Monday, May 29, 2023

1988ல் நான் நாடு திரும்புவதற்கு முன்

1988ல் நான் நாடு திரும்புவதற்கு முன் பெண்ணாடம் சென்று புலவர் கலியபெருமாள் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு அறிமுகப்படுத்திய தோழர் கரூர் இளங்கோ. புலவர் கேட்டுக்கொண்டபடி தோழர்கள் இளங்கோ மற்றும் மாறனுக்கு பெண்ணாடம் ஆற்றங்கரையில் குண்டு பயிற்சிகளை நான் வழங்கினேன். அதன்பின் 11.04.1988 யன்று மாறனும் இளங்கோவும் ஈழத்தில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு கோரி தமிழ்நாடு விடுதலைப்படை சார்பில் கொடைக்கானல் டிவி டவருக்கு வெடி குண்டு வைக்க முயற்சி செய்தனர். குண்டு தவறுதலாக வெடித்ததால் சம்பவ இடத்திலேயே மாறன் மரணமடைந்தார். இளங்கோ பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இவ் வழக்கில் இளங்கோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் கடந்த வருடம் இளங்கோ அவர்கள் தொலைபேசியினூடாக என்னுடன் பேசினார். ஆனால் அதுதான் அவர் என்னுடன் பேசும் கடைசிப் பேச்சாக இருக்கப்போகிறது என நான் நினைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் அவர் சுகயீனம் காரணமாக மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்தடைந்துள்ளது. இங்கு வேதனை என்னவென்றால் அவர் பிறந்த திகதியும் எனக்கு தெரியவில்லை. அவர் இறந்த திகதியும் எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஒரு அஞ்சலிப்பதிவு எழுதுவதற்காக பலரிடம் இவ் விபரங்களை கேட்டேன். இன்னும் கிடைக்கவில்லை. வெட்கத்துடன் அவருக்கு என் அஞ்சலிகளை பதிவு செய்கிறேன். தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர். ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தவர். அதனால் பல வருடங்கள் சிறைக் கொடுமையை அனுபவித்தவர் தோழர் இளங்கோ.

No comments:

Post a Comment