Monday, February 15, 2016

• அந்தநாள் ஞாபகம் வந்ததே !

• அந்தநாள் ஞாபகம் வந்ததே !
கடந்த 08.02.2016 யன்று தோழர் சண்முகதாசன் அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு பதிவு ஒன்று போட்டிருந்தேன். அதில் தோழர் சண் அவர்களை நான் பேட்டி கண்ட வீடியோ பிரதி தவறிவிட்டதை மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தேன். அதைப்படித்த தற்பொது நியூசிலாந்தில் இருக்கும் நண்பர் வரதன் அவர்கள் அந்த சம்பவத்தை விரிவாக அருமையாக நினைவு கூர்ந்துள்ளார். அவரது வரிகளைப் படித்ததும் மீண்டும் அந்த இனிய நினைவுகள் ஞாபகம் வந்துள்ளன. நண்பர் வரதனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
இதோ நண்பர் வரதன் எழுதிய வரிகள்...
தலைவர் தோழர் சண்முகதாசன் : எனது நினைவுகள்.
தோழர் பாலன் எடுத்த கடைசி விவரணம்
பள்ளி நாட்களிலிருந்தே அவரது கருத்தரங்குகள் நெல்லியடியில் பொதுவாக நெல்லியடி முருகன் கோவிலடி -வதிரி வீதி -போன்ற இடங்களில் நடைபெறுகையில் நான் போய்ப் பார்ப்பது வழக்கம்.
ரியூசன் முடிந்ததும் சக நண்பர்களுடன் இவரது கூட்டம் நடைபெறுகிறது என்றால் போய்ப் பார்ப்பதற்கு எமக்கு ஆர்வம் இருந்தது.
அவருடைய நகைச்சுவைத்தனமான பேச்சுக்களை நான் வீட்டில் சென்று எனது தாயாருடன் பகிர்ந்து சிரிப்பது வழக்கம்.
எனது தாயார் ஒரு சங்கீத ஆசிரியை (சங்கீத பூசணம்)திருமதி சண்முகதாசன் ஒரு வீணை வாத்தியக் கலைஞர்; இருவரும் இசையால் இணைந்து நட்புடன் பழகியவர்கள்
ஒரு காலத்தில் எனது அம்மா அண்ணாமலையிலிருந்து (பல்கலைக் கழகம் ) வந்திருந்த காலப் பொழுதில் - எனது தாயாரின் குரலில் அன்பு கொண்ட அவர் என் அம்மாவை வீட்டுக்கு இடையிடையே அழைத்து பாடும்படி கேட்பதுண்டு .
இவர் பாடும்போது பெரியார் சண்முகதாசன் வந்து சில பாடல்களைப் பாடக் கேட்பதாக அம்மா சொல்வார்.கேட்பதாக அம்மா சொல்வார்.
தண்டபாணி தேசிகரின் - தாமரைப் பூத்த தடாகமடி - பெற்ற தாயை மக மறந்தாலும் - இன்பக் கனா ஒன்று கண்டேன் மற்றும் தலை வாரிப் பூச்சூடி - தெருவில் வாராண்டி - போன மச்சான்( பீ லீலா பாடியது ) போன்ற பாடல்களை "அவரும் அவவும்- இவவைப்" பாடச் சொல்லி அடிக்கடி கேட்பதாக எனது தாயார் சொல்லியிருக்கிறார்.
தெருவில் வாராண்டி (யூ வீ இரத்தினம் பாடியது ) -என்ற பாடல் தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளாருக்கும் பிடித்த பாடல் என்று சொல்வார்கள்.
நண்பர் பாலன் என்னை முதலில் ஒரு பிரமுகரைப் பேட்டி எடுக்க வேண்டும் .உதவி செய்வாயா என்று கேட்டார். யார் என்று கேட்டேன்.
ஆளைச் சொன்னால் தான் செய்வாயா; பயப்படுகிறாயா ? என்று கேட்டார்.
