Monday, February 15, 2016

•தோழர் சண்முகதாசன் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு.

•தோழர் சண்முகதாசன் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு.
இன்று (08.02.2016) தோழர் சண் அவர்களின் நினைவு தினமாகும். அதையிட்டு அவருடைய நினைவுகள் சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன்.
தோழர் சண் அவர்களை பல காலமாக தெரிந்திருந்தாலும் அவருடைய இறுதிக் காலங்களிலேயே அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத அற்புதமான நாட்கள் அவை.
தமிழ்நாட்டில் இருந்த பல புரட்சியாளர்கள் அவரை நேரில் பார்க்க விரும்பினார்கள். அவரை அழைத்துவரும்படி என்னிடம் கேட்டார்கள்.
தோழர் சண் அவர்களது அழைப்பை ஏற்று இந்தியா வர விரும்பியபோதும் அவரது உடல்நிலை அதற்கு இடங் கொடுக்கவில்லை. இந் நிலையில் அவரை வீடியோவில் பதிவு செய்து தமிழக புரட்சியாளர்களுக்கு காட்டுவதற்கு நான் முடிவு செய்தேன்.
அதன்படி தோழர் சண் அவர்களிடம் நான் சுமார் 90 நிமிடம் கேள்வி பதில் பாணியில் பேட்டி ஒன்றை எடுத்தேன். அதை ஒளிப்பதிவு செய்தவர் தற்போது பிபிசி தமிழோசையில் அறிவிப்பாளராக இருக்கும் சீவகன் அவர்கள். அவரை ஏற்பாடு செய்து இதனை எடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியவர் தற்பொது நியூசிலாந்தில் வசிக்கும் எனது நண்பர் வரதராஜன்.
இந்த பேட்டி தோழர் சண் அவர்களின் வீட்டிலேயே பதிவு செய்தோம். எடுக்கும் போது தோழர் சண் அவர்கள் மிகுந்த களைப்படைந்தபோதும் அவர் மிக ஆர்வத்தோடு பங்குகொண்டார்.
அப்போது எனக்கு ஒரு வெள்ளை சட்டை அணிந்தால் படத்திற்கு நன்றாக இருக்கும் என சீவகன் அபிப்பிராயப்பட்டபோது உடனே தோழர் சண் அவர்கள் தனது சட்டை ஒன்றை எனக்கு கொடுத்து உதவியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
எனது எட்டுவருட சிறைவாழ்வை முடித்தவிட்டு அந்த வீடியோ பிரதியை தேடியபோது ஒரு பிரதிகூட பெற்றுக்கொள்ள முடியாமற் போய்விட்டது. அந்த வீடியோவில் ஒரு பிரதிகூட என்னிடம் இல்லை என்பது எனக்கு மிக்க கவலையை கொடுக்கிறது .யாரிடமாவது அது இருக்குமாயின் தயவு செய்து எனக்கு ஒரு பிரதி தாருங்கள்.
தோழர் சண் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருடைய "ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்" நூலை இந்தியாவில் தமிழ்நாடு அமைப்புக்கமிட்டியின் கிளாரா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டேன்.
அச்சிட்ட அந்த புத்தகங்களை அவருக்கு சென்னையில் இருந்து அஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவற்றை பெற்றுக் கொண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டி கடிதம் அனுப்பியிருந்தார்.
அவருடைய கடிதம் கண்டதும் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதுவே அவர் எனக்கு அனுப்பும் கடைசிக் கடிதமாக இருக்கப் போகின்றது என்று நான் நினைக்கவேயில்லை.
நான் வேலுர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை தோழர் சண்முகதாசன் சுகயீனம் காரணமாக இங்கிலாந்தில் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை கொண்டேன்.
இன்று அவர் இல்லையே என ஏங்குகிறேன். அவர் இருந்திருந்தால் எமக்கு ஒரு சிறப்பான வழிகாட்டியாக இருந்திருப்பார் என்பதை உணர்கிறேன்.
அவர் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் அவர் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தமிழ் தலைவர் . அதுமட்டுமல்ல புரட்சிகர சக்திகளால் மதிக்கப்பட்ட ஒரு சர்வதேச தலைவரும்கூட.

1 comment:

  1. I have followed Marxist Classes conducted by Comrade Shan, at the CTUF Headquarters at 123 Union Place, Colombo, during the period 1966-1968. He was fluent in Tamil, Sinhala and English, a great orator in the three languages, a nice gentleman above all.

    ReplyDelete