தோழர் மாறனை நினைவு கூருவோம்!
இன்று (11.04.2019) தோழர் மாறனின் 31 வது ஆண்டு நினைவு தினம் ஆகும்.
தோழர் மாறன் சென்னையில் வாழ்ந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் சேர்ந்து செயற்பட்டார்.
இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று வீரமரணம் அடைந்தார்.
1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது.
தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது.
இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை “அமைதிப் பணி” என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது.
இந்திய அரசின் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைக்கப்பட்டது.
தமிழ்நாடு விடுதலைப்படை சார்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த சம்பவத்தில் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.
இச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் தோழர் மாறனுடன்; நான் தங்கியிருந்தவேளை ஒரு உணர்வாளரை எனக்கு அறிமுகப்படுத்துவதாக அழைத்து சென்றார்.
திருச்சி வானொலி நிலையத்திற்கு முன்னால் அங்கு பணிபுரியும் வடிவேல் ராவணன் என்பவரை தோழர் மாறன் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரும் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். இப்போது என் கையில் ஒரு குண்டு கிடைக்குமாயின் நானே கொண்டுபோய் இந்த வானொலி நிலையத்தில் வைப்பேன் என்றெல்லாம் கூறினார்
இறுதியாக மாறனைப் பார்த்து “நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்” என்று கூறி அனுப்பினார் இந்த உணர்வாளர் வடிவேல் ராவணன்
இவர் கூறியபடி; தோழர் மாறன் முன்னால் சென்றார். ஆனால் இவரோ பின்னால் வரவில்லை. மாறாக ஆப்புரூவராக மாறி காட்டிக் கொடுத்தார்.
பின்னர் நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஒரு மறியல் போராட்டத்தில் கைதாகி உள்ளே வந்த வடிவேல் ராவணன் சிறைக்குள் என்னை சந்தித்தார்.
தான் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் அப்ரூவராக மாறியதாகவும் ஆனால் அது தவறு என்று இப்போது உணர்ந்து வருந்துவதாக என்னிடம் கூறினார்.
வழக்கு விசாரணைக்கு வரும்போது நிச்சயம் அரசுக்கு சார்பாக சாட்சி கூறமாட்டேன் என்று உறுதியளித்தார்.
அதன்பின்பு தன் கட்சியை சேர்ந்த பசுபதி பாண்டியனுக்காக மறியல் போராட்டம் செய்து டாக்டர் ராமதாஸ் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
.
சிறைக்குள் பல தடவை டாக்டர் ராமதாஸ் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் வடிவேல் ராவணன் விடயத்தை கூறினேன்.
.
சிறைக்குள் பல தடவை டாக்டர் ராமதாஸ் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் வடிவேல் ராவணன் விடயத்தை கூறினேன்.
அவரும் வடிவேல் ராவணன் அப்பரூவராக மாறியது தவறு என்றும் வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர் சாட்சி வழங்காமல் இருப்பார் என உறுதியளித்தார்.
ஆனால் வடிவேல் ராவணன் தான் உறுதியளித்தமைக்கு மாறாகவும் டாக்டர் ராமதாஸ் உறுதியளித்தமைக்கு மாறாகவும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்ரூவராக சாட்சி அளித்து காட்டிக் கொடுத்தார்.
இதில் இன்னும் வருத்தம் என்னவெனில் அந்த வழக்கில் சாட்சியாக இருந்த அரசு ஊழியர்கள்கூட தமக்கு ஞாபகம் இல்லை, உறுதியாக தெரியாது என்று சாட்சி சொன்னார்கள்.
ஆனால் இந்த வடிவேல் ராவணன் மிக தெளிவாகவும் உறுதியாகவும் தன் முழு திறமையையும் காட்டி சாட்சி வழங்கினார்.
இவ்வாறு காட்டிக் கொடுத்த நபரே தற்போது விழுப்புரம் தொகுதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
காட்டிக் கொடுத்த நபரை சிறந்த உணர்வாளர் என்று சிலர் அவருக்கு சேட்டிபிக்கேட் கொடுக்கிறார்கள்.
ஆனால் அவரோ இதுவரை தன் தவறை உணரவும் இல்லை. அதற்காக வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தோழர் மாறன் தியாகத்தை எப்படி நினைவு கூருவது?
No comments:
Post a Comment