நான் பகிடியாகச் சொன்னேன்- ஒளிப்பதிவு நிகழ்ச்சி ஒன்று தானே செய்யப் போகிறாய் -வேறு ஒன்றுமில்லைத்தானே ? என்றேன்..
"உனக்கு எங்களில் ஒரு பகிடி என்ன " என்றார்.
எனக்கு ஒரு நல்ல ஆலோசகனாக சிறுவயது முதல் ஒரு சகோதரம் போன்று பழகியவன் பாலன். (பழகியவன் என்பதே எனக்கு இயல்பாக வருகிறது -மன்னிக்கவும்)
நான் என்ன பகிடி சொன்னாலும் பார்த்துக் கொண்டே இருப்பார்..
"சரி என்ன சொல்லுறாய் செய்வியா இல்லையா? " என்று கேட்டார்.
"தமிழ் தெரிந்தவங்கள் வேண்டாம் உனக்கும் பிரச்சினை" ..என்றும் பாலன் சொன்னார்.
நான் என்னுடன் பணியாற்றும் வேறு மொழி பேசும் ஒளிப்பதிவாளர்களை நாட விரும்பவில்லை.
அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று(மொழி) விளங்காவிடில் அது பிற காலத்தில் எனது தொழில் நிறுவனத்தில் பிரச்சினையாகிவிடும் என்பதாலும் - வேறு இடத்தில் ஒழுங்கு செய்ய விரும்பினேன்.
நண்பர் சீவகன் அப்பொழுது வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஊடகத்துறையில் எம் ஏ முடித்து வந்திருந்தார்.
"உமக்கு ஒரு நல்ல கூட்டாளியைக் காட்டி விடுகிறேன்" என்று சீவகனை எனக்கு அறிமுகம் செய்தவர் மறைந்த தினமுரசு ஆசிரியரும் மூத்த ஒலி பரப்பாளருமான இரா பத்மநாதன் அங்கிள் அவர்கள்.
அது ஒரு நல்ல அறிமுகமாக இருந்தது. நாம் அடிக்கடி சந்திப்போம் . காரணம் - அவருடன் தொலைக் காட்சி -சினிமா பற்றிப் பேசுவது என்பது எனக்கு விருப்பமான தாக இருந்தது.
சீவகனின் துணைவியார் நான் ஐ ரி என் னில் தயாரித்த புத்தாண்டு சிறப்பு விவரணத்தில் தொகுப்பாளராக பங்குபற்றினார் . இதன் பிரதியை எழுதியவர் இரா பத்மநாதன் அவர்களே.
சீவகனிடம் இந்த ஒளிப்பதிவு பற்றிக் கேட்டேன். ஒழுங்கு செய்யலாமே என்றார்.
அவரது நண்பர் ஒருவர் ஒளிப்பதிவு செய்தார். சீவகன் ஒளியமைப் பிலும் ஒளிப்பதிவிலும் கலந்து கொண்டார் .
அந்தப் பேட்டியை ஒரு விவரணமாக பாலன் செய்ய விரும்பியதால் இருவரையும் எடுக்கும் shot கள் Crossing the line போன்ற வழுக்கள் கமராவிலும் ஒளியமைப்பிலும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதில் எனது கவனத்தை நான் செலுத்தி ஒளிப்பதிவை நாம் செய்தோம்.
சண் அவர்கள் சுகயீனமுற்றிருந்தாலும் பாலன் கேட்ட பல வினாக்களுக்கும் ஆழமாகவும் அமைதியாகவும் பதில்களைச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
அந்நேரம் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப் பகுதி . பாலன் பல முக்கியமான கேள்விகளை கேட்டார் .
எந்தவிதமான ஊடகப் பயிற்சியுமில்லாத பாலன் பொதுவாக பேசும்போது அல்லது ஒரு விடயத்தை விளக்கும்போது நீண்ட நேரம் பேசுவது வழக்கம். ஆனால் அந்தப் பேட்டியில் -தனக்குத் தெரிந்த "சோஷலிச சிந்தனைகளை " பேட்டிக்கு மறு கதிரையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் சொல்லாமல் -சின்னச் சின்னக் கேள்விகளாகக் கேட்டு- தோழர் சண் அவர்களிடமிருந்தே பல விடயங்களை எடுத்தார். .எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அருமையாகச் செய்தார்
பாலனைக் கேட்டேன் -பேட்டி எடுப்பது பற்றி எங்கும் வாசித்தாயா ? என்று .
