Tuesday, March 22, 2016

•உள்ளவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இந்திய நியாயமா?

•உள்ளவனுக்கு ஒரு நியாயம்
இல்லாதவனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நியாயமா?
8000கோடி ரூபா கடன் வாங்கிய விஜய் மல்லையாவை பாதுகாப்பாக லண்டனுக்கு அனுப்பிவைத்த பொலிஸ் ஒரு தவணை கடன் கட்ட தவறிய விவசாயியை அடி உதைத்து இழுத்து செல்கிறது.
இந்தியா முழுவதும் இதுவரை பல்லாயிரம் விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால் பல்லாயிரம் கோடி ருபா கடனை கட்டாமல் ஏமாற்றிய மல்லையா முதலாளி இளம் பெண்களுடன் குத்தாட்டம் போடுகிறார்.
அரசும் அதன் ஏவல் நாயான பொலிசும் முதலாளிகளுக்கு காவல் காக்கிறது. ஆனால் ஏழை விவசாய மக்களை அடித்து துன்புறுத்துகிறது. அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது.
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஏழைகளுக்கு ஒரு நியாயமும் முதலாளிகளுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி கடனை ஒரு தவணை கட்ட தவறியதற்காக மக்கள் முன்னிலையில் அடித்து அசிங்கப்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உண்டா? ஒரு விவசாயியை அவமானப் படுத்துவதை எப்படி விவசாய சங்கங்கள் வேடிக்கை பாhத்துக் கொண்டிருக்கின்றன?
ஏன் விவசாய சங்கங்கள் பொங்கி எழவில்லை? ஏழை விவசாயி மீது கைவைத்த அந்த பொலிஸ் மீதோ அல்லது அந்த வங்கி மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
முதலாளிகளின் கோடிக்கணக்கான ரூபா கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு ஏன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கின்றது?
ஒரு விவசாயி தாக்கப்பட்டது குறித்தோ அல்லது பல விவசாயிகள் தற்கொலை செய்து வருவது குறித்தோ எந்த அரசியல் கட்சியும் அக்கறை கொள்ளவில்லை.
தாக்கப்பட்ட விவசாயிக்கு நடிகர் கருணாகரன் உடனடியாக ஒரு லட்சம் ரூபா கொடுத்து உதவியுள்ளார். நடிகர் விசால் உதவ தயார் என்று கூறியுள்ளார். ஆனால் உதவ வேண்டிய அரசு அல்லது அரசியல் கட்சிகளோ மௌனமாக இருக்கின்றனவே?
இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் விவசாயிகள் தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும். அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இதுவரை விவசாயிகள் அடி வாங்கியது போதும்
இதுவரை விவசாயிகள் தற்கொலை செய்தது போதும்.
இதுவரை அடிமையாக கிடந்தது போதும்
பொறுத்தது போதும். இனியாவது பொங்கி எழ வேண்டும்.

No comments:

Post a Comment