Monday, April 29, 2019

•கருணாகரன் அடிகளார் என்னும் கிளி சேர் !

•கருணாகரன் அடிகளார் என்னும் கிளி சேர் !
கருணாகரன்’ அடிகளார் ஒரு கிருத்தவ பாதிரியார் என்பதும் அவர் இறுதிக் காலங்களில் வன்னியில் மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே.
இன்று அவருடைய நினைவு தினம் ஆகும். 20.04.2008 யன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார் என்பதும்கூட யாவரும் அறிந்த விடயமே.
இங்கு நான் அனைவரும் அறிந்த கருணாகரன் அடிகளார் பற்றி எழுதப் போவதில்லை. பலரும் அறிந்திராத அவரது இன்னொரு பக்கமான கிளி சேர் பற்றியே எழுதப் போகிறேன்.
கிளி சேர் எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர். எனது அண்ணாவுடன் படித்தவர். அண்ணாவின் நண்பர். அதனால் அவரை எனக்கு சிறுவயது முதல் தெரியும்.
1977 தேர்தலின்போது கிளி சேர் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தார். அவர்களுக்காக மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனால் அவருக்கு பின்னர் பருத்தித்துறை இலங்கை வங்கியில் வேலை கிதை;தது.
அவர் ஊரில் லீலாரட்ணம் மாஸ்டரின் ரியூசன் சென்டரில் ஆசிரியராகவும் இருந்தார். அப்போது அவரிடம் ஆங்கிலம் பயின்றேன். அதனால்தான் நாம் அவரை “கிளி சேர்” என்று அழைத்தோம்.
உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர். வயது வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் பழகுவார். அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வார்.
நாம் கிரிக்கட் விளையாடும்போதெல்லாம் அவர்தான் எமக்கு அம்பயராக (நடுவராக) இருப்பார்.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவர் தன் வங்கி வேலையையும் விட்டிட்டு கிருத்தவ பாதிரியாவதற்கு படிக்க சென்று விட்டார் என்ற செய்தி அறிந்து ஆச்சரியம் அடைந்தேன்.
ஏனெனில் அவருடைய தம்பி ஞானம் என்பவர் ஏற்கனவே அவர்களுடைய வீட்டில் இருந்து கிருத்தவ பாதிரியாவதற்கு சென்றிருந்தார். ஒரே வீட்டில் இன்னொருவர் அதுவும் கிளி சேர் சென்றது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவ்வேளையில் ஒருநாள் இராணுவம் யாழ் நகர வீதியில் சென்ற பலரை சுட்டுக் கொன்றது. அதில் கிளி சேரும் எதிர்பாராத விதமாக சுடப்பட்டார்.
சுட்டுக் கொன்றவர்களின் உடலை ராணுவம் தன் வண்டியில் எடுத்துச் சென்று முகாமில் எரிக்க திட்டம் போட்டிருந்தது.
அவ்வாறு எடுத்துச் செல்லும்போது கிளி சேர் உடலில் உயிர் இருப்பதைக் கண்ட ராணுவ வீரன் ஒருவன் அவர் கழுத்தில் தொங்கிய சிலுவை மாலையை கண்டு ( ஒருவேளை அவ் ராணுவ வீரனும் கிருத்தவராக இருக்கக்கூடும்) அவரை இழுத்து வீதியில் எறிந்து விட்டு சென்று விட்டான்.
கழுத்தில் சூடுபட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கிளி சேரை ஊர் மக்கள் எடுத்துச் சென்று யாழ் மருத்தவ மனையில் சேர்த்தனர்.
அப்போது இதையறிந்த நான் மருத்துமனை சென்று அவரை பார்வையிட்டேன். தான் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
கழுத்தில் சூடு பட்டதால் அவரால் சரியாக பேச முடியவில்லை. மிகவும் கஸ்டப்பட்டே பேசினார். ஆனாலும் அவர் பேசினார். ஏனெனில் நான் அப்போது இயக்கத்தில் சேர்ந்து விட்டதை அவர் அறிந்திருந்தார்.
அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு “ உனக்கு இயக்கம் வேண்டாம். நீ போராட வேண்டாம். நீ படி. படிப்பை விட்டுவிடாதே” என்று கேட்டார்.
நான் அவர் மனது வேதனைப்படக்கூடாது என்பதால் “சரி பார்க்கலாம்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இதுதான் எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக இருக்கப் போகிறது என்று நான் அப்போது நினைக்கவில்லை.
அதன் பிறகு அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அனால் அவர் வன்னியில் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதவுரிமை பணிகளில் ஈடுபடுவதாக அறிந்தேன்.
எனக்கு அவரது பணி ஆச்சரியம் தரவில்லை. எனெனில் அவரது சுபாவமே அதுதான். யாராவது அவர் கண் முன்னால் வெதனைப் பட்டால் அவரால் பொறுக்க முடியாது.
அத்தகையவரை ராணுவம் கண்ணிவெடி வைத்து கொன்று விட்டதை அறிந்தபோது உண்மையிலே மிகவும் கவலை அடைந்தேன்.
எனக்கு அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருந்தது. ஒருவேளை இறுதிக் காலங்களில் அவரை நான் சந்தித்திருந்தால் நான் போராட புறப்பட்டது பற்றி என்ன கூறியிருப்பார்?
“சரிதான்” என்று ஒத்துக் கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்.

No comments:

Post a Comment