Sunday, May 31, 2020

•திமுக உடன் பிறப்புகளுக்கு!

•திமுக உடன் பிறப்புகளுக்கு! கலைஞர் கருணாநிதி தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்று கேட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன். அப்போது பல திமுக உடன் பிறப்புகள் நான் பொய் கூறுவதாகவும் போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஓடி வந்து லண்டனில் வாழ்வதாகவும் எழுதினார்கள். அத்தகைய திமுக உடன் பிறப்புகள் இப் பதிவு நான் யார் என்பதை அறிந்து கொள்ள உதவும்; என நம்புகிறேன். நான் சென்னையில் வளசரவாக்கம் என்ற இடத்தில் தங்கியிருந்தபோது 12.03.1991 யன்று இரவு இரண்டு மணிக்கு கியூ பிராஞ் டிஎஸ்பி ராமையா என்னை பிடித்துச் சென்றார். மத்திய புலாய்வுதுறை (ஜபி) பிடிக்கச் சொன்னதால்தான் தான் என்னைப் பிடிப்பதாகவும் நாளை காலை அவர்கள் என்னுடன் பேசுவார்கள் என்றும் டிஎஸ்பி ராமையா கூறினார். அடுத்த நாள் காலை மந்தைவெளி கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்து இரண்டு ஜபி அதிகாரிகள் என்னிடம் பேசினார்கள். அவர்கள் சுற்றிவளைக்காமல் நேரிடையாக விடயத்திற்கு வந்தார்கள். கலைஞர் கருணாநிதிக்கு எதிரான சதித்திட்டத்திற்கு என்னை ஒத்துழைக்கும்படியும் அப்படி ஒத்துழைத்தால் 50 லட்சம் ரூபா பணம் தருவதாகவும் விரும்பிய வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்கள். ஒத்துழைக்க மறுத்தால் வழக்கு போட்டு பல வருடங்கள் என்னை சிறையில் அடைப்போம் என்றும் மிரட்டினார்கள். ஆனாலும் நான் சம்மதிக்கவில்லை. இவையாவும் அங்கு கியூ பிராஞ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த திமுக ஆதரவாளரான ஏகாம்பரம் மூலம் கலைஞரும் உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்தார். இப்போது இதை நான் கூறும்போது திமுக உடன் பிறப்புகள் நம்பமாட்டார்கள் என்று தெரியும். இதோ அவர்களுக்கான ஆதாரம். 30.08.1995 யன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நான் வாக்குமூலம் அளித்திருந்தேன். அப்போதே இதனை நான் நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறேன். இதோ அந்த வரிகள், “12.03.1991 அன்று இரவு இரண்டுமணியளவில் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கியூ பிரிவு போலீசார் என்னைப்பிடித்துச் சென்றனர். உதவிக்கண்காணிப்பாளர், ,ராமையா தலைமையில் வந்த கியூ பிரிவு போலீசார் என்னைப்பிடித்துச் சென்று மந்தைவெளியிலுள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்தனர். அதன்பின் அங்கு மத்திய உளவுப்படையினைச் சேர்ந்த ஜ.பி அதிகாரிகளினால் தமது சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி மிரட்டப்பட்டேன். கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு மத்திய அரசினால் "டிஸ்மிஸ்" செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு உருவான அனுதாப ஆதரவை உடைக்கும் வண்ணம், தி.மு.க கட்சியை ஒரு வன்முறைக் கட்சியென்று மக்கள் மத்தியில் காட்டுவதற்கு, மத்திய உளவுப்படையானது சதித்திட்டம் தீட்டியிருந்தது. இச்சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்கும்படி என்னை மிரட்டியது. நான் இதற்கு இணங்க மறுத்தேன். இதனால் கோபமடைந்த மத்திய மாநில உளவுப் படையினர், அவர்கள் குறிப்பிட்டது போன்றே என்மீது பொய் வழக்குப் போட்டதோடு இத்தனை வருடங்களாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களின் சதித்திட்டத்திற்கிணங்க மறுத்தமையினாலேதான் நான் பழிவாங்கப்படுகிறேன்.” குறிப்பு - எனது இவ் நீதிமன்ற வாக்குமூலம் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலில் பக்கம் 88ல் இடம் பெற்றுள்ளது. கீழே உள்ள புகைப்படம் மதுரை சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட படம் ஆகும். (1995) Image may contain: 3 people, people standing and outdoor

No comments:

Post a Comment