அதற்கும் பாலன் வழமைபோல " நக்கலா உனக்கு ?"
இல்லை அவர் தான் நீண்ட நேரம் கதைத்தார் என்றேன்
"அவரைத்தானே பேட்டி எடுக்க வந்தேன். குறுகிய நேரத்தில் உன்ரை ஆட்களும் போக வேண்டும் ...அவரைத்தானே கதைக்கப் பண்ண வேண்டும் ; என்ன பிழை ? " என்று பாலன் கேட்டதும்
"இல்லை அப்படித்தான் பேட்டி இருக்க வேண்டும் ;நல்லாய்ச் செய்தாய் " என்றும் பாராட்டியதும்
பின்னர் நான் ஆற்றிய தொலைகாட்சிப் பயிற்சிகளில் இந்த அனுபவத்தைச் சொன்னதும் இங்கு குறிக்கத் தக்கவை.
சண் அவர்கள் சொன்ன பதில்கள் யாவும் பிற் காலத்தில் நிகழ்வுகளாய் அமைந்தன ...அவர் சொன்ன பதில்களின் தெளிவிலும் சுவையிலும் அரசியலில் ஆர்வமில்லாத எமது ஒளிப்பதிவாளர் பின்னர் என்னை காணும்போதெல்லாம்- இப்படி ஒரு தலைவரா ஐயா- என்ன அறிவு..என்ன சுத்தம்- அந்த பேட்டியை எடுக்க முடியாதா என்று கேட்பார்.
உண்மையில் இந்த விவரணம் தயாரிக்கபட்டு வெளியில் வந்திருந்தால் தோழர் சண் அவர்களின் முக்கியமான ஒரு விவரணமாகவும் பலரும் இதனைப் பார்த்து தமது சிந்தனைகளிலும் போக்குகளிலும் மாற்றங்களை மேற்கொள்ளக் கூடிய தகவல்கள் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
பாலன் அந்த ஒரு நோக்கத்திற்காகவே இதனைச் செய்திருந்தார் என உணர முடிந்தது.
பாலன் என்னை அடிக்கடி பாராட்டும் ஒரு விடயம்.." நான் கேட்டவுடன் துணிந்து வந்து செய்தாய்:".. என்பதாகும்.
ஆனால் அந்த விவரணம் வரவில்லையே என்பதுதான் கவலை. தோழர் சண்முகதாசனின் புதல்வியார் தான் அங்கு கடைசியாக நடமாடிய ஒருவர். அவரிடம் இருப்பதாகவும் பாலன் ஒருமுறை சொன்ன நினைவு உண்டு.,
இதைவிடப் பகிடி ஒன்று உள்ளது.
நான் இங்கு நியூசீலந்து வந்த பின்னர் பாலன் என்னுடன் லண்டனிலிருந்து பேசும்போது "அடே !நீ சீவகனை சண்ணின் பேட்டிக்குக் கூட்டி வந்தது பற்றிச் சொல்லவேயில்லை ...ஒருவர் சிங்களவர் மற்றவர் தமிழர் என்று சொல்லிவிடாய் என்று சிரித்தார்.
"அபோது நிலைமைகள் கவலைக்கிடம் . நான் யாருடன் வந்தேன் என்பது உனக்கும் தெரியக் கூடாது .நான் யாரிடம் வந்தேன் என்பது அவர்களுக்கும் தெரியாமல் இருப்பது நல்லது அல்லவா? அவர்களும் யார் என்பது உனக்கும் தெரியாமல் இருக்கட்டும் என்றே எல்லாவற்றையும் யோசித்துச் செய்தேன்" என்றேன்.!

No comments:

Post a Comment