Wednesday, June 29, 2022

இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?

இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன? கலைஞர் வெறும் மாநில முதலமைச்சர்தான். அவருக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள். இன்னும் சிலர், கலைஞர் மட்டுமல்ல இந்திய அரசே நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்காகவே யுத்தத்தை நடத்தினோம் என்று மகிந்த ராஜபக்சா கூறிய போது இந்திய அரசோ அல்லது இந்த இவர்களோ ஏன் அதை மறுக்கவில்லை? சரி. பரவாயில்லை. இந்தியாவின் உதவி இல்லையேல் எம்மால் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது என்று கோத்தபாயா கூறினாரே. அப்போது அதை ஏன் இந்திய அரசோ அல்லது இவர்களோ மறுக்கவில்லை? சரி. பரவாயில்லை. யுத்தத்தை நிறுத்த இந்தியா விரும்பவில்லை. புலிகள் அழியும்வரை யுத்தம் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருக்கிறாரே. இதற்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள்? சரி. அதெல்லாவற்றையும் விடுவோம். நாராயணனும் சிவசங்கர்மேனனும் ஒவ்வொரு முறையும் கொழும்பு சென்று திரும்பும்போது சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை எதற்காக சந்தித்தனர்? எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சரிடம் இவர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்? கலைஞரிடம் திருக்குறளுக்கு விளக்கம் கேட்க சந்தித்தார்கள் என்று கூறப்போகிறார்களா? பிரபாகரனை கைது செய்யும்போது கௌரவமாக நடத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை விட்டிருந்தார். பிரபாகரனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படப்போகின்றது என்பது எந்தவித அதிகாரமும் இல்லாத முதலமைச்சரான கலைஞருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது? இறுதி நேரத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கலைஞருடன் பேசக் கேட்டபோது “பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் கூறுங்கள்” என்று கனிமொழி கூறினாரே. அப்போதாவது கலைஞர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நடேசனிடம் கூறியிருக்கலாமே ? மாறாக கனிமொழி மூலம் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு சரண்அடையும்படி எந்த அதிகாரமும் இல்லாத கலைஞர் ஏன் எற்பாடு செய்தார்? குறைந்தபட்சம் சரணடையும்போது கொல்லப்படப் பொகிறீர்கள் என்பதையாவது இந்த எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சர் நடேசனிடம் கூறியிருக்கலாமே? மத்திய அரசுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போனதுடன் தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையினையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதலமைச்சர் கருணாநிதி. இந்த விபரங்களை தெரியாத தமிழக அப்பாவி உடன்பிறப்புகள் கலைஞரை ஆதரிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நன்கு விபரம் தெரிந்த சில ஈழத் தமிழர் கலைஞரை நியாயப்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை

No comments:

Post a Comment