Sunday, July 30, 2017

•சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் ஆனால் அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கு!

•சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
ஆனால் அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கு!
இலங்கையில் மக்களுக்கு ஒரு நியாயம். அமைச்சர்களுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இலங்கை அரசின் நியாயமா?
மாணவி வித்யா கொலைக் குற்றவாளி சுவிஸ்குமார் தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ் மாஅதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சட்டப் பேராசிரியர் தமிழ் மாறனின் மாணவர். அமைசச்ர் விஜயகலா வின் அழுத்தத்தினாலே இவர் சுவிஸ்குமாரை தமிழ்மாறனுடன் அனுப்பி வைத்ததாக அறிய வருகிறது.
தற்போது இவருடைய சட்டத்தரணிகள் சுவிஸ்குமாரை மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்தபோது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சென்று காப்பாற்றிய வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
பிரதி பொலிஸ் மாஅதிபரின் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டபடி இதுகுறித்து அமைச்சர் விஜயகலாவிடம் விசாரிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
இந்நிலையில் இன்னொரு பொலிஸ் அதிகாரியான சிறீகஜனை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
நீதிபதி இளஞ்செழியனின் பொலிஸ் பாதுகாவலரை சுட்ட கொலையாளிகூட நீதிமன்றில் இன்று சரணடைந்துவிட்டான்.
ஆனால் பொலிஸ் அதிகாரி சிறீகஜன் சரணடையவும் இல்லை. இன்னமும் கைது செய்யப்படவும் இல்லை.
சட்டவிரோதமாக சிறீகஜனை பாதுகாப்பவர்கள் யார்? அல்லது சிறீகஜனை கைது செய்யாமல் தடுக்கும் அந்த “பவர்புல்” கரங்கள் யாருடையது?
அதுமட்டுமன்றி, சிறீகஜன் நீதிமன்றில் சரணடைந்து உண்மைகளை கூற விரும்பியதாகவும் ஆனால் அதற்குள் அவர் கடத்தப்பட்டு குடோன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்தாகவும் அவர் உயிருக்கு ஆபத்து எற்பட்டுள்ளது என்றும் உறவினர்கள் பக்கத்தில் இருந்து கதை வருகிறது.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்ர் விஜயகலா தன்னை பாதுகாக்க எந்த மட்டத்திற்கும் இறங்குவார்.
அதேவேளை, பிரதி பொலிஸ்மாஅதிபருக்கும் சுவிஸ்குமாருக்கும் பல வருடங்களாக தொடர்பு இருந்திருக்ககூடும் என்றும் இதுபற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி கேட்டுள்ளார்.
அப்படியென்றால் அமைச்சர் விஜயகலா மற்றும் சட்டப் பேராசிரியர் தமிழ்மாறனுக்கும்கூட சுவிஸ்குமார் வியாபாரத்தில் பங்கு இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
பெண்கள் தனியாக பாதுகாப்பாக செல்லும் வரை தன் பணி ஓயப்போவதில்லை என்று நீதிபதி இளஞ்செழியன் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது அவரே அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்றி வெளியில் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
நீதிபதியை கொல்ல முயன்ற கொலையாளிக்கும் மாணவி வித்யா கொலையாளிசுவிஸ் குமாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.
ஆனால் இந்த உண்மைகள் யாவும் மறைக்கப்படுகிறது. மாணவி வித்யாவுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
மண் கடத்தினார்கள் என்ற சந்தேகத்திலேயே பலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
ஆனால் போதை பொருள் கடத்தல் வழக்கில் அமைச்சர் ரியாத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அமைச்சர் விஜயகலா மீது போதிய ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது, இலங்கையில் அமைச்சர்கள்சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என கேட்கத் தூண்டுகிறது?

No comments:

Post a Comment