Saturday, January 30, 2021

“வெங்காய” சுரேன் ராகவன்!

“வெங்காய” சுரேன் ராகவன்! யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் அப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேதான் வசித்தும் வந்தார். ஒருநாள் அவரது மகன் குளித்துக்கொண்டிருக்கும்போது தவறி கிணற்றில் விழுந்துவிட்டான். இதைப் பார்த்த பேராசிரியருக்கு கிணற்றில் இறங்க பயம் .எனவே சயிக்கிளை எடுத்துச்சென்று பல்கலைக்கழகத்தில் விடயத்தை கூறி சிலரை அழைத்து வந்தார். நல்லவேளை. யாழ்ப்பாண கிணறுகளில் எப்போதும் தண்ணி மட்டம் முழங்கால் அளவுகூட இருப்பதில்லை என்பதால் மகன் எந்தவித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டான். இதை அறிந்த பக்கத்துவீட்டுக் கிழவி அந்த பேராசிரியரிடம் “ஏம்பா இவ்வளவு படித்திருக்கிறியே. கிணத்தடியில் இருந்துகொண்டே ஐயோ என்று கத்தி இருந்தால் யாராவது வந்து காப்பாற்றியிருப்பார்களே, அதுகூட உனக்கு தெரியவில்லையா? என்று கேட்டார். புத்திஜீவிகள் என மதிக்கப்படும் பேராசிரியர்கள் ஒரு சாதாரண நடைமுறை விடயம்கூட தெரியாத அடிமுட்டாள்கள் என்பதை கூறுவதற்கான ஒரு கிண்டல் கதையாகவே இதனை நான் இத்தனை நாளும் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது சுரேன் ராகவன் என்ற புத்திஜீவியின் கருத்துக்களை கேட்கும்போது இந்தக் கதை உண்மையாக நடந்திருக்கும் என்றே நம்ப தோன்றுகிறது. சுரேன் ராகவன் ஒரு புத்திஜீவி என்பதாலேயே கடந்த ஆட்சியில் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் அவரை வடமாகாண ஆளுநராக அழைத்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர் சிங்கள கட்சி ஒன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அதனால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழ் இனத்திற்கு விரோதமாக கருத்து கூறுகிறார். கனடாவில் இனப்படுகொலை பற்றிய சட்டம் இயற்றப்படுவதால் இலங்கையில் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று தேவையானால் அவர் கூறியிருக்கலாம். ஆனால் அவரோ இன்னும் ஒருபடி மேலாக சென்று இலங்கையில் இனப்படுகொலை நடந்தமைக்கு ஆதாரம் இல்லை என்கிறார். இனி இனப்படுகொலையே நடக்கவில்லை என்றும் அவர் கூறுவார். பாவம். அவருக்கும் ரொம்ப பசிக்க ஆரம்பித்திருக்குபோல?

No comments:

Post a Comment