Tuesday, March 22, 2016

•இவர்களா தமிழ் மக்களின் தலைவர்கள்?

•இவர்களா தமிழ் மக்களின் தலைவர்கள்?
தமிழ்நாட்டில் அதிகாரிகளின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு அகதி தற்கொலை செய்துள்ளார். அதுவும் ஆறு பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார் எனின் அங்கு நிலவும் கொடுமைகளை ஒவ்வொரு தமிழனும் நன்கு உணர முடியும்.
அந்த அகதி இறப்பதற்கு முன்னர் தன் மரணமாவது மற்ற அகதிகளுக்கு விடுதலை பெற்று தரட்டும் என்று கூறியிருக்கிறார். தான் இறந்து மற்றவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று ஒரு அகதி நினைத்துள்ளார்.
ஆனால் இங்கு கொடுமை என்னவெனில் ஈழ தமிழ்த் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்கூட இது குறித்து அக்கறை கொள்ளவில்லை. கண்டனம் தெரிவிக்கவில்லை.
ரோமாபுரி பற்றி எரிந்தபோது அதன் மன்னர் பிடில் வாசித்தாராம் என நாம் அறிந்திருக்கிறோம். அது உண்மையோ தெரியவில்லை. ஆனால் எமது இன்றைய தமிழ் மன்னர்கள் தமிழ் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது இந்திய தூதுவருடன் விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
அகதி முகாமில் இருக்கும் தமிழ் மக்களையே நன்கு பராமரிக்காத இந்திய அரசு இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை பெற்று தரும் என்று இந்த மன்னர்கள் எமக்கு பிடில் வாசிக்கிறார்கள்.
சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யும்படி உண்ணாவிரதம் இருக்கிறார்கள். உடனே இந்த மன்னர்கள் பொதுக்குழு கூடினார்கள். இவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று இவர்கள் தீர்மானம் போடவில்லை. மாறாக கைதிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்த மன்னர்கள் தீர்மானம் போடுகிறார்கள்.
கைதிகளை விடுதலை செய்யும்படி கிளிநொச்சியில் மக்கள் போராடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் பல்கலைகழக மாணவர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் எமது மன்னர்கள் கைதிகள் பேராடக்கூடாது என்று தீர்மானம் போடுகிறார்கள்.
மன்னர் சம்பந்தர் அய்யா வசிப்பது இந்தியாவில். நம்ம வெடிகுண்டு முருகேசன் மாவை சேனாதிராசா இருப்பது இந்தியாவில். அடைக்கலநாதன் செல்வம் இருப்பது இந்தியாவில். ஆனால் இவர்கள் எவரும் இந்த இறந்த அகதியை சென்று பார்வையிடவுமில்லை. அறுதலாக ஒரு வாhத்தை இதுவரை கூறவுமில்லை.
மாகாண முதல்வர் விக்கி அய்யா தமிழகம் சென்றார். அவர் ஒரு முகாமிற்கும் சென்று அகதிகளை பார்வையிடவுமில்லை. அவர்களை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று கோரவுமில்லை.
இப்படி எமது தலைவர்களே எமது மக்கள் குறித்து பேசாவிடின் தமிழக அதிகாரிகள் " அகதிகள் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள்" என்று கருவதுதில் என்ன தவறு?
இந்த மன்னர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபா சம்பளம் மற்றும் அலவன்சுகள். ஒரு கோடி ருபா பெறுமதியான சொகுசு வாகனம். இது போதாது என்று வாரா வாரம் இந்திய தூதுவரின் விருந்து மற்றும் கவனிப்புகள். ஆனால் மக்களுக்காக இவர்கள் குரல் கொடுப்பதேயில்லை.
ஜெயா அம்மையார் மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருட தண்டனை பெற்ற போது வழக்கறிஞரான உருத்திரகுமார் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கை விட்டார்.
ஆனால் தமிழ் அகதிகள் எவ்வித வழக்கும் இன்றி பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர் இதுவரை கோரவில்லை.
அதுமட்டுமன்றி அதிகாரிகளின் தொல்லை தாங்கமுடியாமல் அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அதற்குகூட அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் இவர் தான் நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் என்று தன்னைக் கூறிக்கொள்கிறார்.
இவர்கள் தமிழ் மக்களின் தலைவர்களா?
அல்லது தறுதலைப் பன்னாடைகளா?

No comments:

Post a Comment