Friday, March 31, 2017

•மலையக மக்களின் 200 வருட துயரம் !

•மலையக மக்களின் 200 வருட துயரம் !
இலங்கையில் தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கென தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்களின் 200 வது வருடம் இதுவாகும்.
வரும்போதும் அவர்கள் மிகுந்த வேதனையை அனுபவித்தார்கள். அதன்பின் இன்றுவரை அவர்களின் துயரம் தொடர்கிறது.
இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் அவர்களின் வாழ்விற்கு போதிய வருமானம் இதுவரை வழங்கப்படவில்லை
அன்று ஆங்கிலேயர் கட்டிக்கொடுத்த லயன்களிலேயே இன்றும் வாழ்கின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் மண் சரிவில் அவர்கள் புதைகின்றபோது வீடு கட்டி தருவதாக வாக்குறுதி வழங்கப்படும். ஆனால் இதுவரை வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.
அவர்கள் கூலி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வடக்கத்தையான் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் தமிழர்கள் என்று அழைக்கப்படவில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது அவர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் மிக விரைவில் அவர்கள் அனைவரினதும் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
இன்று அவர்கள் தம்மை மலையக தமிழர் என அழைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர்களின் தலைமை என்று கூறிக்கொண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி ஏமாற்றுகின்றதோ அதேபோன்று மலையக மக்களின் தலைமை என்று கூறிக்கொண்டு இதொக ஏமாற்றுகின்றது.
பதவி பெற்று சம்பந்தர் அய்யா எப்படி பூர்வீக தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றாரோ அதேபோன்று அறுமுகம் தொண்டமான் மலையக தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கின்றார்.
இங்கு சோகம் என்னவெனில் இடதுசாரிகள்கூட அந்த மக்களை வென்றெடுத்து அவர்களுக்காக போராட தவறிவிட்டார்கள்.
இழப்பதற்கு தமது உயிரை தவிர வேறு எதுவுமற்ற மக்களே புரட்சிக்கு தலைமை தாங்க முடியும் என்று மாக்ஸ் கூறினார். அதன்படி இலங்கை புரட்சிக்கு தலைமை தாங்ககூடிய தகுதி கொண்ட மக்கள் மலையகத்தில் வாழும் 10 லட்சம் உழைக்கும் மக்களே.
வடக்கு கிழக்கு மக்கள் முன்வைத்த தமிழீழ தீர்வால் மலையக மக்களுக்கு பயன் இல்லை என்றாலும் கணிசமான மலையக இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்றும்கூட சிறைகளில் மலையக தமிழ் இளைஞர்கள் வாடுகின்றார்கள்.
புலிகளின் தளபதியாக இருந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் புலிகளுக்கு சாப்பாடு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் மலையகத்தை சேர்ந்த ஒரு வயதான தாயார் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த வருடம் சிறையிலேயே மரணமடைந்தார்.
மலையக மக்களும் தமிழர்கள்தான். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா இதவரை ஒருநாள்கூட மலையக மக்களுக்காக குரல் கொடுத்தது இல்லை.
200 வருடங்கள் அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்கள் வாழ்வு மலர வேண்டும்.

No comments:

Post a Comment