Monday, May 29, 2023

1991 ராஜீவ் காந்தி கொலையின் பின்

1991 ராஜீவ் காந்தி கொலையின் பின் ஒருநாள் சிவராசனும் சுபாவும் கடலில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் பின்னர் விசாரணையின் போது அவர்கள் சிவராசன் சுபா இல்லை என்பதும் சாதாரண அகதிகளான தங்கவேலாயுதம் மற்றும் அவர் மனைவி சுமதி என அறிய வந்தது. ஆனாலும் பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டதால் புலிகள் எனக் குறிப்பிட்டு அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது மதுரை சிறையில் தமிழ்செல்வன் என்று ஒரு அதிகாரி இருந்தார். அவர் எல்லா சிறைவாசிகளையும் கடுமையாக அடித்து துன்புறுத்துவார். அவர் ஒருநாள் தங்கவேலாயுதத்தை “அகதி நாயே” என்று திட்டி கடுமையாக அடித்துவிட்டார். இதனால் நான் உட்பட அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் எல்லாம் அதிகாரி தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்தோம். எமது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சிறையில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவர் கணவர் ஜெகதீசன் , தடா சிறைவாசிகளான தமிழ்நாடு மீட்பு படையினர் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது என்னை பார்வையிட தோழர் இளங்கோ வந்திருந்தார். நான் உண்ணாவிரதத்தில் இருந்ததால் அதனை காரணங்காட்டி பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. நான் உண்ணாவிரதம் இருந்ததும் அதன் காரணத்தையும் தெரிந்துகொண்ட இளங்கோ சிறைவாசலிலே காவல் இருந்து அந்த அதிகாரி தமிழ் செல்வனை பிடித்து மிரட்டிவிட்டார். “கேட்பதற்கு யாரும் இல்லாத அனாதை என்று தோழர் பாலனை நினைத்துவிட்டாயா? எமது தோழருக்கு ஏதும் நடந்தால் மதுரை சிறையே இருக்காது. குண்டு வீசித் தகர்த்துவிடுவோம்” என தோழர் இளங்கோ கோபத்தில் கூறியிருக்கிறார். அதிகாரி தமிழ்செல்வன் பயந்துவிட்டார். அதன்பின்பு அவர் ஈழத் தமிழர் இருக்கும் பக்கமே வருவதில்லை.

No comments:

Post a Comment