Friday, March 31, 2017

•ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்களின் தவறான முன்னுதாரணம்!

•ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்களின் தவறான முன்னுதாரணம்!
வடமராட்சியில் மட்டுமன்றி யாழ் குடாநாட்டிலேயே புகழ் பெற்ற பாடசாலைகளில் ஹாட்லிக்கல்லூரி ஒன்றாகும்.
அப் பாடசாலை அதிகளவான மருத்துவர்கள், பொறியிலாளர்கள் மட்டுமன்றி அதிகளவான போராளிகளையும் தந்த பாடசாலை ஆகும்.
அப் பாடசாலையில் 1983ம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றுகூடல் ஒன்றை கேரளாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உலகெங்கும் இருந்து இப் பழைய மாணவர்கள் சுமார் 40 பேர் கேரளா சென்று அங்குள்ள ஆடம்பர தாஜ்ஹோட்டலில் இவ் ஒன்றுகூடலை நடத்தி அப் படங்களை சமூகவலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்த ஆடம்பர ஹோட்டலை 6 நாட்களுக்கு மொத்தமாக பதிவு செய்துள்ளனர். பயண செலவு, சாப்பாட்டு செலவு மற்றும் சந்தோச செலவுகள் வருமாறு,
சராசரி ஒருவருக்கான பயண செலவு – 450 பவுண்ட்ஸ்
சராசரி ஒருவருக்கான தங்குமிட மற்றும் சாப்பாட்டு செலவு- 230 பவுண்ட்ஸ்
மேலதிக செலவுகள்- 200 பவுண்ட்ஸ்
ஒருவருக்கான ஆகக்குறைந்த செலவு மொத்தம்- 880 பவுண்ட்ஸ்
40 பேருக்குமான ஆகக்குறைந்த மொத்த செலவு – 35200 பவுண்ட்ஸ்
அதாவது 6512000ரூபா செலவு செய்து 40 பேர் கேரளாவில் ஒன்றுகூடலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ( இது ஆகக்குறைந்த செலவுதான். ஆனால் உண்மையான செலவு இதைவிட இரட்டி மடங்கு என்கிறார்கள்.)
பழைய மாணவர்கள் தங்கள் செலவில் தங்கள் மகிழ்சிக்காக சுமார் 65லட்சம் ரூபா செலவில் ஒன்றுகூடலை நடத்துவதை நாம் விமர்சிக்க முடியாதுதான்.
ஆனால் அவர்களின் சமூக அக்கறையற்ற இந்த செயற்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமோ என்றுதான் அச்சப்படுகின்றோம்.
பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் நடத்துவது தவறு இல்லை. ஆனால் இவர்கள் இந்த ஒன்று கூடலை கேரளாவில் நடத்தியத்திற்கு பதிலாக தமிழகத்தில் உள்ள ஒரு அகதிமுகாமில் நடத்தியிருந்தால் அகதிகளுக்கும் நன்மை கிடைத்திருக்கும். இவர்களுக்கும் தமது ஒன்றுகூடல் அகதிகளுக்கு உதவியிருக்கிறது என்ற திருப்தி கிடைத்திருக்கும்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியவிடயம் என்னவெனில் தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு பல தமிழக மக்கள் தங்கள் கஸ்டநிலையிலும் பெரும் உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈழத் தமிழர்கள் கேரளா வந்து ஹோட்டலில் கூத்தடிக்கின்றனர் என்று அவர்கள் அறிந்தால் அப்புறம் அவர்கள் எப்படி அகதிகளுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்?
இதேவேளை இந்தோனேசியாவில் உள்ள அகதிகள் தமது அகதி அந்தஸ்துக்காக போராடுகிறார்கள். அதில் காயம்பட்ட இருவர் தமது மருத்துவத்திற்கு உதவி கோரி உலகில் வாழும் தமது தமிழ் உறவுகளிடம் வேண்டியுள்ளனர்.
எனவே இந்த பழைய மாணவர்கள் தமது ஒன்றுகூடலை இந்தோனேசிய கடற்கரையில் நடத்தியிருந்தால் அங்குள்ள அகதிகளுக்கு பெரும் உதவியாக அமைந்திருக்கும். காயம்பட்ட அந்த முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ உதவியும் கிடைத்திருக்கும்.
தாயகத்தில் ஒருபுறம் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் எமது மக்கள் தற்கொலை செய்கின்றனர். இன்னொருபுறம் மக்கள் பல நாட்களாக பட்டினி கிடந்து தமது நிலங்களை மீட்க போராடுகின்றனர்.
கேப்பாப்புலவில் பள்ளிக்கு செல்லாமல் 29 நாட்கள் மாணவர்கள் போராடினார்கள். இந்நிலையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் என்ற பெயரில் பணத்தை செலவு செய்வது என்ன நியாயம்?
எமது கவலை என்னவெனில் இனி வரும்காலத்தில் இதைப் பார்த்து மற்ற மாணவர்களும் கோடிக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து ஒன்றுகூடலை நடத்துவதற்கு இது ஒரு முன் உதாரணமாக அமைந்துவிடுமோ என்பதுதான்.
தயவு செய்து இனியாவது சிந்தித்து சமூக அக்கறையோடு செயற்படுங்கள்!

No comments:

Post a Comment