Wednesday, December 30, 2015

•தியாகி அப்துல் ரவூப்பை நினைவு கூருவோம்!

•தியாகி அப்துல் ரவூப்பை நினைவு கூருவோம்!
சிம்பு பாடிய பாடல் ஆபாசமா? இல்லையா? என்ற இன்றைய மாபெரும் இலக்கிய பட்டிமன்றத்தின் நடுவே ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த அப்தல் ரவூப் தியாகம் மறந்து போனது ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லைத்தான்.
என்ன செய்வது? அப்தல் ரவூப்பிற்கு எல்லோரும் போல் ஒன்றாக கோசம்போட்டுவிட்டு கலைந்து போகத் தெரியவில்லை. அவன் ஈழத் தமிழர்களையும் தன் உடன்பிறப்பாக நினைத்தது முட்டாள்தனம்தான்.
தமது அபிமான நடிகர்களுக்கு கட்அவுட் கட்டி பால் அபிசேகம் செய்யும் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அப்துல் ரவூப் பிழைக்கத் தெரியாதவன்தான் போலும்.
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தேன. எமக்கு பத்திரிகைகளோ , சஞ்சிகைகளோ எதுவுமே அனுமதிக்கப்படவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை காவலுக்கு நிற்கும் சில பொலிஸ்காரர்களிடம் மட்டுமே தெரிந்து கொண்ட காலம் அது.
அப்போது ஒரு காவலர் துறையூரில் அப்துல் ரவூப் என்ற முஸ்லிம் இளைஞன் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்துவிட்டான் என்ற செய்தியை கூறினார்.
இச் செய்தியை கேட்டதும் நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம். ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழக மக்களின் ஆதரவு இல்லை என்று கூறப்பட்ட காலம்.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
எதிரிக்கு எந்த இழப்பையும் கொடுக்காமல் தன்னைத்தானே எரித்து மரணிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை.
மாறாக ஆயுதம் ஏந்திப் போரிட்டு மடிவதே சிறந்த வழி என நாம் கருதுகிறோம். இருப்பினும் ரவூப் மரணம் பல பயன் உள்ள செய்திகளை தமிழ் மக்களுக்கு தந்துள்ளது.
ரவூப் தியாகத்தைப் போற்றுவோம்!
அவரை என்றும் நினைவில் கொள்ளுவோம்!!

No comments:

Post a Comment