Wednesday, November 30, 2022

தாய் பாதுசாம்மாள் 2வது நினைவு தினம்

•தாய் பாதுசாம்மாள் 2வது நினைவு தினம் 1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார். தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட. மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்? ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே. தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய். தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை. மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை. நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை. அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்? இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை. ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன். அந்த தாயாரின் இரண்டாவது நினைவு தினம் இன்று ஆகும். அவருக்கு என் அஞ்சலிகள்.

No comments:

Post a Comment