றன தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் படும் துன்பத்தையும் காட்டுவதில்லை. ஈழத்தில் அவர்களின் அவலத்தையும் காட்டுவதில்லை.
இந்நிலையில் வைகோ அவர்களின் அறிக்கை ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை வெளி உலகிற்கு காட்டியுள்ளது.
குறிப்பு – வைகோ அவர்களின் அறிக்கையை தமிழ் இந்து வெளியிட்டுள்ளது. அதனை கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். தயவு செய்து ஒருமுறை படியுங்கள்.

No comments:

Post a Comment